அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை விவகாரத்தை பாரப்படுத்தக் கோரும் கையெழுத்துப் போராட்டத்தில், தாயக மக்களை உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னெடுப்பில் தமிழர் தாயகத்தில் கையெழுத்து போராட்டம் ஒன்று சமகாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை இலங்கையில் தலையீடுகளை மேற்கொண்டு சர்வதேச குற்றவியல் பொறிமுறையினை இலங்கையில் அமுல்படுத்த வேண்டும் என இக்கையெழுத்து போராட்டத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இக்கையெழுத்து போராட்டத்துக்கு தமது தோழமையினை வெளிப்படுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுசன விவகாரங்கள் அமைச்சு, தாயக மக்கள் தமக்கு கிடைக்கின்ற வெளியில் இக்கையெழுத்து போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரியுள்ளது.

2011ஆம் ஆண்டு இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என கோரியிருந்த நா.தமிழீழ அரசாங்கம், இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அல்லது அதற்கு நிகரான ஒரு சர்வதேச விசாரணை மன்றில் நிறுத்தக்கோரி, மில்லியன் கையெழுத்தியக்கத்தினை 2015ஆம் ஆண்டு முன்னெடுத்திருந்தது.

அக்கையெழுத்துப் போராட்டத்தில் 1.6 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்திருந்ததோடு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இலங்கையில் இருந்து ஒப்பமிட்டிருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

(Visited 12 times, 1 visits today)