ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாமல் ராஜபக்ச, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்டுள்ளனர்.

எனினும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சில தவறுகள் உள்ளமையால் அதனை இப்போதைக்கு சமர்ப்பிக்க வேண்டாம் என மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரை 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு கையொப்பமிட்டுள்ளனர். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பிரேரணைக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

பிரேரணை தொடர்பில் ஆராய்வதற்காக பொது எதிரணியின் நாடாளுமன்றக் குழு நாளை கூடுகின்றது.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை சபாநாயகரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)