பி.பார்த்தீபன்

ஈழத் தமிழ் எழுத்தாளர்களில் இன்று அதிகளவு வாசகர்களைக் கொண்ட ஒருவர் குரு அரவிந்தன்! தாயகத்தில் மட்டுமன்றி, சர்வதேச ரீதியாகவும் புகழ்பெற்றவர். யாழ். காங்கேசன்துறையைச் சேர்ந்த இவர், குடும்பத்துடன் புலம்பெயர்ந்து கனடாவிலிருந்து எழுதிக்கொண்டிருக்கின்றார். பன்முக ஆளுமை கொண்ட இவர், இலக்கியத் துறையில் தனக்கென தனியானதொரு தடத்தைப் பதித்தவர். ரொறன்ரோவில் பிரபல நிறுவனம் ஒன்றில் கணக்காளராகவும், பகுதி நேர ஆசிரியராக ரொறன்ரோ கல்விச் சபையிலும் கடமையாற்றுகின்றார்.

கனடிய தமிழ் சிறுவர் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரும், தன்னார்வத் தொண்டருமான குரு அரவிந்தன் தற்சமயம் 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவராகவும், பீல் பிராந்திய குடும்ப மன்றத்தின் தலைவராகவும், ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய காப்பாளராகவும், நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் காப்பாளராகவும் இருக்கின்றார். இதைவிட மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகசபை அங்கத்தவராகவும், சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றம், காங்கேசன்துறை ஒன்றியம் ஆகியவற்றின் ஆயுட்கால அங்கத்தவராகவும் இருக்கின்றார்.

தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்தும் வெளிவரும் சஞ்சிகைகள், பத்திரிகைகளில் பெருமளவு சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ள இவர், இன்று கனடாவில் இருந்து வெளிவரும் அதிக பத்திரிகைகள், இதழ்களில் எழுதும் இலக்கியப் படைப்பாளியாக, அதிக வாசக வட்டத்தைக் கொண்டவராக இருக்கின்றார். கனடா நாட்டின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கனடிய அரசின் ஆதரவுடன் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கதைகளில் குரு அரவிந்தன் ஆங்கிலத்தில் எழுதிய ‘பிறீடம் இஸ் பிறி’ என்ற கதையும் தெரிவு செய்யப்பட்டு ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் பிரசுரமாகி பல்லின மக்களின் பாராட்டையும் பெற்றது. இந்தச் சாதனைகளுக்காக பல விருதுகளையும் பெற்ற குரு அரவிந்தன், இலக்கியச் சேவையில் 50 ஆவது ஆண்டு நிறைவை இவ்வருடம் கொண்டாடுகின்றார்.

இந்தப் பின்னணியில் ஞாயிறு தினக்குரல் வாசகர்களுக்காக குரு அரவிந்தனை சந்தித்தபோது…

கேள்வி: 50 வருடங்களில் இலக்கியத்துறையில் நிறைய சாதித்துள்ளீர்கள். உங்களுடைய இலக்கியப் பிரவேசம் எப்படி அமைந்தது? அதற்குத் தூண்டுதலாக இருந்தது யார்?

பதில்: நடேஸ்வராக்கல்லூரியில் நாடக ஆசிரியர் ஏ.ரி.பொன்னுத்துரை அவர்களின் மேற்பார்வையில் ‘நடேஸ்வரன்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை சிலோன் விஜேந்திரனுடன் (இராஜேஸ்வரன் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் பேரன்) சேர்ந்து நடத்தினேன். நடேஸ்வரா விளையாட்டு மைதானத்தில் அடிக்கடி மேடையேறிய வி. வைரமுத்துவின் நாடகங்கள் நாடகத்துறையில் ஆர்வம் ஏற்படச் செய்தது. மகாஜனக் கல்லூரியில் தமிழ் மன்றத்தின் செயலாளராக இருந்தபோது ஆசிரியர் தமிழ் ஒளி த. சண்முகசுந்தரம், ஆசிரியர் கதிரேசம்பிள்ளை, ஆசிரியர் செல்லத்துரை, வித்துவான் சிவபாதசுந்தரம் ஆகியோருடன் இலக்கிய உறவுகள் ஏற்பட்டன. பாவலர் துரையப்பாபிள்ளையின் இலக்கிய ஆளுமை மாணவர்களை ஈர்த்திருந்த காலமது, அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையில் ‘அணையாத தீபம்’ என்ற தலைப்பில் எனது முதற்கதை வெளிவந்தது. 50 வருட இலக்கிய நிறைவாக, ஏற்கனவே தமிழர் தகவல், ஞானம், இனிய நந்தவனம், தமிழ் பார்வை போன்ற இதழ்கள் அட்டைப்படமாகப் பிரசுரித்து என்னைக் கௌரவப்படுத்தி இருந்தன. சென்ற மாதம் உதயன் கலை இலக்கியவிருதும், ஒன்ராறியோ முதல்வர் விருதும் இலக்கிய சேவைக்காகக் கிடைத்தன.

கேள்வி: சிறுகதைகள், நாவல்கள், இலக்கிய ஆக்கங்களை எழுதத் தொடங்கிய போது உங்களுக்கென தனியான பாணி ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டும் என்று முயன்றீர்களா? அல்லது பிரபல எழுத்தாளர் யாரையாவது பின்பற்ற விரும்பினீர்களா?

பதில்: மாணவப்பருவத்தில் நிறையவே வாசித்ததால், எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் எனக்கென ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டேன். தனித்துவமான அதையே தொடர்ந்தும் பின் பற்றுவதால், எனது எழுத்திற்கு நிறையவே வரவேற்பு இருக்கின்றது, குறிப்பாகத் தமிழகத்தில் இருந்து வெளிவரும் பிரபலமான இதழ்கள் லட்சக்கணக்கான வாசகர்களை உருவாக்கித் தந்தன. ‘குரு அரவிந்தனின் புனைவுகளைப் படித்தபோது எனக்கு இந்த அனுபவம் கிடைத்தது, அதாவது முடிந்துவிடுமோ என்று அடிக்கடி மீதிப் பக்கங்களை எண்ணிப் பார்க்க என்னைத் தூண்டியது. படித்தால் முடிந்துவிடும், ஆனால் படிக்கவேண்டும் என்ற ஆவல் மனதை நிரப்பியிருக்கும். புனைவுகளில் சுவை முக்கியம். அதனிலும் முக்கியம் அவை வரலாற்றின் ஒரு கூறை பதிந்து அதை அழியவிடாமல் காப்பது. எங்கள் சரித்திரத்தை அவை நினைவூட்டிக் கொண்டே இருக்கும். இந்த இரண்டும் குரு அரவிந்தன் படைப்புகளில் நிறைந்து கிடக்கின்றன.’ என்று மூத்த எழுத்தாளர் அ. முத்துலிங்கம் தனது கட்டுரையில் பாராட்டியிருந்தார்.

கேள்வி: எழுத்துத் துறையில் உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்திய அல்லது செல்வாக்குச் செலுத்திய எழுத்தாளர்கள் யாராவது இருக்கிறார்களா?

பதில்: ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு எழுத்துப் பிடிக்கும், அதனால் எல்லோரையும் வாசித்தேன். அம்புலிமாமா தொடக்கம் தற்போதைய எழுத்துக்கள்வரை வாசிக்கின்றேன். எல்லோருக்கும் புரியக்கூடியதாக என்னால் எழுத முடியும் என்ற நம்பிக்கையை எனக்குள் ஏற்படுத்தியது சுஜாதாவின் எழுத்துக்கள்தான். தமிழகப் பத்திரிகைகள் விரும்பிக் கேட்டுப் பிரசுரிக்குமளவிற்கு எனக்கு மிகப்பெரிய வாசக வியாபகத்தை ஏற்படுத்தித் தந்தது பத்து இலட்சம் பிரதிகளுக்கு மேல் பிரசுரமாகும் ஆனந்தவிகடன்தான். சமீபத்தில் விகடன் இணைய இதழில் வெளிவந்த எனது சிறுகதை 2.5 கோடி மக்களைச் சென்றடைந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.

கேள்வி: புலம்பெயர்ந்துள்ள மக்கள் மத்தியில் தமிழ் இலக்கியங்களுக்குள்ள வரவேற்பு எவ்வாறானதாக உள்ளது?

பதில்: வாசிப்புப் பழக்கம் குறைந்து கொண்டே போகின்றது. இந்த மண்ணில் ஈழத்தமிழர்களின் வரலாறு 40 வருடங்களாகத்தான் இருக்கின்றது. அனேகமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் தற்போது தமிழில் வாசிக்கிறார்கள். இவர்களில் சிலர்தான் இலக்கியக் கூட்டங்களுக்கும் வருகின்றார்கள். இவர்களின் காலத்தோடு தமிழில் வாசிப்பது என்பது மெல்ல குறைந்துவிடும். தற்போது சின்னத்திரை நாடகங்களோடுதான் மக்களின் பொழுது போகிறது. நல்லதொரு ஊடகம், ஆனால் தவறான வழியில் இளம் தலைமுறையினரைத் திசைதிருப்புகின்றது.

கேள்வி: புலம்பெயர்ந்த மக்களிடையே இரண்டாவது தலைமுறையினரிடமிருந்தும் தமிழ் எழுத்தாளர்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளதா?

பதில்: ஒரு சிலர் இருக்கிறார்கள். ஆனால் சர்வதேசத்தின் கவனத்தைத் திருப்பும் அளவிற்கு அவர்களில் யாரும் இதுவரை தமிழில் எழுதவில்லை. நான் ரொறன்ரோ கல்விச் சபையில் கல்வி கற்பிப்பதால் தமிழ் பிள்ளைகளின் முன்னேற்றத்தை அவதானிக்க முடிகின்றது. 20 வருடங்களுக்கு முன் அனேக பிள்ளைகளால் தமிழில் எழுத, வாசிக்க, பேசமுடிந்தது. மெல்ல மெல்ல எழுதுவது குறைந்தது, அதன் பின் வாசிப்பும் குறைந்து விட்டது. தற்போது அனேக பிள்ளைகளால் தமிழில் பேசத்தான் முடிகின்றது. தமிழைப் பொறுத்த வரையில் கனடாவில் அடுத்த தலைமுறை கேள்விக் குறியாகவே இருக்கின்றது.

கேள்வி: உங்களுடைய விருப்பத்துக்குரிய ஒன்றாக சிறுவர் இலக்கியங்களும் உள்ளது. சிறுவர்களுக்கான பல நூல்களையும் எழுதியிருக்கின்றீர்கள். கனடா போன்ற புலம் பெயர்ந்த தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளில் இவ்வாறான சிறுவர் இலக்கியங்களுக்காக முக்கியத்துவம் என்ன என்பதையும், அதற்கான வரவேற்பு எவ்வாறுள்ளது என்பதையும் கூறுவீர்களா?

பதில்: கனடிய மண்ணில் எங்கள் மொழி நிலைத்து நிற்கவேண்டும் என்பதே எனது குறிக்கோளாக இருக்கிறது. முப்பது வருடங்களுக்கு முன் நான் வந்த போது தமிழ் மொழியைக் கற்பதற்கு உரிய வசதிகள் இருக்கவில்லை. எனவே தமிழ் ஆரம் என்ற பெயரில் ஒலி, ஒளித் தட்டுக்களை இங்குள்ள கற்றோரின் உதவியுடன் வெளியிட்டேன். கனடிய தமிழ் சிறுவர்களுக்கு ஏற்ற வகையில் சிறுவர் பாடநூல்களையும், பயிற்சி நூல்களையும் வெளியிட்டேன். இன்று அது பெரும் உதவியாக இருக்கின்றது. இந்த மண்ணில் பொருளாதார உதவி இல்லாமல் தமிழ் மொழியைப் பாலர் மட்டத்தில் வளர்த்து நிலைத்து நிற்க வைப்பது கடினமான காரியமாகும். பல சிறுவர் பாடல்களை இசையோடு பதிவு செய்திருக்கின்றேன். அவற்றை மனப்பாடம் செய்தாலே தமிழில் பல சொற்களை அறிந்து கொள்ள முடியும். எழுத்தாளர் அ. முத்துலிங்கம், எழுத்தாளர் இராமகிருஸ்னன் போன்றோர் இப்பாடல்களைப் பாராட்டியிருந்தனர். எனது சிறுவர் இலக்கிய முயற்சி பற்றி ‘ஆக்க இலக்கியத்துறையில் தனியிடம் பிடித்துள்ள குரு அரவிந்தன் அவர்களை புகலிட நாட்டில் தமிழ் மொழி கற்கும் மாணவருக்குரிய ‘சிறுவர் இலக்கியம்’ படைத்த வகையிலும் அவரைத் தமிழ் ஆர்வலர் அனைவரும் சேர்ந்து பாராட்டுவோமாக’ என்று பேராசிரியர் இ. பாலசுந்தரம் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

கேள்வி: கனடாவிலுள்ள பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்புஒன்றை வெளியிட்டிருந்தீர்கள். அங்குள்ள பெண் எழுத்தாளர்கள் பற்றி சுருக்கமாகச் சொல்ல முடியுமா?

பதில்: பெண் எழுத்தாளர்கள் நிறையவே இருக்கிறார்கள். வேலைப்பழு, குடும்பச்சுமை, முரண்பாடுகள் போன்ற சில காரணங்களால் அவர்களால் முழுமையாக எழுத்துத் துறையில் ஈடுபட முடியாமல் இருக்கிறது. சுமார் 500 மேற்பட்ட குடும்பங்களை அங்கத்தவர்களாகக் கொண்ட பீல் பிராந்திய குடும்ப மன்றத்தின் தற்போதைய தலைவராக இருப்பதால், அவர்களில் பலரிடம் இலக்கிய ஆர்வம் இருப்பதை அவதானித்தேன். படைப்பிலக்கியத்தில் கனடிய தமிழ் பெண்களின் பங்களிப்பும் நிறையவே இருக்க வேண்டும் என்பதற்காக நான் மூன்று சிறுகதைப் பட்டறைகளை அவர்களுக்காக நடத்தியபின் அவர்களை எழுதச் சொன்னேன். இவ்வளவு திறமைகளை எங்கே வைத்திருந்தார்கள் என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அப்படி எழுதியவர்களில் 16 பெண்களின் கதைகளைத் தெரிந்து எடுத்திருந்தேன், ஒருவரைத் தவிர மற்ற எல்லோரும் படைப்பிலக்கியத்திற்குப் புதியவர்கள். அவர்களில் மூவர் பல்கலைக் கழகத்தில் படிப்பவர்கள், தங்கள் நெஞ்சில் சுமந்த அழியாத நினைவுகளை வித்தியாசமான முறையில் எழுதியிருந்தார்கள். அதனால் கனடாவின் 150வது பிறந்த தினத்திற்கு ‘நீங்காத நினைவுகள்’ என்று தலைப்பிட்டு இந்த சிறுகதைத் தொகுப்பைச் சமர்ப்பணம் செய்திருந்தேன். ‘இக்கதைகள் கனடிய தமிழ் பெண்களின் முதல் சிறுகதைத் தொகுப்பாக இளமையும் முதுமையும் கலந்த தொப்பூழ்க் கொடிகளைத் தொடுக்கும் பிரசவமாக வெளிவருவதில் கனடியப் பெண்கள் பெருமைப்படுகிறார்கள்’ என்று முனைவர் பார்வதி கந்தசாமி அவர்கள் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டிருந்தார்.

கேள்வி: இலக்கியத் துறையில் மட்டுமன்றி திரைப்படத்துறையிலும் நீங்கள் கால் பதித்திருக்கின்றீர்கள். 3 திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியிருப்பதாக அறிகிறோம். அது பற்றி கூறுவீர்களா..

பதில்: கனடிய இந்திய கூட்டுத் தயாரிப்பாக இந்தப் படங்கள் வெளிவந்தன. ‘சொல்லடி உன் மனம் கல்லோடி?’ என்ற, பரதநாட்டியத்தையும் இசையையும் கருப்பொருளாகக் கொண்ட எனது ஒரு நாவலைத்தான் ‘சிவரஞ்சனி’ என்ற பெயரில் திரைப்படமாக்கி இருந்தார்கள். பிரபல நாவல்கள் திரைப்படமாக்கப்பட்ட பட்டியலில் ‘சொல்லடி உன் மனம் கல்லோடி?’ என்ற எனது நாவலும் தற்போது இடம் பெற்றிருக்கிறது. எனது சிறுகதையான ‘முள்ளுவேலி’ என்ற கதைதான் வேலி என்ற பெயரில் திரைப்படமானது. தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டதால், அதற்கும் திரைக்கதை வசனம் நானே எழுதியிருந்தேன். எனது முதற்படமான ‘சுகம் சுகமே..!’ என்ற படத்திற்கு, சிறந்த திரைக்கதை வசனத்திற்கான ஜனகன் பிக்ஸேஸ் விருது 2007 ஆம் ஆண்டு கிடைத்தது. கல்கியில் வெளிவந்த ‘ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்’ என்ற எனது சிறுகதையை கலைஞர் தொலைக்காட்சியினர் ‘நாளைய இயக்குநர்’ என்ற நிகழ்ச்சிக்காக குறுந்திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். இந்தக்கதை இதுவரை ஆறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. தமிழ் திரைப்படத் தயாரிப்பில் இன்று தமிழ் நாட்டுக்கு அடுத்ததாகக் கனடாதான் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. ‘போதனையால் அல்ல, புதுமை படைப்பது நம் சாதனையால் என்று வாழ்ந்து காட்டுகின்றார் குரு அரவிந்தன்’ என்று குறிப்பிட்ட ஈழத்து எழுத்தாளர் இலக்கிய கலாவித்தகர் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்கள், ‘அம்பனைக்கு முன்னால் அடிக்கும் வயற்காற்றில், கொப்புலுப்பிப் பூச்சொரியும் குடைவாகை, குரு அரவிந்தனின் வெற்றிகளுக்கும் நாலு மலர் சூட்டி வரவேற்று நிற்கிறது.’ என்றும் வாழ்த்தியிருந்தார்,

கேள்வி: சிறுகதைகள், நாவல்களில் நீங்கள் அதிகளவுக்கு காதலையே கருப்பொருளாகக் கொண்டிருக்கின்றீர்கள். அதற்கான காரணம் என்ன?

பதில்: அன்பு என்ற தாரகமந்திரம்தான் எல்லாவற்றுக்கும் காரணமாகின்றது. இதுவே பாசம், நட்பு, காதல், நேசம், பக்தி என்று பல்வேறு கோணங்களில், பல்வேறு நேரங்களில் உருமாற்றம் பெறுகின்றது. புரிந்துணர்வு உள்ளவர்களுக்குக் காதல் புனிதமானது. காதலுக்கும், காமத்திற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்டாலே காதல் தோல்விகளுக்கு இடமில்லை. சிற்றிலக்கிய இதழ்களில் வெளிவந்த எனது சிறுகதைகளைவிட எனது காதலர்தினக் கதைகளே அதிக வாசகர்களால் வாசிக்கப்பட்டது. விகடன் காதலர்தின மலரில் வெளிவந்த ‘அவளுக்கு ஒரு கடிதம்’ என்ற சிறுகதைதான் அதிக வாசகர்களால் குறிப்பாக மாணவ, மாணவிகளால் வாசிக்கப்பட்டது. காதலர்தினக் கதைகள் அடங்கிய எனது ‘என் காதலி ஒரு கண்ணகி’ என்ற புத்தகம் தான் எனது வெளியீடுகளில் விற்பனையில் முன்னிற்கிறது.

கேள்வி: புலம்பெயர் வாழ்வில் தொழில், சமூக சேவை என்பவற்றுடன் இலக்கிய முயற்சிகளிலும் உங்களால் எவ்வாறு நேரத்தைச் செலவிட முடிகின்றது?

பதில்: எங்கள் இருப்பை இந்த மண்ணில் உறுதி செய்ய வேண்டும் என்ற பெருவிருப்பம் காரணமாக நேரத்தைச் செலவிடுகின்றோம். இதன் மூலம் சர்வதேசத்தின் பார்வையை எங்கள் பக்கம் திருப்பி இருக்கின்றோம். எங்கள் திறமைகளை ஆவணப்படுத்துவதன் மூலம் அடுத்த தலைமுறைக்குக் கனடிய தமிழ் இலக்கியம் என்ற ஒன்றை நாங்கள் விட்டுச் செல்ல வேண்டும். தனித்துவம் வாய்ந்த எங்கள் தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரம் போன்றவை இந்த மண்ணில் காலாகாலமாய் நிலைத்து நிற்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

கேள்வி: தினக்குரல் வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்: வாசகர்கள் இல்லாமல் எழுத்தாளர் இல்லை. இலங்கையில் பரவலாக என்னை அறியத் தந்த இதழாக ஞானம் இதழும், பத்திரிகைகளாகத் தினக்குரலும், வீரகேசரியும் இருக்கின்றன. எனக்கு இச்சந்தர்ப்பத்தைத் தந்த ஞாயிறு தினக்குரல் ஆசிரியருக்கும், அன்பு வாசகர்கள் எல்லோருக்கும் எனது நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

(Visited 1 times, 1 visits today)