ஐதராபாத்தில் நடந்த ஐபிஎல் 2019 இறுதிப் போட்டியில் சென்னை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி 4வது முறையாக கோப்பையை வென்று சாதித்தது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய மும்பை 149ஓட்டங்களை எடுத்தது. தொடர்ந்து விளையாடிய சென்னை அணிக்கு வாட்சன் தொடக்கம் கொடுத்தார். சென்னை அணி தடுமாறிய போதும் ஷேன் வாட்சன் சிறப்பாக விளையாடி 80 ஓட்டங்களை குவித்தார்.

ரத்த காயத்துடன் விளையாடிய வாட்சன் :

சரியாக விளையாடுவதில்லை என்ற விமர்சனத்தை தாண்டி ஷேன் வாட்சன் அசத்தலாக துடுப்பாட்டம் செய்தார். இந்நிலையில் அவர் ரன் எடுக்கும் போது கீழே விழுந்தார். அப்போது அவரின் முழங்காலில் ரத்தம் கசிந்து கொண்டிருந்த நிலையில் அதை பொருட்படுத்தாமல் வலியோடு விளையாடிக் கொண்டிருந்தார்.

போட்டியில் அவர் அவுட்டான பின்பு தான் அது அனைவரின் கவனத்திற்கு வந்தது. போட்டி முடிந்து அவருக்கு காயமான இடத்தில் 6 தையல்கள் போடப்பட்டுள்ளது என ஹர்பஜன் சிங் தெரிவித்தார். இது தான் எங்கள் வாட்சன் என கூறியுள்ளார்.

ரசிகர்களுக்கு வருத்தம்:

ஹர்பஜன் சிங் சொன்ன பின்னர் தான் வாட்சனின் காயம் குறித்து ரசிகர்களுக்கு தெரியவந்தது. இவர் ஆஸ்திரேலியாவுக்கு நேற்று கிளம்பும் போது எடுக்கப்பட்ட வீடியோவில் கூட அவர் வலியால் காலை தாங்கி தாங்கி நடப்பது தெரிந்தது.

ஏற்கனவே தோல்வியால் வருத்தத்தில் இருந்த சென்னை ரசிகர்கள் வாட்சனின் ரத்த காயம் பார்த்து மேலும் சோகத்தில் உள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)