அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துக்களை தெரிவித்த குற்றச்சாட்டில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மீது சுமார் 40 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இதன்காரணமாக கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுவொன்றை கையளித்துள்ளார்.

குறித்த மனுவில் தமது பெயருக்கும், பொதுவாழ்விற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அரசியல் நோக்கங்களுக்காகவும் தமது கருத்து தவறுதலாக பகிரப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் தெரிவித்த கருத்து பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், வரலாற்று ரீதியிலேயே குறித்த கருத்தை தெரிவித்ததாக குறிப்பிடும் கமல்ஹாசன், அதனால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கமல்ஹாசனின் கருத்து தமிழகத்தில் மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்ததுடன், இரு பிரிவுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுப்படி செய்திருந்தது.

இதேவேளை நேற்று திருப்பரங்குன்றம் பகுதியில் பிரசாரப்பணியில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசன் மீது பொதுமக்கள் தாக்குதல்களை மேற்கொண்டதுடன், அவரின் உருவ பொம்மைகளையும் எரியூட்டி எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)