கபில்நாத் 

இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரித்துள்ளதகாவும் அவர்களை வெளியேற கோரும் நாம் தற்போதைய நிலையில் தமிழர்களுக்காக பாதுகாப்பை யாரிடம் கோருவது என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் க. துளசி கேள்வியெழுப்பினார்.

அவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கேள்வி இலங்கையில் நடந்த குண்டுத்தாக்குதலை முன்னாள் போராளி என்ற வகையில் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில்; கடந்த 21 அம் திகதி இலங்கையில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய பயங்கரவாத தாக்குதல் அதனோடு இணைந்த நாட்டில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகள் தொடர்பில் பார்க்கின்றபோது, இலங்கையில் நீண்ட யுத்தத்திற்கு பின்னரும் புலனாய்வு கட்டமைப்புக்கள் மற்றும் பாதுகாப்பு தரப்புக்கள் மீளவும் உள்நாட்டு யுத்த முறியடிப்பு புலனாய்வு வேலைகளையே தொடர்ச்சியாக செய்துகொண்டிருந்தது.
அந்தவகையில் வெளியில் இருந்து வரும் பயங்கரவாத அல்லது தீவிரவாத தாக்குதலை எதிர்கொள்ளும் அளவுக்கு வலுவான புலனாய்வு கட்டமைப்பை ஏற்படுத்தியிருக்கவில்லை. அங்கே காணப்பட்ட பலவீனம் இன்று மிக மோசமான விளைவுகளை இலங்கைக்கு தந்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தின் மீது கண்ணுக்குத்தெரியாத யுத்தமொன்று தீவிரவாதிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவே நாங்கள் கருதுகின்றோம்.

கேள்வி; இலங்கைக்கு சர்வதேச பாதுகாப்பு கட்டமைப்பு, புலனாய்வு கட்டமைப்பு இல்லையென்கிறீர்கள். அவ்வாறெனில் புலிகளை அழித்ததாகவும் தாம் பயங்கரவாதத்தை அழித்துள்ளதாகவும் சர்வதேச நாடுகளை அழைத்து இலங்கை மாநாடுகளையும் பயிற்சிகளையும் வழங்கியுள்ளதே?

பதில்; முதலில் விடுதலைப்புலிகள் அமைப்பு விடுதலையை வேண்டி போராடிய அமைப்பு. விடுதலைப்புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்போ, பயங்கரவாத அமைப்போ அல்ல. விடுதலை அமைப்புக்கு விடுதலைப்போராட்டத்திற்கான இலக்குகள் இருக்கும், கொள்கை இருக்கும், தத்துவார்த்த தளம் அது பயணிக்கும் பாதை இருக்கும். ஆனால் பயங்கரவாத அமைப்புக்கு இவை எதுவும் இருக்காது. எங்கே தொடங்கி எங்கே முடிகின்றது. அதற்கான கால இடைவெளிகள் பற்றி தெரியாது.

அந்த வகையில் விடுதலைப்போராட்டம் இலங்கையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதே தவிர, இலங்கை அரசாங்கத்திடம் ஒரு தீவிரவாத தாக்குதல் அல்லது பயங்கரவாத தாக்குதலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கான வளர்ச்சி இன்னும் அடையவில்லை என்றே கருதுகின்றோம்.

கேள்வி; இந்த தாக்குதலுக்கு பின்னர் விடுதலைப்புலிகள் தொடர்பாக அரசாங்கத்திடம் அல்லது சிங்கள மக்களிடம் நல்லதொரு கருத்து ஏற்பட்டுள்ளதாக கருதுகின்றீர்களா?

பதில்; இலங்கையின் அரச தலைவர் உட்பட பலரும் தற்போது இது தொடர்பான கருத்தை தெரிவித்துள்ளார்கள். நான் நினைக்கின்றேன் ஈராக்கில் சதாம் உசைன் கொல்லப்படுவதற்கு முன்னர் அணு ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், அவர் கொல்லப்பட்டு 10 வருடங்களின் பின்னர் நிபுணர்களின் அறிக்கையின் பிரகாரம் அங்கு அணு ஆயுதம் இல்லை என அறிக்கை வெளிவந்துள்ளது.

அதுபோலவே ஒரு விடுதலைப்போராட்டம் தீவிரவாத போராட்டமாக, பயங்கரவாத போராட்டமாக இனம் காணப்பட்டு அது அழிக்கப்பட்ட பின்னர் தற்போது சான்றிதழ் வழங்கிக்கொண்டிருப்பதில் எந்தப்பயனும் இல்லை.

கேள்வி; பாரிய புலனாய்வு கட்டமைப்பை கொண்ட ஒரு விடுதலைப்போராட்ட அமைப்பில் இருந்தவர் என்ற வகையில் இலங்கையில் புலனாய்வு தகவல்கள் பரிமாற்றத்தில் அசட்டையீனமாகியதாலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் எவ்வாறு நோக்குகிறீர்கள்?

பதில்; இலங்கை அரசு தங்கள் நாட்டின் மீது வெளிநாட்டு தீவிரவாத அச்சுறுத்தலை எந்த காலத்திலும் எதிர்நோக்கியிருக்கவில்லை. அவர்கள் இறுமாப்புடன் இருக்க காரணம் விடுதலைப்புலிகளை அழித்தாகிவிட்டது என்பதேயாகும். பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக இருக்கின்றது. ஆகவே வருகின்ற புலனாய்வுத் தகவல்களை கூட இவ்வளவு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் விதமாக இருக்கும் என எண்ணியிருக்கவில்லை. அதுவே இவ்வாறான துரதிஸ்டவசமான சம்பவம் இடம்பெற காரணமாகியிருக்கின்றது.

கேள்வி; விடுதலைப்புலிகள் தற்போது இருந்திருந்தால் அல்லது அவர்களது காலத்தில் உலக பயங்கரவாதம் இவ்வாறு நடந்திருந்தால் அவர்கள் எவ்வாறு இதனை கையாண்டிருப்பர்?

பதில்; 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அன்டன் பாலசிங்கம் பேச்சுவார்த்தையின்போது இலங்கை அரசாங்கத்திற்கு சில புலனாய்வு தகவல்களை வழங்கியிருக்கின்றார். அதாவது கிழக்கில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் தங்களது செயற்பாட்டை மேற்கொள்ளவும் பயிற்சி முகாம்களை அமைக்கவும் ஆயுதங்களை வைத்திருக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்து எச்சரித்திருந்தார்.

இன்னுமொரு விடயம் உள்நாட்டில் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் கடல்வழிப்பாதைகள், விமானப்பாதைகள், நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பது ஒட்டுமொத்தமாக மாற்றமடைந்திருந்தது. அப்போது தீவிரவாதிகளின் ஊடுருவல் மிக கடினமானதாகவே இருந்தது.
கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு கிடைத்திருந்த நிம்மதி அவர்கள் சுவாசித்த சுதந்திர காற்று இந்த தீவிரவாதிகளுக்கு இடமளித்திருக்கின்றது.

கேள்வி; இராணுவம் முன்னாள் போராளிகளிடம் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு உதவிகளை கேட்டால் வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். அது எவ்வாறான உதவியாக இருக்கும்?

பதில்; கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் 512 ஆவது பிரிகேட் அங்குள்ள குறிப்பிட்ட போராளிகளை அழைத்து நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகள் தொடர்பாகவும் இனி வரும் காலங்களில் சில பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் எங்களுக்கு தகவல்கள் தெரிந்தால் அதனை தமக்கு தெரியப்படுத்துமாறும் ஒரு கட்டளையை பிறப்பித்திருந்தார். அந்தவகையில் நாங்கள் கூறியிருந்தோம், போராளிகளை ஒரு தேசிய பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்வதை இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொள்ளவேண்டும். இலங்கை அரசாங்கம் போராளிகளிடம் தேசிய பாதுகாப்புக்காக அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுமாறு கோட்டால் வழங்கத் தயார்.

வெறுமனே இராணுவம் அழைத்து தங்களுக்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது என்பது கடந்தகாலங்களில் பல கசப்பான சம்பவங்கள் இடம்பெற வைத்துள்ளது. கடந்தகாலங்களில் பிள்ளையானாக இருக்கலாம், கருணாவாக இருக்கலாம், இவர்களை போன்றவர்கள் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து செயற்பட்டு ஒட்டுக்குழுக்களாக மக்கள் மத்தியில் அறியப்பட்டிருக்கின்றனர்.

ஒரு விடுதலைப்போராட்டம் தாயக பிரதேசத்தில் எழுச்சி கொண்டு வருகின்றபோது ஏனைய சிறுபான்மையான முஸ்லீம்களை இலங்கை இராணுவம் பயன்படுத்தி விடுதலைப்போரட்டத்திற்கு குந்தகம் விளைவிக்க கூடிய பிரசன்னங்களை மேற்கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் கடந்த 21 ஆம் திகதிக்கு பின்னர் இடம்பெற்ற சம்பவங்களுக்கு பின்னர் நாங்கள் இந்த மண்ணை நேசிக்கின்றோம். இந்த மக்களை நேசிக்கின்றோம் முக்கியமாக தமிழ் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் கரிசனையாக இருக்கின்றோம். ஆகவே எங்கள் பிரதேசங்களில் இதுபோன்ற தாக்குதல்கள், குண்டுவெடிப்புகள் நிகழக்கூடாது என்றால் ஒவ்வொரு போராளியும் இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டால் இது தொடர்பான விழிப்புணர்வையும் புலனாய்வு பட்டறிவுகளையும் வழங்க தயாராகவுள்ளோம்.

கேள்வி; உங்கள் அனுபவத்தின் பிரகாரம் இந்த தீவிரவாத குழு இலங்கையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள எவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்கும்?

பதில்; இலங்கையை பொறுத்தவரையில் இஸ்லாமியர்களோடு தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை பார்க்கவேண்டும். கடந்த 15 தொடக்கம் 20 வருடங்களுக்கு முன்னர் இங்கிருந்த இஸ்லாமியர்களும் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ்ந்திருந்தார்கள். ஆனால் இங்கு சில அரசியல் சுயலாபங்களுக்காக அடிப்படை இஸ்லாமிய தீவிரவாதம் அரசியல்கட்சிகளால் முன்மொழியப்பட்டிருந்தது. முக்கியமாக வடக்கிலும் அதற்கு மேலாக கிழக்கிலும் சில அரசியல்வாதிகள் தங்கள் இருப்புக்காக அடிப்படை இஸ்லாமிய வாதத்தினை மக்களுக்குள் விதைத்துக்கொண்டிருந்தார்கள். புதிய புதிய மதரசாக்கள் உருவாக்கப்பட்டிருந்தது.

அதை தவிர எங்களிடம் ஒரு தகவல் உள்ளது. அதாவது கிழக்கில் அரபுக்கல்லூரி என்ற பெயரில் கிட்டத்தட்ட 3600 பில்லியன் பெறுமதியான பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. ஆகவே இதுபோன்ற விடயங்களுக்கான நிதிப்பின்னணி தொடர்பில் ஆராயப்படவேண்டும். இந் நிதி எங்கிருந்து வருகின்றது. எவ்வாறு நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது என்பது தொடர்பில் பார்க்கவேண்டும். வெறுமனே நாட்டுக்கு நிதி வருகின்றது என்பதற்காக நிதி வருவதற்கான கதவை இலங்கை அரசாங்கம் திறந்து வைத்துக்கொண்டிருக்கின்றது. அதன் விளைவை இன்று உணர்ந்துள்ளது. ஆகவே அதிகளவாக நிதி நாட்டுக்குள் வருவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அதற்குமப்பால் சில அரசியல்வாதிகளின் சொத்துவிபரங்கள் ஆராயப்படவேண்டும். ஒரு அரசியல்வாதி தொடர்ச்சியாக சொல்லிவருகின்றார். தான் அகதிமுகாமில் இருந்து அரசியலுக்கு வந்ததாக. ஆனால் இன்று அவரின் பெயரிலோ அவரின் சுற்றத்தாரின் பெயரிலோ உள்ள சொத்துக்கள் தொடர்பில் இலங்கையின் புலனாய்வு உன்னிப்பாக கவனத்தை செலுத்தவேண்டும்.

திடீர் திடீரென முஸ்லீம்கள் மத்தியில் உருவாகியுள்ள பொருளாதார வளர்ச்சி இலகுவாக தீவிரவாதத்துடனான உறவை கட்டியெழுப்பியுள்ளது.

கேள்வி; 1990 ஆம் ஆண்டு இஸ்லாமியர்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றியமையை தற்போதும் நியாயப்படுத்துகின்றீர்களா?

பதில்; 90 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இஸ்லாமியர்களை வெளியேற்றியதை இப்போது அல்ல அப்போதே சரியாகத்தான் பார்த்தோம். இஸ்லாமியர்கள் வடக்கில் இருந்து வெளியேற்றுவதற்கான உண்மைக்காரணம் கிழக்கில் ஏற்பட்ட சில அதிர்வலைகள் யாழ்ப்பாணத்தை சென்றடைந்துகொண்டிருந்தபோது சில நாசகார நடவடிக்கைகளுக்காக சில முஸ்லீம்கள் தயாராகிக்கொண்டிருந்தார்கள். அதை உணர்ந்துகொண்ட விடுதலைப்புலிகள் அமைப்பு அந்தக்காலத்தில் முஸ்லீம்கள் அவ்வாறான ஒரு தாக்குதலை நடத்தியிருந்தால் அது பாரிய உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தியிருக்கும். ஆகவே முஸ்லிம்களின் நலனை கருத்தில் கொண்டு தேசியத்தலைவர் பிரபாகரன் முஸ்லிம்களை வடக்கில் இருந்து வெளியேற்றியிருந்தார்.

கேள்வி; தற்போதைய நிலையை காரணம் காட்டி வடக்கில் இராணுவப் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளது இது தேவை என கருதுகின்றீர்களா?

பதில்; ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பு என்பது அல்லது அது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் பாதுகாப்பு தரப்போடு சம்பந்தப்பட்டது. இன்று இராணுவ பிரசன்னம் கூடுதலாக உள்ளது என தெரிவித்தால் தமிழ் மக்களது பாதுகாப்பை யாரிடம் இருந்து கோருவது. இராணுவம் தேவையில்லை என அனுப்பிவிட்டால் இங்கு ஓர் அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டால் அதற்கு யார் பொறுப்பெடுப்பது. ஆகவே நாட்டில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளால் மிகப்பெரும் குருதிகள் கொட்டப்பட்டுள்ளது. ஆகவே கடந்தகால யுத்த அனுபவங்கள் அல்லது ஒரு இறப்பின் வலியை தெரிந்துகொண்ட தமிழர்கள் தற்போதுள்ள நிலைமைகளை கருத்தில் கொண்டு இந்த விடயங்களுக்கு அனுசரணை வழங்க தங்களை தயார்படுத்திக்கொள்ளவேண்டும்.

கேள்வி; முள்ளிவாய்க்கால் நினைவு தினம் எவ்வாறு அனுஷ்டிக்கப்படவுள்ளது? உங்கள் பங்களிப்பு என்ன?

பதில்; முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்பாக போராளிகள் மட்டத்தில் நாங்கள் தற்போதும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றோம். மிக விரைவாக இந் நினைவு நாள் தொடர்பாக மக்களுக்கு முக்கிய முடிவுகளை வெளிப்படுத்துவோம்.

கேள்வி; முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை செய்ய ஓர் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த முறையும் உங்களோடு சிலர் முரண்பட்டிருந்தனர். எனவே போராளிகள் என்ற ரீதியில் அதனை நடத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளதா?

பதில்; அவசரகால சட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு பேருக்கு மேல் ஓர் இடத்தில் கூடினால் கைது செய்வதற்கு அனுமதியுள்ளது.

அதனை தவிர்த்து தற்போது நாடு இருக்கின்ற சூழ்நிலையில் அதிகளவில் மக்கள் கூடும் இடங்களில் அசம்பாவிதங்கள் இடம்பெறும் வாய்ப்புள்ளது. அந்த வகையில் முள்ளிவாய்க்காலில் மக்கள் ஒன்றுகூடுவது அல்லது அதற்கு யார் பாதுகாப்பு வழங்குவது அங்கு ஓர் அசம்பாவிதம் இடம்பெற்றால் இது பெரும் அனர்த்தத்திற்கும் பேரழிவுகளுக்கும் இட்டுச்செல்லும் என்கின்ற விடயங்கள் தொடர்பாக நாம் பேசிக்கொண்டிருக்கின்றோம். ஆகவே இந் நிகழ்வு தொடர்பில் நாம் விரைவில் ஊடகவியலாளர்களை சந்திப்போம்.

(Visited 1 times, 1 visits today)