மு.திருநாவுக்கரசு

‘மஹா சங்கத்தினர் சொல்வதையே ஆட்சியாளர்கள் செய்ய வேண்டும்” என்று ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் பின்வருமாறு விபரித்துள்ளார்.

”ஆட்சியாளர்கள் மஹாசங்கத்தினரின் ஆலோசனைகளை ஏற்று அதற்கமைய செயற்பட வேண்டும். அவ்வாறு செய்வார்களானால் அவர்களது நாடு தவறான பாதையில் பயணிக்காது பௌத்தக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட அரச கொள்கையையே நாட்டில் நடைமுறைப் படுத்த வேண்டும்”. என்று தெரிவித்தார்.

இலங்கை அரசியலில் உண்மையான அரசியல் யாப்பாக செயற்படுவது மஹாசங்கமும் இராணுவமே ஆகும். எழுதப்பட்ட அரசியல் யாப்பும், நாடாளுமன்றமும் ஜனாதிபதியும், பிரதமரும், அமைச்சரவையும் மஹாசங்கம் மற்றும் இராணுவம் ஆகிய இரண்டினதும் கட்டளைப்படியே செயற்படுகின்றன. எனவே எழுதப் பட்ட அரசியல் யாப்பு என்பது வெறும் சோடனையும், உலகை ஏமாற்றும் செயலும் ஆகும்.

மஹா நாயக்கர்கள் என்ன சொன்னாலும் அது நடைமுறை ரீதியில் ஆனா அரசியல் யாப்பு விதி போல செயற்படும். தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் இராணுவம் என்ன சொன்னாலும் அதனையே ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சரவையும் நிறைவேற்றும். எனவே அரச இயந்திரத்தின் இரு பக்க அச்சாணிகளாக மஹாசங்கத்தினரும், இராணுவத்தினரும் காணப்படுகின்றனர் .

இவ்வாறு பார்க்கையில் நடைமுறை ரீதியிலான உண்மையான அரசியல் யாப்பாக மஹாசங்கத்தினரும் இராணுவத்தினரும் காணப்படுகின்றனரே தவிர எழுதப்பட்ட அரசியல் யாப்போ அதன் வரிகளோ அல்ல. ஜனாதிபதி இதனை மேலே திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அதாவது மஹாசங்கத்தினரின் சொற்படியே ஆட்சியாளர்கள் செயற்பட வேண்டும் என்றும், அவர்களது ஆலோசனைப் படியே நாட்டை ஆளவேண்டும் என்றும். இது அவர்களது நாடு என்று கூறியுள்ளதுடன் பௌத்த கோட்பாடுகளை அடிப்படையாக கொண்ட அரச கொள்கையையே நடைமுறைப் படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி மிகத் தெளிவாகவும், வெளிப்படையாகவும் கூறி உள்ளார். இவ்வாறு அவர் கூறி இருக்கையில் அரசியல் யாப்பு திருத்தம் வேண்டும் என்றும், புதிய அரசியல் யாப்பு ரீதியாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறுவது பொய்யானதும், அர்த்தமற்றதும் ஆகும்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் அரசியல் யாப்பு ரீதியிலான தீர்வு காணப்பட மாட்டாதென 2015ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கம், நல்லிணக்க ஆட்சி முறையென பலவாறாகப் பிரகடனப்படுத்தப்பட்டு புதிய அரசாங்கம் உருவான காலத்தில் இருந்தே அறிஞர்களாலும் சில அரசியல் தலைவர்களாலும் தெளிவுற கூறப்பட்டு வந்தது. ஆனால் அதனையும் மீறி புதிய அரசியல் யாப்பை உருவாக்குவோம் என்றும், அதன்மூலம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை காண்போம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீண்டும் மீண்டும் வலுவாக கடந்த நான்கரை ஆண்டுகளாகக் கூறி வந்தனர். இவர்களது கூற்றுக்களும், பேச்சுக்களும், அரசியல் தீர்வு என்பன எல்லாம் கானல் நீராய் கரைந்து போகுமென கூறப்பட்டுவந்த எதிர்வு கூறல்களே தற்போது நிதர்சனம் ஆகியுள்ளன.

சிங்கள ஆட்சியாளர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இணைந்து அரசியல் தீர்வு என்ற மாயமானை தமிழ் மக்களின் கண்முன் காட்சிப்படுத்துகின்றனர் என்றும் அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் முடியும் தருணத்தை அண்டி இந்த நாடகம் கலைக்கப்பட்டு விடும் என்றும் அப்போது தமிழ் மக்களை சிங்கள தலைவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என்றும் கூறும் நகைச்சுவை படலம் ஆரம்பம் ஆகும் என நான்கரை ஆண்டுகளுக்கு முதல் எதிர்வு கூறப்பட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன் யாழ்ப்பாணம் முற்ற வெளியில் சமுர்த்தி நலத்திட்டத்தின் பெயரால் கூட்டப்பட்ட பெரும் திரளான மக்கள் குழுமியிருந்த கூட்டத்தில் தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா பின்வருமாறு பேசினார்.

”தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாம் ஆதரவு தெரிவித்து அரசைக் கொண்டுவந்த போதும் அவர் எமக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாறாகவே செயற்படுகிறார். இந்த ஏமாற்றம் கவலையழிக்கின்ற நிலையில் எதிர்காலத்தில் சிந்தித்து நிதானமாகவே முடிவெடுப்போம். தமிழர்கள் விடயத்திலும், இனப்பிரச்சினை விடயத்திலும் ஆரம்பகாலத்தில் இருந்து இன்றுவரை அரசு எந்தவித ஆக்க பூர்வமான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தமிழின வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளாக இனப்பிரச்சினை விடயத்தில் ஏமாந்து வருகின்றோம்.

இது எமக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது”. என்று 60 ஆண்டு காலமாக ஏமாந்து வருவதான தொடர் கதையுடன் மேலும் கடந்த நான்கரை ஆண்டுகளாக நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் தாம் ஏமாந்து விட்டதாக இணைத்து கூறுகிறார். இத்தகைய வேடிக்கை வினோதக் காட்சியும், ஏமாற்றபட்டு விட்டதாக கூறும் ஒப்புதல் வாக்கு மூலமும் அரங்கேற்றப்பட்டு மீண்டும் தமக்கு ஆதரவளிக்குமாறு கூறி தேர்தலில் நிற்பார்கள் என்பதெல்லாம் பல வேளைகளில் அறிஞர்களின் நூல்கள் வாயிலாகவும், ஊடகவியலாளர்களின் அச்சூடாக கட்டுரைகள் வாயிலாகவும் மற்றும் மின்னூடக பேச்சுக்கள் வாயிலாகவும், மாற்றுத் தலைமை பற்றிப் பேசும் தமிழ் அரசியல் தலைவர்களின் அறிக்கைகள், பேச்சுக்கள் வாயிலாகவும் வெளிவந்த வண்ணம் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வருட நடுப்பகுதியளவில் புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கையும், அரசியல் தீர்வை எட்டுவதற்கான நடவடிக்கையும் அகால மரணம் அடைந்து விடும் எனவும் அதைத் தொடர்ந்து புதிய தேர்தல் மூலம் உருவாக்கப்படும் அரசாங்கத்தின் வாயிலாக புதிய அரசியல் யாப்பும் அரசியல் தீர்வும் உருவாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்கள் மத்தியில் தேர்தல் திருவிழாவில் ஈடுபடுவர் என்றும் பலவாறாக கருத்துக்கள் முன்கூட்டியே கருத்துக்கள் வெளிவந்தன.

புதிய அரசியல் யாப்பு உருவாக்கமும் அதன் மூலமான அரசியல் தீர்வு உருவாக்கமும் நடைபெற மாட்டாத வெறும் போலி நாடகமே என்பதும் ஆட்சியாளர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் முன் கூட்டியே தெளிவாகத் தெரியும். சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் சக்திகள் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் வாயிலாக புதிய யாப்பு உருவாக்க முயற்சிகளையும் அரசியல் தீர்வு முயற்சிகளையும் அகலமாய் படுகொலை செய்து விட்டன.

வெளிப்படையாகப் பார்த்தால் இக்குண்டுத் தாக்குதல்களை ஒரு சில அதிதீவிர இஸ்லாமிய அடிப்படை வாதிகள் செய்துள்ளனர் போல் தோன்றும். உண்மை அப்படியல்ல இக்குண்டுத் தாக்குதல்களுக்கு பின்னால் பௌத்த இன வாதிகளை சூத்திரதாரிகளாகக் கொண்ட நன்கு நுணுக்கமாக வடிவமைக்கப் பட்ட ஒரு பொறிமுறை உண்டு.

சஹ்ரானும் அவரது சகாக்களும் தலைமறைவு இயக்கமாக வடிவமைக்கப்பட்டனர். அதே வேளை குறிப்பாக கிழக்கில் சில முஸ்லிம் தீவிர வாதத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கூடவே வடக்கில் உள்ள ஒரு சில தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியரங்கில் செயற்ப்படவல்ல இஸ்லாமிய அடிப்படை வாதத் தலைவர்களாய் வடிவமைக்கப்பட்டனர். ஆயுதம் தாங்கிய தீவிரவாத தலைமறைவுக் குழுவினர் சஹ்ரான் தலைமையில் சிங்கள பௌத்த தீவிரவாத அரசியல் தலைவர்களினாலும் கூடவே இராணுவப் புலனாய்வுத் துறையினராலும் வழிநடத்தப்பட்டதுடன் இதே சிங்கள இனவாதத் தலைவர்களால் வெளியரங்கிற்கான இஸ்லாமிய அடிப்படைவாதத் தலைவர்களும் தேர்ந்தெடுத்து வழிநடத்தப் பட்டனர் .

தமிழின எதிர்ப்பை உந்து சக்தியாகக் கொண்டு மேற்படி இருவகையினரையும் தூண்டி வழிநடாத்தியதுடன் இத்தகைய தலைமறைவு இயக்க தீவிரவாதிகளையும், வெளியரங்க தீவிரவாத அரசியல் தலைவர்களையும் ஒருவருக்கொருவர் அனுசரணையாக செயற்படும் வகையில் சிங்கள பௌத்த இனவாத தலைவர்களினால் இயக்கப்பட்டனர்.

புலியெதிர்ப்பு என்றதன் பெயரில் மேற்படி இருவகை மத அடிப்படைவாத அணியினரையும், தமிழருக்கு எதிராகப் பயன்படுத்தி வந்த நிலையில், அரச வளங்களுக்கூடாக முஸ்லிம்கள் அரசியல், வர்த்தகம், அரசாங்க உத்தியோகம் மற்றும் கட்டமைப்பு என்பனவற்றில் பெருவளர்ச்சி அடைந்து விட்டதாகவும் அதேவேளை அதுவரை காணப்பட்ட இயல்பான உள்ளூர் இஸ்லாமிய கலாசாரத்தை இந்த இடைக்காலத்தில் அராபிய கலசார மயப்படுத்தப்பட்டதாகவும், சிங்கள மஹாசங்கத்தினரும் சிங்கள பௌத்த இனவாத தலைவர்களும், இராணுவத்தினரும் கருதத்தொடங்கிய நிலையில் ஒரே வேளையில் முஸ்லிம்களால் தூக்கி தமிழரையும் அதே முஸ்லிம்களால் தூக்கி முஸ்லிம்களையும் தாக்கவல்ல ஒரு பொறிமுறையாக சிங்கள இனவாத சக்தி வடிவமைத்து செயற்படுத்தி உள்ளது.

குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி அகாலப் படுகொலைக்குள்ளானது அப்பாவி தமிழ் கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல கூடவே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் அகாலப் படுகொலைக்குள்ளானது. அத்துடன் கூடவே முஸ்லிம் மக்களின் அரசியல், பொருளாதார இருப்புகளும் படுகொலைக்கு உள்ளாகி உள்ளன.

அத்துடன் சிங்கள பௌத்த இனவாதத்தை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டுவதற்காக சிறையில் இருந்த கல கொட ஞானசாரதேரர் ஜனாதிபதியால் விடுதலை செய்யப்பட்டார் என்பதும் இங்கு ஊன்றிக் கவனிக்கத்தக்கது. மேலும் அஸ்கிரியபீட மஹாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தின தேரர் பின்வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். சிங்கள இனத்தை அழிக்கும் வகையில் முஸ்லிம்களின் செயல்கள் அம்பலத்துக்கு வந்துள்ளதாகக் கூறி முஸ்லிம் கடைகளுக்கு மக்களே செல்லாதீர்கள் என்று இம் மாதம் 18ஆம் திகதி அன்று வேண்டுகோளும் விடுத்துள்ளார். எனவே அரசியல் தீர்வுக்கு எதிரான, முஸ்லிம்களுக்கு எதிரான செயலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் வாயிலாக மிக நுணுக்கமாக அரங்கேற்றப்பட்டுள்ளன.

(Visited 1 times, 1 visits today)