நமது விஷேட நிருபர்

இலங்கையின் நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளை மையப்படுத்தி செயற்பட்டு வரும் இலங்கையைக் கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவின் மூன்றாவது அறிக்கை நாளை திங்களன்று வெளிவர இருப்பதாக ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பெப்ரவரியில் இந்நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்டிருந்த இரண்டாவது அறிக்கையில், ”இலங்கை அரசாங்கம் தொடர்ந்து நேர்மையற்ற முறையில் நடக்குமானால், பன்னாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்குத் தொடுனர்களின் பங்கேற்புடன் கலப்புப் போர்க்குற்ற நீதிமன்றம் அமைத்தல் உள்ளிட்ட ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் 30.1 தீர்மானத்தை எழுத்திலும் கருத்திலும் செயலாக்குவதற்கு முகாமையான நடவடிக்கைகள் எடுக்கத் தவறுமானால், ஐ.நா. பாதுகாப்பு மன்றம் ஓராண்டுக்குள் இலங்கையின் நிலைமையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்ப வேண்டும்” என தனது பரிந்துரையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஐ.நா தீர்மானம் இலங்கைக்கு வழங்கிய இரண்டு ஆண்டுகால நீடிப்பில், ஓராண்டு நிறைவுறுகின்ற நிலையில் இந்நிபுணர் குழுவின் மூன்றாவது அறிக்கை வெளிவர இருக்கின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட இந்த சுயாதீன நிபுணர் குழுவினை, கம்போடிய கலப்பு நீதிமன்ற சர்வதேச சட்ட நிபுணர் றிச்சாட் ரொஜர்ஸ் ஒருங்கிணைத்து வழிநடத்தி வருகின்றார்.

இந்நிபுணர் குழுவானது பின்வரும் பொறுப்புக்களை முன்னெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது:

1. பொறுப்புக்கூறல் கண்காணிப்புக் குழுவுக்குத் தரப்பட்ட கட்டளையை நீட்டிக்கும். மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அளித்த அறிக்கையையும் மனித உரிமை மன்ற உறுப்பரசுகள் தெரிவித்த கருத்துகளையும் கணக்கில் கொண்டு மனித உரிமை மன்றத் தீர்மானத்துக்கு விளக்கமளிப்பதும், இலங்கை அதற்கிணங்க நடப்பதைக் கண்காணிப்பது.

2. இலங்கை அரசுக்கும் சிங்கள அரசியல், படையியல் நிறுவன அமைப்பின் தலைவர்களுக்கும் எதிராகப் புலனாய்வு செய்து, சாட்சியத்தைப் பகுத்தாய்ந்து வழக்குக் கோப்புகள் திரட்டிக்கட்டும் பணிக்காகச் சட்டத்தரணிகள், புலனாய்வாளர்கள், செயற்பாட்டாளர்கள் கொண்ட ஒரு குழுவை அமைக்கும். பல்வேறு நாடுகளிலும் உலகளாவிய மேலுரிமையின்படியான உள்நாட்டு வழக்காடலுக்கு உதவுவது இதன் நோக்கமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)