கனடாவிலிருந்து எஸ். பத்மநாதன்

”ஜீவா ஒரு வரலாற்றுச் சின்னம் மாத்திரமல்ல அவர் ஒரு உற்பத்திப் பொருளும் கூட” என்று பேராசிரியர் நா. சிவத்தம்பியால் குறிப்பிடப்பட்ட டொமினிக் ஜீவா 1927 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 27 ஆம் திகதி பிறந்தவர். இவர் ஜோசப் மரியம்மா தம்பதிகளின் 5 பிள்ளைகளில் இரண்டாவது மகனாவார். டொமினிக் என்பது இவரது இயற்பெயராகும்.

கலையில் ஈடுபாடு கொண்ட பெற்றோர்களுக்கு பிறந்தவர் ஜீவா. அவரது கலை இலக்கிய ஆளுமையின் ஊற்றுக்கள் பெற்றோர்களிடமிருந்தே வந்துள்ளது. எனினும், ஒடுக்கப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்பட்ட பெற்றோர்களிடமிருந்து கிடைத்த இன்னொரு சமூக அந்தஸ்து ”அடிநிலைச் சமூகம்” என்பதாகும்.

யாழ். புனித மரியாள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை தொடங்கிய இவரது படிப்பு ஐந்தாம் வகுப்புடன் முடிவு பெற்றது. இவருக்கு கணக்கு படிப்பித்த ஆசிரியர் இவரது சாதியை இழிவாக பேசியதால் வெறுப்பும் வெப்பியாரமும் கொண்டு வகுப்பை விட்டு வெளியேறினார். படிக்கும்போது சாதியின் பெயரால் அவமானப்பட்ட இவர் தனது இந்த ஐந்தாம் வகுப்பு அறிவுடனேயே வெளியேறினார்.

தனது தந்தையாரின் ஜோசப் சலூனில் தொழில் செய்துகொண்டே இந்திய
நாவல்களையும், மார்க்சிச நூல்களையும் நிறைவாக வாசித்தார். எனது ”சவரக்கடையே எனது சர்வகலாசாலை” என்று அடிக்கடி சொல்லி வந்த அவருக்கு பல அறிஞர்களின் தொடர்பும் ஏற்படலாயிற்று. சாதிக்கொடுமையால் பாதிப்புற்ற அவர் கம்யூனிச தத்துவத்தால் கவரப்பட்டார். அப்போது யாழ்ப்பாணத்தில் கம்யூனிச தத்துவத்தை போதித்த கார்த்திகேசன் மாஸ்டர், அ. வைத்தியலிங்கம், ஐ.ஆ. அரியரத்தினம் மாஸ்டர், எம்.சி. சுப்பிரமணியம் போன்றவர்களுடன் நெருக்கமானார். அதேவேளையில் பிரபல எழுத்தாளர்களான செ. கணேசலிங்கம், எஸ். பொன்னுத்துரை, கே. டானியல், அ.ந. கந்தசாமி, ஏ.ஜே. கனகரட்ணா ஆகியோருடனும் நெருங்கிப் பழகினார். அத்துடன் சிங்கள அரசியல்வாதிகளை பீட்டர் கெனமன், சண்முகதாசன், என்.எம். பெரேரா போன்றவர்களையும் நேசித்தார். தமிழ்நாட்டில் வாழ்ந்த தோழர் ப. ஜீவானந்தம் 1948 இல் யாழ்ப்பாணம் வந்து மறைந்து வாழ்ந்தவேளையில் அவர் மீது ஏற்பட்ட பற்றுதலே ”டொமினிக் ஜீவா” என்ற புனைபெயருக்கு காரணமாயிற்று.

தமிழக சஞ்சிகைகளான சரஸ்வதி, தாமரை என்பவற்றுடன் நெருக்கமானார். அப்போது இடதுசாரி சிந்தனைகளை இச் சஞ்சிகைகள் கொண்டிருந்தன. மார்க்ஸிம் கோர்க்கி, ஒஸ்ரோலஸ்தி, ஜுலியால் பியூ ஜிக, சரத் சந்திரா, விந்தன், ஜெயகரிந்தன் போன்றவர்களது பல்வேறு நூல்களையும் பெற்று தன்னையும் வாசிப்பில் இணைத்துக் கொண்டார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் பூபாலசிங்கம் புத்தகக்கடை உரிமையாளரும் ஒரு சமத்துவவாதி என்பதால் அவருடன் தொடர்பினை ஏற்படுத்தி அங்கும் பல நூல்களை பெற்று படிக்கலானார். பெரியதொரு இலக்கிய அரசியல் வாழ்வில் தனது தடங்களை இறுகவே பதித்துக் கொண்டார்.

இவரது ஈழப்பதிவுகள் சுதந்திரன் பத்திரிகை ஊடாக வெளிவந்தது. 1948 ஆம் ஆண்டு தனது இருபதாவது வயதில் சுதந்திரனில் அவர் எழுதிய முதற்கதை ”எழுத்தாளன்” என்பதாகும். தொடர்ந்து எழுதிய அவருக்கு 1956 ஆம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு கிடைத்தது. சுதந்திரன் பத்திரிகையூடாக அவரது எழுத்து மிகவும் பிரகாசித்தது.

ஜீவா தமிழகத்துடன் தொடர்பு கொள்ள முனைந்தார். விஜயபாஸ்கரின் ”சரஸ்வதி” என்னும் இலக்கிய சஞ்சிகை ஜீவாவின் கதைகளுக்கு முக்கிய இடம் கொடுத்தது. 10111958 இதழில் ஜீவாவின் நிழற்படத்தை அட்டையில் பதிப்பித்து பெருமைப்படுத்தியது சரஸ்வதி. தமிழக இதழான தாமரையும் ஜீவாவின் கதைகளை ஏற்று பிரசுரித்தது. 1968 ஜுலையில் வெளிவந்த தாமரை சிறுகதை சிறப்பு மலரில் ஜீவாவின் நிழற்படம் பிரசுரமானது. இந்த இரண்டு சஞ்சிகையும் ஜீவாவுக்கு கொடுத்த முக்கியத்துவம் காரணமாகவே அவரது ஆரம்பகால நூல்கள் அங்கு பிரசுரமாயின.

இதே காலப்பகுதியில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளால் பல்வேறு விழிப்பு நிலை தமிழர்களிடையேயும் ஏற்பட்டது. 1957 இல் பேராசிரியர் கைலாசபதி தனது பணியில் வெளியான தினகரனில் ஜீவாவின் கதைகளையும் பிரசுரித்தார். பேராசிரியர் சிவத்தம்பியும் மாக்சிய சிந்தனை கொண்ட விமர்சகராகி ஜீவாவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார். இக்காலகட்டத்தில் 1957 இல் சாஹித்திய மண்டலம் உருவானது. இக்காலத்தில் சரஸ்வதி ஆசிரியர் ஜீவாவின் ”தண்ணீரும் கண்ணீரும்” என்ற சிறுகதை தொகுதியை வெளியிட்டார்.

ஈழத்து மண்வாசனை கொண்ட இந்நூலுக்கு முதல்முதலாக சாஹித்திய மண்டல பரிசு கிடைத்தது. இந்நூலே இலங்கையின் முதன்முதலான நவீன புனைகதை இலக்கியத்திற்கான பரிசு பெற்றதாக கொள்ளமுடியும். இந்த பரிசு கூட சிலருக்கு பொறுக்கமுடியாமல் இருந்தது. எனினும் ஜீவாவின் எழுத்துக்கள் ஆக்க இலக்கியத்துக்கு வழிகோலியது. 1970 ல் சாஹித்திய மண்டல உறுப்பினர் பதவியும் ஜீவாவுக்கு கிடைத்தது. அத்துடன் ”தண்ணீரும் கண்ணீரும்” சிறுகதை தொகுதியை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் எம்.ஏ. பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொண்டது. இவரது சிறுகதைகள் ருஷ்ய, செக்கஸ்லோவேக்கிய, ஆங்கில, சிங்கள மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டன.

தொடர்ந்து அவரது சிறுகதை நூல் ஒன்று 1962 ல் ”பாதுகை” என்ற பெயரில் வெளியானது. இதற்கு 1963 இல் சாகித்திய மண்டல பரிசு கிடைத்தது. இதுவும் தமிழ் நாட்டிலேயே வெளியானது. இதனால் தாமரை, கணையாழி, சமூக நிழல், கல்கி, மக்கள் செய்தி, ஜனசக்தி, இந்தியன் எக்ஸ்பிரஸ், சிகரம், தீபம், சகாப்தம், தினக்கதிர், இதயம் பேசுகிறது, சாவி போன்ற சஞ்சிகைகள் செவ்விகண்டன. அத்துடன் ஈழத்து எழுத்தாளர் ஒருவருக்கு தமிழகம் உரிய அங்கீகாரம் வழங்கியது. பல்கலைக்கழகங்களும் அவரைக் கௌரவித்தன. வானொலி, தொலைக்காட்சி சேவைகள் செவ்வி கண்டன. எந்த ஈழத்து எழுத்தாளருக்கும் இல்லாத அங்கீகாரம் இந்த பாமரக் கலைஞனுக்கு கிடைத்தது.

இவரைப்பற்றி குறிப்பிட்ட பிரபல தமிழக எழுத்தாளர் ஜெயகாந்தன் ”எழுத்து ஒரு தொழிலோ பிழைப்போ அல்ல. நமக்கு அது யோகம், அந்த யோகமே நமக்கு ஜீவிதம். நண்பர் ஜீவாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்கிறார். இதற்கு முழுவதும் பொருத்தமாக வாழ்ந்து வருபவரே ஜீவா.

ஈழத்தில் அவருக்கென தனியானதொரு இடம் கிடைக்க காரணமாகவிருந்தது 1966 ஆகஸ்ட் மாதம் 15 ம் திகதி அவர் வெளியிட்ட மல்லிகை என்னும் சஞ்சிகையாகும். உழைப்பும், நம்பிக்கையுமே இவரது மூலதனம். இவரது வெளியீடு அவரது சலூனிலேயே நடந்தது. மங்களகரமான பூவான மல்லிகை போலவே இச்சஞ்சிகை எளிமையான அமைப்பும் தூய்மையான கருத்தும் கொண்டது. இது ஈழத்தில் என் இலக்கிய எழுச்சியை தோற்றவித்தது எனவும் கூறலாம். கடுமையான எதிர்ப்புகள் விமர்சனங்களூடாக வளர்ச்சி பெற்ற முழுநேர இலக்கியவாதியாளர் ஜீவா.

முற்போக்கு எழுத்தாளர்களே உருவாக்குதல், சாதிய ஒடுக்கு முறைகளுக்கெதிராக வலிமையாக குரல் கொடுத்தல், தமிழக சஞ்சிகைகளின் தரத்திற்கு ஈழத்து சஞ்சிகையை உயர்த்துதல், பாமர மக்களுக்காக இலக்கியம் படைத்தல், வெகுசன சொற்பாவனைகளுக்கு முக்கியம் கொடுத்தல் என்பவற்றினை மல்லிகை இலக்காக கொண்டிருந்தது.

தனது சைக்கிளில் மல்லிகை சஞ்சிகைகளை கொண்டு சென்று விற்பனை
செய்தவர் அவர். மல்லிகையின் இருப்பே இவரது உழைப்பாகவும், இவரது உழைப்பே மல்லிகையின் இருப்பாகவும் இரண்டறக் கலந்து மணம் கமிழ்ந்தது. பல ஊர்களுக்கு சென்று வந்ததுடன் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களையும்சந்தித்தார்.

முஸ்லிம் எழுத்தாளர்கள் தென்னிலங்கையிலிருந்து எழுதலாயினர். பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட எழுதலாயினர். வெளிநாடுகளிலிருந்தும் பல படைப்புக்கள் வந்தன. எனினும் யுத்த சூழ்நிலைகளால் 1996 இல் மல்லிகை சஞ்சிகை கொழும்பு கதிரேசன் வீதி முகவரிக்கு மாற்றம் கண்டது. 25021997 இல் புதிய மல்லிகை காரியாலயமும் உருவானது.

கொழும்புக்கு மல்லிகை சஞ்சிகை இடம் மாறியதால் பெரியதளம் அவருக்கு கிடைத்தது. முஸ்லிம் எழுத்தாளர்கள் பெரிதும் இச்சஞ்சிகையில் எழுதலாயினர். மலையக எழுத்தாளர்களின் பங்களிப்பும் கிடைத்தது. சிங்கள எழுத்தாளர்களது தொடர்பும் இவருக்கு ஏற்பட்டது. இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் மல்லிகை மணம் தந்தது. புலம் பெயர் தமிழர்களும் இதனுடன் தொடர்பில் இருந்தனர். இலங்கை நாடாளுமன்றத்தில் இஸ்லாமியரான அஸ்வர் ”இலங்கை தமிழ் சஞ்சிகைகளின் தந்தை என்றே அவரை அழைக்கத் தோன்றுகிறது” என்று டொமினிக் ஜீவாவைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். (தினகரன் ஒக்டோபர் 232012)

கொழும்பில் ”மல்லிகைப் பந்தல்” என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தினை ஏற்படுத்தி பல எழுத்தாளர்களது நூல்களே வெளியிடலானார். தனது மல்லிகை அட்டைகளில் எழுத்தாளர்களது படங்கள் மட்டுமே பிரசுரம் செய்து பலரது அபிமானத்தையும் பெற்றுக்கொண்டார். 70 க்கு மேற்பட்ட நூல்களை மல்லிகை பந்தல் வெளியிட்டுள்ளது. ”தண்ணிரும் கண்ணீரும்” சிறுகதை தொகுதி முதலாக 20 நூல்கள் வரை அவரது படைப்புகள் ஆகும். சிறுகதைகள், செவ்விகள், அனுபவப் பகிர்வுகள், ஆசிரிய தலையங்கங்கள், கேள்வி பதில்கள், கட்டுரைகள், சுயவரலாறு, பிரயாணங்கள் என பல இதில் அடங்கும். எதுவித பாசாங்கும் அற்ற எளிமையான நடையிலேயே அவர் எழுதுவார். ரசிகமணி செந்தில்நாதன், பேராசிரியர் சண்முகதாஸ், மேமன்கவி, சோமகாந்தன், டாக்டர் முருகானந்தன், செங்கையாழியன், நுஹ்மான், மௌனகுரு, சபா ஜெயராசா, தெணியான் எல்லோரும் தொடர்ந்து இணைந்து எழுதி வந்தனர். மல்லிகையின் தரம் மேலும் உயர்ந்தது.

ஜீவா தனது சுயசரிதையை எழுதி வெளியிட விரும்பிய ஒருவர். இதனால் ”எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்” என்ற புதியதொரு தலைப்பில் தொடராக எழுதியுள்ளார். இதன் ஆங்கில வடிவம் ”UNDRAWN PORTRAIT FOR UNWRITTEN POETRY’ என்ற பெயரில் அவுஸ்திரேலியா வாழ் கந்தையா குமாரசுவாமி என்பவரால் மொழி பெயர்ப்பாகியுள்ளது.

பல்வேறு காலகட்டங்களில் இவரது இலக்கியப்பாணிக்கான விருதுகளும் கௌரவங்களும் கிடைத்துள்ளன. காலவரையறையில் பின்வருமாறு அமையலாம். சாகித்திய மண்டலப் பரிசு (1962) தண்ணீரும் கண்ணீரும்
சிறுகதை தொகுதி.

சாகித்திய மண்டல பரிசு (1963) பாதுகை சிறுகதை தொகுதி
மூதறிஞர் விருது (1998) அகில இலங்கை கம்பன் தமிழ்க் கழகம்.

கௌரவ முதுமாணிப்பட்டம் (2001) யாழ். பல்கலைக்கழகம்.
(இந்த கௌரவத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).

சாகித்திய ரத்னா (2005) இலங்கை அரசு

இலக்கிய விருது (2007) பேராதனை தமிழ்ச் சங்கம்.

வாழ்நாள் சாதனையாளர் விருது (2007) லண்டன் தமிழ்ச் சங்கம்.

கொடகே விருது (2009) கொடகே நிறுவனம் (இது ஒரு சிங்கள நிறுவனம்)

அகளம் விருது (2010) கனடா, எட்டாவது சர்வதேச தமிழ்ப்பட விழாக் குழு.

இயல்விருது வாழ்நாள் சாதனையாளர் (2013) கனடா தமிழ் இலக்கிய தோட்டம்.

அட்டைப்பட கௌரவம் (2014) காலம் சஞ்சிகை கனடா.

இலக்கிய விருது (2014) கொழும்பு தமிழ்ச் சங்கம்.

மேற்குறிப்பிட்ட விருதுகள், பரிசில்கள் தவிர ஸ்ரீலங்கா நூல் அபிவிருத்திச் சபை, வடக்கு கிழக்கு பண்பாட்டுத் திணைக்களம், சட்டக்கல்லூரி தமிழ் மன்றம் நாவலர்சபை, தென்கிழக்கு இலக்கியப் பேரவை, ஸ்ரீலங்கா முஸ்லிம் ஊடகவியலாளர் சங்கம் எம்.எச்.எம்.எஸ். மன்றம் ஆகியவையும் பல கௌரவங்களை இவருக்கு வழங்கியுள்ளன. பிரதமரால் வழங்கப்படும் தேச நேத்துரு (தேசத்தின் கண்) என்ற விருதும் இவருக்கு கிடைத்துள்ளது. மிகவும் பெருமைப்பட வைப்பதாகும்.

இவ்வளவு விருதுகளையும், பரிசில்களையும், கௌரவங்களையும் பெற்றுக்கொண்ட ஜீவாவின் மல்லிகை 48 ஆண்டுகளாக வெளிவந்துள்ளது. 2012, நவம்பர் டிசம்பர் மாதங்களில் 401 வது இதழுடன் மல்லிகையை அவரால் வெளியிட முடியவில்லை. அவரது எண்பத்தொன்பதாவது வயதில் அதுவும் நின்றுபோனது. 50 வருடம் வரை வெளியிடுவேன் என்ற அவரது கனவும் கலைந்துபோனது. ”எனது மனதுக்கு வேலி போட முயன்றவனல்ல நான்” என்று கூறிய ஜீவா இன்று உடலால் தளர்ந்து போயுள்ளார். அவரது மல்லிகையும் மணமிழந்தது.

எல்லாவற்றையும் மறந்து தனிமையில் வாழக்கூடியவராகவே இன்று ஜீவா உள்ளார். தனது மண்ணையும் மனங்களையும் நேசித்த அதியுன்னத படைப்பாளி இன்று எமது நேசிப்பை வேண்டி நிற்கிறார். தொண்ணூற்றிரண்டு வயதில் வாழ்ந்துவரும் அவருக்கு தேவையானது எமது ஆத்மார்த்தமான அன்பும் ஆதரவும் தான். அவரது கரங்களையும், உடலையும் பாசத்துடன் வருட வேண்டிய காலம் தற்போதுதான் வந்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)