மு.திருநாவுக்கரசு

தென்னைக்குத் தேள்கொட்ட புன்னைக்கு நெறிகட்டியது போல் உயிர்த்த ஞாயிறு தொடர்குண்டு வெடிப்புச் சர்வதேச பயங்கரவாதிகளை தேடிப்பிடிப்பதாகக் கூறி அதனுடன் சிறிதும் தொடர்பற்ற யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும், சிற்×ண்டிச் சாலை நடாத்துனரையும் இலங்கை இராணுவம் கைது செய்துள்ளது.

மேற்படி தொடர்குண்டு வெடிப்புக்களோடு சற்றும் தொடர்பற்றவர்கள் என்பதை அவர்கள் கூறும் கைதுக்கான காரணம் வெளிப்படையாக பறைசாற்றி நிற்பது மட்டுமன்றி அவ்வாறு கைது செய்யப்பட்டமைக்காக கூறப்படும் காரணமும்; மேலும் விநோதமானது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் நிழற்படத்தையும், விடுதலைப் புலிகள் மாவீரர்களது நிழற்படங்களையும் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் உள்ள தமது அறையில் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மாணவர் தலைவர்கள் இருவர் கைது செய்யப்பட்டதுடன் சிற்றுண்டி சாலை நடாத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி பார்க்கையில் இராணுவத்தினர் தேடிச் சென்ற தொடர்குண்டுத் தாக்குதல்களோடு சிறிதும் தொடர்பற்ற மேற்படி மாணவர்களும், சிற்றுண்டி சாலை நடாத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது அப்பட்டமாகத் தெளிவாகிறது. அப்படி என்றால் இந்த கைதுக்குப் பின்னால் வேறு உள்நோக்கம் உண்டு என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்க முடியாது.

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் உட்படுத்தியமைக்காக இவர்கள் கூறும் காரணத்தை முதலாவதாக ஆராய வேண்டியது அவசியம். அதாவது வெடிகுண்டு தேடிப் போனவர்கள் அதனுடன் சிறிதும் சம்பந்தப்படாத நிழற்படங்களை சர்வதேச வெடிகுண்டுகளாகச் சித்தரித்து மேற்படி நபர்களை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். நிழற்படங்களைப் பயங்கரவாதக் குண்டுகளாகச் சித்தரித்து மாணவர்களை சிறையில் அடைத்த விந்தை இலங்கையின் நீதித்துறையில் அரங்கேறியுள்ளது.

நிழற்படங்களை வைத்திருந்தமை பயங்கரவாதம் என்று சித்தரிப்பது என்றால் உலகில் யாரும் புத்தகங்களும் படிக்க முடியாது, பத்திரிகைகளும் படிக்க முடியாது, ஊடகங்களையும் பார்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடும்.

அரசியலில் படுகொலைகளை நியாயப்படுத்தி எழுதிய முக்கிய இராஜதந்திர எழுத்தாளராக மார்க்கியவல்லி காணப்படுகிறார். அப்படி என்றால் அவரது ஓவியத்தைத் தாங்கிய அவர் எழுதிய The Prince என்ற நூலை எந்தொரு அரசியல்வாதியும், அறிவியலாளர்களும், பொது மக்களும் படிக்க முடியாது. இவரே தத்துவார்த்த ரீதியில் அரச பயங்கரவாதத்தின் தந்தையாக விளங்குகிறார்.

அப்படியே இனப்படுகொலையால் அபகீர்த்தி பெற்று உலகம் வெறுக்கும் ஹிட்லரினதும், அவரது அரசியல் குருவுமான நியேட்ஸேயினதும் நிழற்படங்கள் காணப்படும் எந்தொரு நூலையும், பத்திரிகையையும் யாரும் வைத்திருக்க முடியாது. அப்படியென்றால் இந்த உலகில் கோடிக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இதன்படி பின்லேடனின் நிழற் படங்களையோ, சதாம் ஹசைன் மற்றும் கேணல் கடாபியின் நிழற்படங்களைத் தாங்கிய எந்தொரு ஆவணத்தையும் எந்தொரு அரசியல் தலைவரும், ஜனாதிபதிகளும், பிரதமர்களும் நூல்வடிவிலோ வேறு ஆவணங்கள் வடிவிலோ வைத்திருக்கவோ, பார்க்கவோ முடியாது.

மேற்படி பிரபாகரனினதும், மாவீரர்களினதும் நிழற்படங்களின் பேரால் கைதுசெய்யப்பட்டமையின் தொடர்ச்சியாக மாவீரர்களான தமது பிள்ளைகளின் நிழற்படங்களை வைத்திருக்கும் பெற்றோரும் தண்டனைக்குரிய குற்றவாளிகளாவர். இது உலகில் எங்குமில்லாத ஒரு விந்தையான சட்டமும், நடைமுறையும், நீதி முறைமையுமாகும்.

இவையனைத்திற்கும் அப்பால் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கென்று தனித்துவமான சிறப்புமிக்க வரலாறு உண்டு. அவர்கள் பயங்கரவாதத்தின் பேரால் அல்ல சமூக சேவையின் பேரால் தமது வரலாற்றுத் தடங்களைப் பதித்தவர்கள். உலகில் எந்தொரு பல்கலைக் கழகமும் வகித்திருக்காத நேடி அரசியல் சமூக சேவைப் பாத்திரத்தை நீண்டகாலமாக வகித்துவரும் சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டவர்களாக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் காணப்படுகிறார்கள்.

சமூக உணர்வும், பொது வாழ்வில் நேரடிப் பங்கு வகிக்கும் இந்த மாணவ பாரம்பரியத்தின் சிறப்பு பெரிதும் கவனத்திற்குரியது. இவர்கள் பல பத்தாண்டுகளாக தொடர்ந்து ஆற்றிவரும் சமூக சேவையின் பாரம்பரியத்தை விளக்க ஒரு சில உதாரணங்களை மட்டும் இங்கு மேற்கோள் காட்டலாம்.

1978ஆம் ஆண்டு பெரும் சூறாவளிக்கு கிழக்கு மாகாணம் இலக்காகி மக்கள் தமது நாளாந்த வாழ்நிலையை முற்றிலும் இழந்திருந்த சூழலில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் விரிவுரைகள் எல்லாவற்றையும் நிறுத்தி வைத்துவிட்டு வர்த்தக நிலையங்களுக்கும் மற்றும் வீடு வீடாகவும் சென்று பெருமளவிலான பணத்தையும், நிவாரணப் பொருட்களையும் திரட்டி கிழக்கு மாகாணத்திற்கு லொறிகள் மூலம் எடுத்துச் சென்று அங்கு முகாமிட்டுக் களப் பணியாற்றினர்.

பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் என அனைவரும் நெருக்கமாக இணைந்து சமூகப் பணியாற்றும் பாரம்பரியம் யாழ் பல்கலைக் கழகத்திற்குரிய சிறப்பு இயல்புகளில் ஒன்றாகும். மேற்படி 1978ஆம் ஆண்டு சூறாவளிக்கான நிவாரணப் பணியில் மாணவர்கள் ஈடுபட்டிருந்த போது விரிவுரையாளர்களும், பணியாளர்களும் மாணவர்களுடன் தோளோடு தோள் கொடுத்து செயற்பட்டனர். அவ்வேளை மாணவர்களுடன் இணைந்து செயற்பட்ட கலைப் பீடாதிபதி பேராசிரியர் ரொனி இராஜரட்ணம் மட்டக்களப்பிற்கான நிவாரணப் பொருட்களை இரவு லொறியில் ஏற்றிக்கொண்டிருந்த வேளை தானும் தோளில் பொதிகளைச் சுமந்து லொறியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டார். இது மாணவர்கள் மத்தியில் உணர்ச்சி ததும்பும் ஒரு நிகழ்வாக அமைந்திருந்தது. இது ஒரு பானை சோற்றிற்று ஓர் அவல் என்ற உதாரணம் மட்டுமே. இப்படி மாணவர்களும், விரிவுரையாளர்களும், பணியாளர்களும் இணைந்து சமூகப் பணி செய்யும் முன்னுதாரணமான வரலாற்றைக் கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களை “பயங்கரவாதிகள்’ என்று சித்தரிக்கும் அரசின் நடவடிக்கை வரலாற்றில் பெரிதும் நகைப்பிற்குரியது.

இந்தவகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் சமூகப் பணியை பல்வேறு துறைகளிலும், பல்வேறு பிரதேசங்களிலும், பல்வேறு காலகட்டங்களிலும் விரிந்து பரந்திருந்ததைக் காணலாம்.

இத்தகைய சிறந்த முன்மாதிரியையும், பாரம்பரியத்தையும் கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களை பயங்கரவாதிகளாக அரசு விநோதனமான முறையில் நிழற்படங்களை வைத்திருந்தார்கள் என்ற காரணத்தைக் காட்டி கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

அரசாங்கத்திற்கு பல உள்நோக்கங்கள் உண்டு. மேற்படி தொடர்குண்டுத் தாக்குதல்களோடு அரசாங்கத்தை தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுக்கள் பல எழுந்துள்ள நிலையில் இதற்கு மறைகரமாக இருக்கும் பயங்கரவாதிகளை ஆட்சியாளர்கள் குழாத்திற்குள் தேடவேண்டியதே உண்மையான நிலையாகும். சிங்களத் தலைவர்கள் பலரும் இது தொடர்பாக பல்வேறு சிங்களத் தலைவர்களை நோக்கி விரல் நீட்டி குற்றம்சாட்டி வருவது கவனத்திற்குரியது.

பிரதமரும், அமைச்சர்களும் ஒருபுறம் ஜனாதிபதியை நோக்கி விரல் நீட்டுகின்றனர். ஊடகவியலாளர்களும், அறிஞர்களும் இவ்வாறே ஜனாதிபதியை நோக்கி விரல் நீட்டுகின்றனர். இவை அனைத்திற்கும் அப்பால் இராணுவ பொலிஸ் புலனாய்வுத் துறையினருக்கும் இக்குண்டு வெடிப்புக்களில் மறைகரமான தொடர்புகள் உண்டு என்று ஊடகங்கள் எழுதுகின்றன. குறிப்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயாவை நோக்கி அமைச்சர்கள் வெளிப்படையாகக் குற்றம்சாட்டுகின்றனர். அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த விவாதத்தின் போது கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பேசுகையில் ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் இணைந்து ஒப்பந்த அடிப்படையில் பதவியாசை பிடித்த சிங்களத் தலைவர்கள் செயற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதில் அவர் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாயாவை சுட்டும் வகையில் தனது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். மேற்படி குண்டுவெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை கோத்தபாயா பதவியில் இருந்த காலத்தில் சம்பளம் கொடுத்து வளர்த்துவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

எப்படியோ இக்குண்டு வெடிப்புக்களுக்குப் பின்னால் அரசியல் தலைவர்கள் மற்றும் இராணுவ புலனாய்வுத் துறையினரின் மறைகரமான பங்களிப்புக்கள் பெரிதாக இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் பெரிதும் கவனத்திற்குரியவை. பெருந்தொகையான வெடிபொருட்கள் மேற்படி குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தாக்குதல்தாரிகளுக்கு எப்படிக் கிடைத்தது. இக்குண்டுகளைச் செய்வதற்கான தொழில்நுட்பத்தை இவர்கள் இலகுவில் அடைந்திருக்க முடியாது. இதற்குப் பின்னணியாக யார் இருந்தார்கள் என்ற கேள்விகள் எல்லாம் முக்கியமானவை.

மேலும் முன்னணி அரசியல்வாதிகளினதும், இராணுவ புலனாய்வுத் துறையினரதும் ஒத்துழைப்பின்றி இத்தொடர் குண்டுத் தாக்குதல்களை வெற்றிகரமாக ஒழுங்கமைத்திருக்க முடியாது. இவ்வாறு பார்க்கையில் இத்தாக்குதல்களுக்குப் பின்னால் காணப்படும் மறைகரமான கரங்கள் மிகவும் ஆபத்தானவையும், பயங்கரமானவையுமாகும். இத்தகைய மறைகர பயங்கரவாதிகளை கைவிட்டுவிட்டு, அவர்களைக் காப்பாற்றிக் கொண்டு பிரச்சினைகளை ஊடகங்களில் திசைதிருப்புவதற்கு ஏற்ற வகையில் இவற்றுடன் சற்றும் தொடர்பற்ற யாழ் பல்கலைக்கழக மாணவர்களை கைதுசெய்து இலங்கை அரசாங்கம் வேடிக்கை காட்டுகிறது.

தமிழ் மக்களுக்கு அநீதி இழைப்பதிலிருந்தே இலங்கையில் ஜனநாயகத்திற்கும், அமைதிக்கும், சமாதானத்திற்கும் புதைகுழி தோண்டப்பட்டது. 1955ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் டாக்டர். என்.எம்.பெரேரா பின்வருமாறு கூறிய எச்சரிக்கை இப்பொழுது நிதர்சனமாகியுள்ளது. தமிழ் மக்களுக்கு உரிய உரிமைகளை வழங்காது அநீதி இழைக்கப்படுமேயானால் அதன் வாயிலாக வெளி வல்லரசுகளின் வேட்டைக்காடாக இலங்கை ஒருநாள் மாறும் என்று கூறினார். அவரது கூற்று இன்று நிதர்சனமாகக் காட்சியளிக்கிறது.

தமிழ் மக்களுக்குரிய உரிய உரிமைகளை ஏற்றுக் கொண்டு அவர்களுடன் இணைந்து ஐக்கியமும், சுபிட்சமும் நிறைந்த நவீன இலங்கையை உருவாக்குவதற்குப் பதிலாக தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக அந்நிய அரசுகளிடம் மண்டியிட்டு அவர்கள் வாயிலாக இலங்கைத் தீவை இராணுவ மயப்படுத்தியதன் விளைவாக இன்று இலங்கைத் தீவே அந்நியர்களின் காலடிக்குள் பலியாகிக் கிடக்கிறது. இவ்வாறு தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படும் வரிசையின் தொடர்ச்சியாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமையும் அமைகிறது.

தமிழ் மக்களுக்கு நீதி இல்லையேல் இலங்கைக்கு ஜனநாயகமும் இல்லை, நீதியும் இல்லை, சமாதானமும் இல்லை, அமைதியும் இல்லை.

(Visited 1 times, 1 visits today)