வவுனியூர் இரா.உதயணன்

தமிழில் சாகித்ய ரத்னா விருதுக்கு பெண் ஆளுமைகள் புறக்கணிக்கப்படுவது ஏன்?

ண்மையில் தி.ஞானசேகரன் எழுதிய சரித்திரம் பேசும் சாஹித்தியரத்னா விருதாளர்கள் என்ற நூல் என் கைகளுக்கு எட்டியது. மிக அருமையான ஒரு நூல்.

சாஹித்திய ரத்னா விருது இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் இலக்கியத்திற்கான உயரிய விருது எனவும் 2002 ஆம் ஆண்டிலிருந்து இந்த உயரிய விருது வருடாவருடம் வழங்கப்பட்டு வருவது பற்றியும் குறிப்பிட்டிருந்தார். இவ்விருதினைப் பெற்றவர்கள் யாவருமே கௌரவத்துக்கும் பெருமைக்கும் பெருமதிப்புக்கும் உரியவர்கள் எனவும் தத்தம் துறைகளில் சாதனைகள் பல புரிந்த ஆளுமைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை பதினேழு ஆளுமைகள் இவ்வுயர் விருதினைப் பெற்றிருக்கின்றனர். இவர்களுள் பதினொருவர் ஆக்க இலக்கியப் படைப்பாளிகள் மற்றைய அறுவரும் ஆய்வாளர்கள்.

தி.ஞானசேகரன் அவர்கள் தனது ‘என்னுரை’ என்ற பகுதியில் சாஹித்தியரத்னா விருதாளர்கள் தேர்வு பற்றிய வாதப்பிரதிவாதங்கள் அவ்வப்போது இலக்கிய உலகில் நடந்து வந்துள்ளமை பற்றியும், இந்த விருதுக்கு பொருத்தமற்றவர்கள் சிலர் தெரிவு செய்யப்பட்டதாகவும் இந்த விருதுக்கு தகுதியுடைய பலர் நிராகரிக்கப்பட்டுள்ள தாகவும் அவர்களில் சிலர் அமரத்துவம் அடைந்து விட்டதாகவும் தகுதியுடையோர் மூப்பின் அடிப்படையில் தெரிவு செய்யப்படாமல் சிலருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதாகவும் அதனால் சர்ச்சைகள் எழுந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். நூலின் பின் அட்டை சாஹித்தியரத்னா விருதுபெற்ற பதினேழு விருதாளர்களின் படங்களையும் தாங்கி வந்துள்ளது.

அந்தப் பின் அட்டையைப் பார்த்த பின்புதான் எனக்குள் பல கேள்விகள் எழத் தொடங்கின. நான் புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்தாலும் இலங்கைக் குடியுரிமை கொண்ட பிரஜை என்ற முறையிலும் எழுத்தாளர் என்ற முறையிலும் பலவற்றை இந்தக் கட்டுரையில் முன்வைக்க விரும்புகிறேன்.

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய பேராசிரியர் செ.யோகராசாவோ அல்லது இந்த நூலை எழுதிய மூத்த படைப்பாளி தி.ஞானசேகரன் அவர்களோ எந்தவொரு இடத்திலும் பன்முக ஆளுமை கொண்ட மூத்த பெண் படைப்பாளிகள் பற்றியோ அவர்களுக்கு இதுவரை காலமும் அதாவது பதினேழு வருடங்களாக ஒருவருக்காவது இந்த உயரிய விருது வழங்கப்படாமை பற்றி குறிப்பிடவோ விவாதிக்கவோ இல்லை என்பது மனவருத்தத்திற்குரிய விடயமாகும்.

2011 ஆம் ஆண்டு சாகித்திய ரத்னா உயர் விருதானது விஜிதா பெர்ணான்டோ (VIJITHA FERNANDO) என்ற சிங்கள பெண் ஆளுமைக்கு வழங்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டு ஜீன் அரச நாயகம் (JEAN ARASANAYAGAM) என்ற தமிழ்ப் பெண்மணிக்கு ஆங்கிலத்திற்காக உயர்விருதான சாகித்திய ரத்னா விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இது இப்படியிருக்க கடந்த 17 வருடங்களாக தமிழுக்கு வழங்கப்பட்ட சாகித்திய ரத்னா விருதானது ஆண் ஆளுமைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்திருக்கிறது. திறமையும் பன்முக ஆளுமையும் கொண்ட பல தமிழ்ப் பெண் படைப்பாளிகள் இருந்தும் அவர்கள் ஏன் புறக்கணிக்கப்பட்டார்கள் என்ற கேள்வி இங்கே எழுகிறது.

அதற்காகவே இந்தக் கட்டுரையை எழுத நான் முன்வந்துள்ளேன். இனிவரும் காலங்களில் தமிழ் ஆளுமைகளுக்காக வழங்கப்படும் உயரிய விருதான சாகித்திய ரத்னா விருதுக்கு பெண் ஆளுமைகளும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதே எனது கட்டுரையின் நோக்கமாகும்.

முக்கியத்துவம் மிக்க ஆளுமைகளில் அன்னலட்சுமி இராசதுரை குறிப்பிடத்தக்கவர். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட சிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளர், விமர்சகர், பேச்சாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர்.

யாழ் நங்கை என்னும் புனைப்பெயரில் எழுதத் தொடங்கிய இவர் 57 வருடங்களுக்கு மேலாக வீரகேசரியில் பணிபுரிந்து வருகிறார். தற்பொழுது வீரகேசரியில் இருந்து வெளிவரும் கலைக்கேசரி ஆசிரியராக 2010 ஆம் ஆண்டிலிருந்து பணிபுரிந்து வருகிறார்.

விழிச்சுடர் (குறுநாவல்), உள்ளத்தின் கதவுகள் (புதினம்), நெருப்பு வெளிச்சம் (சிறுகதைத் தொகுப்பு), இருபக்கங்கள் (கவிதைத் தொகுப்பு), நினைவுப் பெருவெளி (பத்திரிகைத் தொழில் சார்ந்த அனுபவ நினைவுகள்) ஆகிய நூல்களை எழுதியுள்ளார். 1958 ஆம் ஆண்டில் இவர் தனது முதலாவது சிறுகதையை ‘யாழ்நங்கை’ என்னும் புனைபெயரில் தினகரனில் வெளியானபோது தினகரன் ஆசிரியராகவிருந்தவர் பேராசிரியர் கைலாசபதி அவர்கள். அக்காலத்தில் திரு சிற்பி சரவணபவனால் வெளியிடப்பட்ட ‘கலைச்செல்வி’ என்னும் கலை இலக்கிய மாத சஞ்சிகையின் முதல் இதழில்இவரது படைப்பு முதலாவது அறிமுகமானது.

பின்னாளில் எழுத்தாளர்களாகப் புகழ்பெற்ற மாஸ்டர் சிவலிங்கம், அந்தனி ஜீவா, அன்ரனி இராசையா, அன்ரனி பெர்ணான்டோ மற்றும் பிரபலமாகவிருந்த அமரர்.க.நீலகண்டன் ஆகியோர் அக்காலத்தில் வீரகேசரியின் ஒரு பதியாகவிருந்த மாணவர் கேசரிக்கு அன்னலட்சுமி இராஜதுரை பொறுப்பாகவிருந்த காலத்தில் எழுதத் தொடங்கியவர்கள் என்றால் மிகையாகாது.

1973 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை ‘மித்திரன்’ வாரமலர் பத்திரிகையின் பொறுப்பாசிரியராகக் கடமைபுரிந்தார். இக்காலக்கட்டத்தில் செங்கை ஆழியான், ச.முருகானந்தன், காவலூர் ஜெகநாதன், ஆனந்தி, கோகிலா மகேந்திரன் உட்பட பல எழுத்தாளர்கள் மித்திரன் வாரமலரில் எழுதினார்கள். பெண் எழுத்தாளர்களின் படைப்புக்கள் இதில் வெளிவரவும் இவர் ஊக்கமளித்தார்.

இவரால் எழுதப்பட்ட ‘உரிமை’ என்ற சிறுகதை எழுத்தாளர் மடுளுகிரிய விஜேரத்னவினால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அவர் வெளியிட்ட சிங்களத் தொகுப்பு நூலுக்குர ”உருமய” என்ற பெயரே தலைப்பாக இடப்பட்டது. கலாசார திணைக்களம் வெளியிட்ட ஒரு தாய் மக்கள் என்னும் நூலில் மூன்று எழுத்தாளர்களின் ஆங்கிலச் சிறுகதைகள் இவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன.

திருமதி.அன்னலட்சுமி இராசதுரை அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையிலும் மகளிர் நிகழ்ச்சி, உரை நிகழ்ச்சி, உரைச்சித்திரம் போன்றவற்றினை எழுதி அவற்றில் பங்கு கொண்டவர்.

1994 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டுவரை பி.பி.சி நடாத்திய இலங்கைக்கடிதம் என்னும் நிகழ்ச்சியில் பங்குபற்றி அதனை மாதா மாதம் எழுதி தொகுத்து வழங்கிப் பெயர்பெற்றார்.

இவரால் இயற்றப்பட்ட இரு மெல்லிசைப் பாடல்கள் இசையாக்கம் பெற்று ‘இயற்கை அன்னை நீயே உன்னை இறைஞ்சுகிறேன் தாயே’ என்னும் பாடல் அருமைநாயகம் என்பவராலும் என் நெஞ்சிலே ஒரு ராகம், என் கண்ணே அனுராகம் என்னும் பாடல் முத்தழகு அவர்களாலும் பாடப்பெற்று ஒலிபரப்பாகின.

பத்திரிகை  தொழில் ரீதியாக இவர் 1982 ஆம் ஆண்டு எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் (OPEC) பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டவர். 1995 ஆம் ஆண்டு சீனப் பயணத்தை மேற்கொண்டு உலகப் பெண்கள் மாநாட்டில் இலங்கை அவதானிகளில் ஒருவராகக் கலந்துகொண்டவர். 2005 ஆம் ஆண்டு சென்னைப் பயணம் மேற்கொண்டு கவிஞர் மு.மேத்தா, திரைப்படக்கவிஞர் சினேகன், திரைப்பட இயக்குனர் சேரன், எழுத்தாளர் அனுராதா ரமணன், கவிஞர் வைகைச்செல்வி, திரைப்படப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் ஆகியோரையும் இன்னும் பலரையும் பேட்டி கண்டு வீரகேசரியில் எழுதியவர். 2010 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் உலகத்தமிழ் மாநாட்டில் அவதானியாகக் கலந்துகொண்டு அவ்விடயம் குறித்து வீரகேசரியில் தொடர்கட்டுரைகள் எழுதியவர்.

மேடைப்பேச்சில் வல்லமை கொண்ட இவரது இலக்கியம் பற்றிய உரைகள் இலங்கை ரூபவாகினி, சக்தி, வசந்தம் போன்ற டிவிக்களில் ஒளிபரப்பப்பட்டுள்ளன.

இவருக்கு பல கௌரவங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 1992 ஆம் ஆண்டு தமிழ்மணி விருது இந்து கலாசார ராஜாங்க அமைச்சினால் வழங்கப்பட்டது. 1993 ஆம் ஆண்டு சிறந்த பத்திரிகையாளருக்கான எஸ்மண்ட் விக்கிரமசிங்க விருது ஜனாதிபதி டி.பி.விஜேதுங்கவினால் வழங்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆய்வுமையம், பிரதி அமைச்சர் இஸ்புல்லாஹ் தலைமையில் சம்மாந்துறையில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தது. 2002 ஆம் ஆண்டு இலங்கை பத்திரிகையாளர் சங்கம் நீண்டகால சிறந்த பத்திரிகை சேவைக்காக தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்தது. 2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அவர்களது வருடப்பூர்த்தியை முன்னிட்டு பெண் பத்திரிகையாளருக்கு வழங்கப்பட்ட கௌரவ நிகழ்வில் தமிழ்ப் பத்திரிகையாளருக்கான கௌரவம் இவருக்கு வழங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் தமிழில் விருது வழங்கி கௌரவித்தது. 2015 ஆம் ஆண்டு இலங்கை வானொலி மற்றும் கொடகே சகோதரர்கள் (பிறைவேட்) லிமிட்டேட் இணைந்து நடாத்திய கௌரவிப்பு நிகழ்வில் கலை, இலக்கியத்துறை யிலும், ஊடகத்துறையிலும் பெரும்பணி ஆற்றியமைக்காக பாராட்டும் கௌரவிப்பும் வழங்கப்பட்டது. இது தவிர இவருக்கு இன்னும் பல அமைப்புக்களும் சங்கங்களும் கௌரவம் வழங்கியிருப்பது பற்றி பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். 1939 ஆம் ஆண்டு பிறந்த அன்னலட்சுமி இராஜதுரை அவர்கள் பன்முக ஆளுமைமிக்க சிறந்த படைப்பாளி என்பதை அவரைப்பற்றிய விரிவான மேற்குறிப்பிட்ட ஆக்கத்திலிருந்து கலாசார அமைப்பு முதல் மற்றைய அனைத்து அமைப்புக்களும் புரிந்துகொள்ளலாம்.

அடுத்ததாக 1934 ஆம் ஆண்டு பிறந்த திருமதி.பத்மா சோமகாந்தன் பன்முக ஆளுமைமிக்க ஒரு பெண்மணி. இவரும் கூட ஒரு எழுத்தாளர் மட்டுமல்லாது சிறந்த பேச்சாளரும், விமர்சகரும், ஆய்வாளரும் கூட.

இவரது பல படைப்புக்கள் நூலுருவம் பெற்றுள்ளன. கடவுளின் பூக்கள் சிறுகதைத்தொகுதி லில்லி தேவசிகாமணி பரிசு பெற்றது. இவர் எழுதிய ‘வேள்வி மலர்கள்’ சிறுகதைத் தொகுப்பு சென்னை ‘இந்து’ நாளிதழ் பாராட்டைப் பெற்றது. இவர் எழுதிய ‘புதிய வார்ப்புகள்’ சிறுகதைத் தொகுதி சார்க் மகளிர் சங்கப் பரிசு பெற்றதுடன் ‘கரும்பலகைக் காப்பியங்கள்’ சிறுகதைத் தொகுப்பும் அதே பரிசைப் பெற்றது. வடகிழக்கு மாகாணம் பண்பாட்டமைச்சின் பரிசு பெற்ற ‘இற்றைத் திங்கள்’ சிறுகதைத் தொகுப்பு யாழ் இலக்கிய வட்டத்தின் சிறந்த நூலுக்கான பரிசையும் தட்டிக்கொண்டது.

‘ஈழத்து மாண்புறு மகளிர்’ நூலானது பல்துறைகளிலும் முன்னணி வகித்து வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை மகளிர் பற்றிய கட்டுரைகள் நிரம்பிய நூலாகும். இந்நூலானது இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசு பெற்றது.

பத்மா சோமகாந்தன் எழுதிய ‘ஈழத்துத் தமிழ்ப் பெண் ஆளுமைகள்’ நூலானது மறைந்த முக்கிய பெண் ஆளுமைகள் 15 பேரைப் பற்றியது.

இவரது ‘அனுமான் கதை’ என்ற படைப்பு சிறுவர்களுக்காக எழுதப்பட்டது. முதன்முதலாக தமிழ்மொழியில் எழுதப்பெற்ற ‘சுவாமி சின்மயானந்தர்’ நூல் அவரது வாழ்க்கை பற்றிய வரலாற்று நூலாகும். ‘நெஞ்சுக்கு நிம்மதி பதில் தருகிறார். பத்மா’ என்ற நூல் இளைஞர்களின் ஐயங்களுக்கும் கேள்விகளுக்குமான பதில்களைக் கொண்ட நூலாகும். இவர் பாராமுகங்கள் சில பார்வைகள் என்ற படைப்பையும் படைத்துள்ளார்.

இவரது கதைகளும் கட்டுரைகளும் சுதந்திரன், கலைச்செல்வி, தாமரை, பெண்ணின் குரல், வீரகேசரி, தமிழன், கல்கி, சொல், ஈழகேசரி, சமூகத்தொண்டன், ஞானம், சங்கத்தமிழ், தினகரன், உதயன், மல்லிகை, ஓலை, புதுமை இலக்கியம், காலைக்கதிர், அகவிழி, தினபதி, ரமணி அஞ்சலி, இலங்கை விகடன் வரதர் ’80’, தினக்குரல், கலாஜோதி, நிவேதினி, மங்கை, செங்கதிர், Voice of Chinmaya போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.

Garland of Fifty Flowers (அ.உ.சின்மயாமிஷன் தலைவர் சுவாமி தேஜோ மாயானந்தரின் கேள்வியும் பதில்களும் கொண்ட தொகுப்பு மொழிப்பெயர்ப்பு நூலாகும்.)

தினகரன் வாரமஞ்சரியில் ‘வண்ணமலர்’ என்ற தலைப்பில் புதுமையான தொடர்கதையை அன்று பிரபலம் பெற்றிருந்த கே.டானியல் பத்மா சோமகாந்தன், காவலூர் இராசதுரை, உதயணன், ஈழத்து சோமு, N.ஓ.ரகுநாதன் ஆகியோர் இணைந்து ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒவ்வொருவராக எழுதினார்கள்.

திருமதி.பத்மா சோமகாந்தன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணையில் பிறந்தவர். அரச பணியில் உயர் பதவி வகித்த பத்திரிகையாளர், எழுத்தாளர், கட்டுரையாளர், பேச்சாளர், மலராசிரியர், நூலாசிரியர், விமர்சகர், இலக்கியச் செயற்பாட்டாளர் எனப் பன்முகம் கொண்ட பிரம்மஸ்ரீ நாகேந்திரக் குருக்கள் சோமகாந்தனைத் திருமணம் செய்தார். உதவி ஆசிரியராகப் பதவியேற்று பகுதித் தலைவராகவும் பின் முதலாம் தர அதிபராகவும் ஓய்வு பெறும்வரை கல்விப்பணியில் ஈடுபட்டார். உதவிக் கல்விப்பணிப்பாளராக பதவி உயர்வு கிடைத்தும் கணவரின் சுகயீனம் கருதி ஓய்வு பெற்றார்.

திருமதி.பத்மா சோமகாந்தன் அவர்கள் கொழும்பு இந்து மாமன்றத்தின் செயற்குழு உறுப்பினராகவும், நூலகச் செயலாளராகவும், கொழும்பு சாரதா சமிதியின் அகில இலங்கை கட்டுரைப்போட்டிப் பொறுப்பாளராகவும், கொழும்பு இந்து மகளிர் மன்றத்தின் உபதலைவியாகவும், செயற்குழு உறுப்பினராகவும் கடமையாற்றியவர். கொழும்புத் தமிழ்சங்கத்தின் கல்விச் செயலாளராகவும், உறுப்புரிமைச் செயலாளராகவும் , உபதலைவியாகவும் பதவி வகிப்பவர். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை மற்றும் நாவலர் நற்பணிமன்றம் ஆகியவற்றின் உதவிச் செயலாளராக பணிபுரிந்தவர். விழுது மனித மேம்பாட்டுக்கான மையத்தின் ஊடகத் துறையில் பெண்கள் அமைப்பின் தலைவியாகவும், ஒளவை இலக்கிய வட்டத்தின் தலைவியாகவும் பணிபுரிந்தவர். அகில இலங்கை அரச எழுத்தாளர் மன்றத்தின் உபதலைவியாகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவியாகவும் பணிசெய்தவர். அகில உலக சிற்றிதழ் சங்கக் கொழும்புக் கிளையின் தலைவியாகவும், இலங்கை சின்மயா மிஷன் நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினராகவும் செயற்பட்டவர்.

2004 ஆம் ஆண்டு கனடா உதயன் பத்திரிகையின் 10 ஆவது ஆண்டு விழாவிற்கு திருமதி பத்மா சோமகாந்தனையும், அவரது துணைவரையும் கௌரவ விருந்தினராக அழைத்திருந்ததால் அம்மாபெரும் விழாவில் பேசும் வாய்ப்புக் கிட்டியது.

இது தவிர திருமதி.பத்மா சோமகாந்தன் பல ஆய்வுகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சுவாமி விவேகானந்தரின் சிக்காக்கோ சொற்பொழிவு நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது நடாத்திய ஆய்வுக் கட்டுரைப் போட்டியில் 1 ஆம் பரிசாக தங்கப்பதக்கமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

கொழும்பு பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் தேவைக்காக ‘தமிழ்நிலை சிந்தனையில் ராஜம் கிருஷ்ணன் நாவல்கள்’ என்ற ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். 1996 ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் சார்பில் இடம்பெற்ற இலக்கிய விழாவில் சிறுவர் இலக்கியம் பற்றிய ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டில் கொழும்பில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடாத்திய இலக்கிய மாநாட்டில் வடமாகாணத்தைச் சேர்ந்த சிறுகதை இலக்கியம் பற்றிய ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்தார். கொழும்புத் தமிழ் சங்கத்தில் இடம்பெற்ற சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் அரைநாள் மகளிர் அரங்க மங்களம்மாள் அரங்கை ஒழுங்கு செய்து முழுப்பொறுப்பினையும் ஏற்று சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை, விமர்சனம் எனப் பல ஆய்வு முயற்சிக்கு தலைமையேற்று செயற்பட்டவர். இவ்வாறு பத்மா சோமகாந்தன் தமிழ் உலகிற்கு எண்ணிலடங்கா கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.

அறிதல், ஆக்குதல், பகிர்தல் உலகில் இனமொழி, பாலினம் கடந்து மானிடம் பாடும் பெண் படைப்பாளிகளின் எழுத்துக்களை வரவேற்று கௌரவிக்கும் விழா சென்னை மைலாப்பூர் பாரதி வித்தியாபவன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இலங்கையின் மூத்த எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் உட்பட பெண் படைப்பாளிகளான திலகவதி, வைகைச் செல்வி திலகபாமா ஆகியோருக்கும் கௌரவமும் பாராட்டும்.

பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் 1956 ஆம் ஆண்டு பிறந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழை சிறப்புப் பாடமாகப் பயின்று தனது இளங்கலை, முதுகலை, கலாநிதி பட்டங்களைப் பெற்றவர். கிழக்கு பல்கலைக்கழகத்தில் மொழித்துறையில் தமிழ் முதுநிலை விரிவுரையாளராகவும் முதுகலைப்பட்ட இணைப்பாளராகவும் பணியாற்றுகிறார். சங்க இலக்கியம், நவீன தமிழ் இலக்கியம், பெண்ணிய விமர்சனம், நாடக இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார். இத்துறை சார்ந்த பல கட்டுரைகளையும எழுதியுள்ளார். பேராசிரியர் கா. சிவத்தம்பியின் Drama in Ancient Tamil Society என்ற ஆங்கில நூலை பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம் என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.

மட்டக்களப்பில் இயங்கும் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலைய த்தினால் வெ ளியிடப்படும் சஞ்சிகையான ‘பெண்’ சஞ்சிகைக்கு இவர் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

இலங்கையில் இருந்து வெளிவரும் நிவேதினி பால்நிலை கற்கை நெறி சஞ்சிகை உட்பட பல சஞ்சிகைகளுக்கு பெண்ணியம் தொடர்பான பல கட்டுரைகளை பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ் எழுதியுள்ளார்.

பேராசிரியர் கா. சிவத்தம்பியின் Drama in Ancient Tamil Society  என்ற ஆங்கில நூலை பண்டைய தமிழ் சமூகத்தில் நாடகம் என்னும் தலைப்பில் மொழிபெயர்ப்பு செய்தமைக்காக பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸிற்கு தமிழ்நாடு மாநில அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பிற மொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் எனும் வகையில் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

இவர் குமரன் புத்தக வெளியீட்டு நிலையத்தினூடாக வெளியிட்ட ‘ஈழத்து தமிழ் நாடக அரங்கப் பாரம்பரியம்’ எனும் நூல் 2007 ஆம் ஆண்டு வெளிவந்தது.

‘சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும்’ எனும் நூல் 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது. பண்டைய தமிழ் சமூகத்தில் நாடகம் எனும் நூல் 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது.

பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு

மட்டக்ளப்பைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், ஆய்வாளர் இவரது தந்தை கந்தையா தாய் மகேஸ்வரி. இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட்டம்பெற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், நெதர்லாந்திலுள்ள ஹேக் சமூகக் கற்கை நிறுவனம் முதலியவற்றில் உயர் பட்டங்களைப் பெற்றார். பெண்களும் அபிவிருத்தியும் தொடர்பான ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார்.

இவர் எழுத்தாளர், கவிஞர், ஆய்வாளர், பேச்சாளர், கல்வியியலாளர், பெண்கள் சஞ்சிகைகளின் ஆசிரியக் குழு உறுப்பினர், நூலாசிரியர், தொகுப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர், பெண்கள் அமைப்புக்களின் நிறுவுர், சோசலிஷப் பெண்ணிலைவாதி, சமூக சேவகி எனப் பண்முகப் பணிகளிலீடுபட்டு அவற்றில் தனது ஆளுமை அறிவை வெளிப்படுத்தி வருகின்றார்.

எழுத்துத் துறையில் இலக்கியம் விமர்சனம், பெண்ணிலைவாதம், பண்பாட்டு ஆய்வு, நாட்டார் வழகாற்றியல் சார்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வருகின்றார். இவர் சித்ரா, சங்கரி, ரோகினி, பர்வத குமாரி, மும்தாஜ், காஞ்சனா முதலான புனைபெயர்களில் கவிதைகளையும் பெண்ணிய ஆக்கங்களையும் படைத்து வருகின்றார்.

இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றி இலக்கிய நிகழ்வுகளான படையல், கலைக்கோலம் முதலான நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித் துள்ளார். 1976 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் 1993 ஆம் ஆண்டிலிருந்து கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். இவர் சிந்தனை பிரவாதம், பெண்ணின் குரல், பெண் முதலான இதழ்களில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம், பெண்ணிலைச் சிந்தனைகள், இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம், பாரதியும் பெண்களும் காலம் கருத்து இலக்கியம் ஆகிய ஆய்வுத்துறை நூல்களை எழுதியும் சொல்லாத சேதிகள், சிவரமணி கவிதைகள், உயிர் வெளி ஆகிய கவிதை நூல்களைத் தொகுத்தும், இலங்கையில் இனத்துவமும் சமூகமாற்றமும் என்னும் நூலை தமிழில் மொழிபெயர்த்தும் வெளியிட்டுள்ளார்.

கலாபூஷணம் நயீமா சித்தீக்

ஒரு மலையகப் பெண்படைப்பாளி. இலங்கையின் தமிழ் இலக்கியப் பரப்பில் சிறுகதைத் துறையில் விசாலமான பங்களிப்பைச் செய்தவர். சமுதாய அவலங்களையும் மூட நம்பிக்கைகளையும் தத்ரூபமாகச் சித்தரிக்கும் இவரது பாங்கு அலாதியானது. மலையகத்தில் சுமார் அறுபது வருட கால இலக்கிய வரலாற்றில் மிகவும் காத்திரமான இலக்கியப் பங்களிப்புச் செய்த ஒரு சில எழுத்தாளர்களில் நயீமா சித்தீக்கும் குறிப்பிடத்தக்க ஒருவராவார். எழில் கொஞ்சும் மலையகத்தின் இலக்கிய வானிலே நீண்ட காலமாக எழுதிவரும் முன்னணி பெண் எழுத்தாளர் முஸ்லிம் பெண் படைப்பாளிகளிடையே தனக்கென தனி முத்திரையைப் பதித்துக்கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியை மட்டுமல்லாது நூல்கள் பல தந்த நூலாசிரியையும் கூட.

பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த எழில் கொஞ்சும் சீதள நகரான ஹப்புத்தளையைப் பிறப்பிடமாகவும் கம்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஹப்புத்தளையைச் சேர்ந்த முஹம்மது பஷீர் மரிக்கார் தாஜ் பீவி தம்பதியின் அன்பு மகளாவார்.

இவர் பேராதனைப் பல்லைக்கழகத்தில் பொது கலைமாணிப் பட்டப் படிப்பையும் திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் டிப்ளோமாவையும் ஊடகத்துறை டிப்ளோமா பட்டத்தையும் கற்றுத் தேர்ந்தார்.

1960 களில் 7 ஆம் வகுப்பில் கற்கும்போது ‘கல்வி’ எனும் தலைப்பில் இவர் எழுதிய முதல் ஆக்கத்தை தினகரன் பத்திரிகை பிரசுரித்தது. அதனைத் தொடர்ந்து தொடர் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் உருவகக் கதைகள், குட்டிக் கதைகள், நாவல் என இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் இவர் முனைப்புடன் ஈடுபட்டார். 1970 ஆம் ஆண்டில் ஆசிரியையாக நியமனம் பெற்ற இவர் இலங்கையின் பல பாகங்களிலும் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது சிறுகதைகளை பொதுவாக இலங்கையின் எல்லாத் தமிழ் வெளியீடுகளும் பிரசுரித்தன. கட்டுரைகள் பல நூற்றுக்கணக்காக வெளிவந்தன. அவ்வப்போது கவிதைகளையும் எழுதியுள்ளார்.

இவர் 1975 ஆம் ஆண்டு ‘வாழ்க்கைப் பயணம்’ என்ற நாவலை எழுதினார். இது வீரகேசரி பிரசுர வெளியீடாக வெ ளிவந்தது. இவர் எழுதிய ‘வாழ்க்கைச் சுவடுகள்’ என்ற முதலாவது சிறுகதைத் தொகுதி 1989 ஆம் ஆண்டு கல்ஹின்னை தமிழ் மன்ற வெளியீடாக வெளிவந்தது.

2004 ஆம் ஆண்டு ‘வாழ்க்கை வண்ணங்கள்’ எனும் சிறுகதைத் தொகுதியும் மணிமேகலைப் பிரசுரமாக ‘வாழ்க்கை வளைவுகள்’ எனும் சிறுகதைத் தொகுதி 2005 ஆம் ஆண்டும் வெளிவந்தது.

இது தவிர ஆயிரம் வினாக்களும் விடைகளும் என்ற தமிழ் பாட நூலையும் சீறாப் புராணம், நபி அவதாரப் படலம் எனும் தமிழ் பாடநூலையும் எழுதியுள்ளார்.

இலக்கியப் பணிகளுக்காக நயீமா சித்தீக் பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

நஜ்முல் அகீப் (இலக்கியத் தாரகை) எனும் பட்டத்தை 1991 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் வழங்கிக் கௌரவித்தது.

சிறுகதை செம்மணி எனும் பட்டத்தை 2004 ஆம் ஆண்டு சிந்தனை வட்டம் வழங்கிக் கௌரவித்தது.

இலங்கை அரச விருதான கலாபூஷணம் விருது 2005 ஆம் ஆண்டு கலாசார அமைச்சினால் வழங்கப்பட்டது.

2002 இல் அகில உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டுக் கௌரவம் கிடைக்கப் பெற்றது. 2013 ஆம் ஆண்டு தெமட்டகொடை வை.எம்.எம்.ஏ. பேரவையும் கொழும்புத் தமிழ்ச் சங்கமும் இணைந்து இலக்கிய ஆளுமை விருதை வழங்கிக் கௌரவித்தது.

இதே 2013 ஆம் ஆண்டு கொடகே விருது கொடகே நிறுவனத்தால் வழங்கப்பட்டது.

இது தவிர அவ்வப்போது பல்வேறு சந்தர்ப்பங்களில் பொன்னாடை, பொற்கிழி விருது என்பன வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இவர் எழுதிய வாழ்க்கைப் பயணம் என்ற நாவல் அதிகமானோரால் வாசிக்கப்பட்ட பலராலும் பாராட்டப்பட்ட நாவலாகும். வீரகேசரி வெளியீடாக வெளிவந்த இந்த நாவலின் அனைத்துப் பிரதிகளும் விரைவில் விற்பனையாகிவிட்டன.

ஆமாம், மலையகத்தின் மூத்த படைப்பிலக்கியவாதியான நயீமா சித்தீக் அவர்கள் எமது இலக்கியச் சொத்தாகும். தனது இறுதி மூச்சுவரை எழுதுவேன் என்று கூறும் நயீமா சித்தீக் அவர்கள் இலக்கிய தாரகை மட்டுமல்ல இலக்கிய உலகின் மின்னும் தாரகையாகும். இவர் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து இலக்கிய உலகிற்கு இன்னும் பல நூல்களைப் பரிசளிக்க வேண்டும் என்பது எமது ஆசையாகும்.

கோகிலா மகேந்திரன்

1950 இல் பிறந்த யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரின் தந்தை செல்லையா சிவசுப்பிரமணியம் சமய எழுத்துக்காக சாகித்திய விருது பெற்றவர். கோகிலா மகேந்திரன் பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி. 1974 இல் யாழ்ப்பாணம் பொலிகண்டித் தமிழ்க் கலவன் பாசாலையில் விஞ்ஞான ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி 1994 இல் அதிபராகப் பதவி உயர்வு பெற்று 1999 இல் அதே கல்விப் புலத்தில் பிரதிப் பணிப்பாளராக உயர்ந்து தனது தொழிலில் உச்ச நிலையை அடைந்தவர்.

கல்வித் துறைக்கு சமாந்தரமாக உளவியல் பற்றியும் உளவளத்துணை பற்றியும் மனவடுவுக்கு அளிக்கப்படும் உளச்சிகிச்சை பற்றியும் கற்றவர். அரச பணியில் இருந்த காலத்திலேயே எழுத்துப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதோடு நாடகத் துறையையும் முறையாகக் கற்று நாடக ஆசிரியர் தரப் பரீட்சையில் தேர்வு பெற்றவர்.

1972 இல் குயில் சங்சிகையில் வெளியான அன்பிற்கு முன்னால் என்பது இவரது முதலாவது சிறுகதையாகும. மொத்தம் 76 சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். இக்கதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை இவரது ஆறு சிறுகதைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவற்றுள் பிரசவங்கள், ‘வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம் ஆகிய இரு தொகுதிகளும் தேசிய சாகித்திய விருது பெற்றவை. பின்னைய நூல் வட கிழக்கு மாகாண இலக்கிய விருதினையும் வென்றிருந்தது.

ஈழநாடு பத்திரிகையிலும் ‘சுடர்’ சஞ்சிகையிலுமாக இவரது பலகுறுநாவல்கள்,

துயிலும் ஒரு நாள் கலையும், தூவானம் கவனம் ஆகிய இரு நாவல்களும் நூலுருப் பெற்றுள்ளன.

நாடகங்களில் குயில்கள் கிரேக்கத்தின் தொல்சீர் அரங்கு, அரங்கக் கலையின் ஐம்பதாண்டு ஆகிய மூன்றும் பனுவல்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவர் விஞ்ஞானக் கதைகள் என்ற அறிவியல் புனைகதை நூல் ஒன்றையும் எழுதியுள்ளார்.

கோகிலா மகேந்திரன் பெண்ணியம் பற்றிய கருத்தியல் மாற்றத்தை ஏற்படுத்தியவர். பெண்ணியக் கருத்துக்களை தனது சிறுகதைகளிலும் நாவல்களிலும் வெளிப்படுத்துவதில் வெற்றி கண்டவர்.

இலங்கை வானொலியில் பூவும் பொட்டும், இசையும் கதையும், நவசக்தி, கலைக்கோலம், இளவேனில் போன்ற வானொலிசார் நிகழ்வுகள் பலவற்றில் இவர் பங்குபற்றியுள்ளார்.

கேள்விகளின் முழக்கம் எனும் இவரது நாடகம் வட இலங்கை சங்கீத சபையின் நாடக கலாவித்தகர் என்ற பட்டத்தினை இவருக்கு ஈட்டிக்கொடுத்தது. இது தவிர மேலும் 23 நாடகங்களை இவர் எழுதி இயக்கியும் உள்ளார்.

இவரது பல நூல்கள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. Child Mental Health உள்ளக் கமலம், எங்கே நிம்மதி, கலைப் பேரரசு ஏ.ரி.பி. அரங்கக் கலையில் ஐம்பது ஆண்டு, கிரேக்கத்தின் தொல்சீர் அரங்கு,, குயில்கள், சிறுவர் உளநலம், சின்னச் சின்னப் பிள்ளைகள், தங்கத் தலைவிதி, துயிலும் ஒருநாள் கலையும், தூவானம் கவனம், பாவலர் துரையம்பாபிள்ளை, பிரசவங்கள், மகிழ்வுடன் வாழ்தல், மல்லாகத்தின் வரலாறும் அதன் அபிவிருத்தியும், மனக்குறை மாற வழி, மனம் எனும் தோணி, மனச்சோர்வு, முகங்களும் மூடிகளும் சிறுகதைகள், முற்றத்தில் சிந்திய முத்துக்கள், வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம், விஞ்ஞானக் கதைகள், விழிமுத்து ஆகியவையாகும். இத்தனை நூல்களையும் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதிய கோகிலா மகேந்திரனை பன்முக ஆளுமை மிக்க பெண்கள் வரிசையில் இருந்து தவிர்த்துவிட முடியாது.

அசோகாம்பிகை யோகராஜா

1949 ஆம் ஆண்டில் பிறந்தவர். மட்டக்களப்பு மண்டூரைச் சேர்ந்த எழுத்தாளர். 1977 இல் ஆசிரியர் சேவையில் இணைந்து மண்டூர் மகா வித்தியாலயத்தில் பணி தொடங்கினார். மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்ற இவர், மட்டக்களப்பு பிரதேசத்தில் பல பாடசாலைகளில் பணியாற்றி இறுதியாக மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் பணியாற்றி 2009 இல் ஓய்வு பெற்றார்.

1970 களில் எழுதத் தொடங்கிய இவர் ‘மண்டூர் அசோகா’ என்ற புனைப்பெயரால் நன்கறியப்படுகிறார். ரேவதி, செந்தில் பிரியா, ஆகிய புனைபெயர்களிலும் எழுதி வந்துள்ளார்.

வீரகேசரி, தினகரன், தினபதி, மித்திரன், ஜோதி, தென்றல், தாய்நாடு, சுடர், தினக்குரல், ஞானம், இருக்கிறம் போன்ற பல்வேறு இதழ்களில் எழுதியுள்ளார். இலங்கை வானொலிக்கு ஆக்கங்கள் எழுதியுள்ள இவர் வானொலி மெல்லிசை நிகழ்ச்சிகளுக்குப் பல பாடல்களை எழுதியுள்ளார்.

கொன்றைப் பூக்கள், (சிறுகதைகள் 1976), சிறகொடிந்த பறவைகள் (சிறுகதைகள் 1993) உறவைத் தேடி (சிறுகதைகள் 2002) பாதை மாறிய பயணங்கள் (நாவல் 1992) போன்றவை இவரது நூல்களாகும்.

1995 இல் நடைபெற்ற மண்முனை வடக்கு கலாசார பேரவையின் முத்தமிழ் விழாவில் பொன்னாடை போர்த்தியும் 1997 இல் மண்டூர் கலை இலக்கிய அவையினரது பாராட்டு விழாவில் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டதுடன் 2001 இல் தஞ்சாவூரில் உதய கீதம் இலக்கிய பொதுநல இயக்கத்தினர் நடத்திய உலகக் கவிஞர் விழாவில் தமிழருவி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட ஒரு சில பன்முக ஆளுமை கொண்ட பெண்களைப் பற்றித்தான். என்னால் குறிப்பிட முடிந்தது. இன்னும் பலர் இலைமறை காயாக தங்கள் பன்முக ஆளுமையை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறா ர்கள். அவர்களையும் கண்டறிந்து அவர்களது ஆற்றல்களையும் வெளிக்கொணர்வது முக்கியமான தொன்றாகும். ஆகையால் இந்த ஆக்கத்தை முழுமைபெற்ற ஆக்கமாகக் கருதிவிட முடியாது.

என்னால் முடிந்தவரை இங்கு விடுபட்ட பெண் பன்முக ஆளுமைகளைக் கண்டறிந்து அடுத்த ஆக்கத்தில் சமர்ப்பிப்பதே எனது நோக்கமாகும்.

(Visited 1 times, 1 visits today)