சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை வழங்கினால் முதலில் என்னையே (ஜனாதிபதி) கைதுசெய்வார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்களிடம் கூறியுள்ளார். அதாவது தான் கைதாகக் கூடும் என்ற அச்சம் அவரிடம் இருக்கிறது என்றும் தெரிவித்த ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. குற்றமிழைக்கவில்லை என்றால் அவர் ஏன் பயப்பட வேண்டும் என்றும் கேள்வியெழுப்பினார்.

கே: நாட்டின் புதிய நிலைமை குறித்து உங்களது கருத்து?

ப: புதிய நிலைமை எனும் போது நூற்றுக்கு ஆயிரம் வீதம் சமாதானமாக இருந்த நாடு இது. கடந்த 10 வருடங்களில் அதிகாரிகள் சமாதானத்தை அனுபவித்தனரே தவிர பின்னால் திரும்பி நாட்டின் போக்கை அவதானிக்கவில்லை. நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை.

கே: ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் நாட்டின் பாதுகாப்பு நிலைமை எவ்வாறு உள்ளது?

ப: ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரான பதில்களின் மூலம், இவர்கள் எவ்வித ஆயத்தத்திலும் இருந்திருக்கவில்லை என்பது நன்கு புலப்படுகிறது.

கே: இந்த நிலைமைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர் என்று நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்?

ப: ஜனாதிபதியே பாதுகாப்பு அமைச்சர். அவரும் அவரின் கீழான பாதுகாப்பு சபையுமே பொறுப்பு. எனக்குக் கிடைத்த தகவலின்படி, பாதுகாப்புச் சபை இதனை விளையாட்டாக நோக்கியுள்ளது. இந்த பாதுகாப்புச் சபை நாட்டின் பாதுகாப்பு, பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் ஓரினத்தன்மை தொடர்பில் கவனம் செலுத்தாமல் அரசியல் ஒழுங்குப்பத்திரங்களின் பிரகாரம் செயற்பட முயன்றுள்ளது. இராணுவத்தினரையும் கூட அரசியலுக்காகவே பயன்படுத்தியுள்ளனர். இதனாலேயே நாடு துரதிர்ஷ்டமான நிலைமைக்கு முகங்கொடுத்துள்ளது. சிலரது கண்கள் இன்னும் திறக்கப்படவில்லை. மக்களை ஏமாற்றி, அவர்களைத் திசை திருப்பி தமது பதவிகளை தக்க வைத்துக் கொள்ளவே முயல்கின்றனர்.

கே: கண் திறக்காதவர்கள் யார்?

ப: பிரதானமாக ஜனாதிபதி. அவரே பாதுகாப்புப் பிரதானி. அவரின் கீழே மற்றைய அனைவரும் கடமையாற்ற வேண்டி ஏற்பட்டுள்ளது.

கே: முப்படைத் தளபதிகளும், பொலிஸ் மா அதிபரும் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது எனக் கூறியுள்ளனர். இதனை ஏற்றுக்கொள்வீர்களா?

ப: இல்லை. ஆட்சியாளர்களுக்கு இந்நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் எந்த அக்கறையும் இல்லை. சரியான புரிந்துணர்வும் இல்லை. இராணுவ அணிவகுப்பு நடத்தி, மரியாதை வழங்கினால் அனைத்தும் சீராக உள்ளது என அவர்கள் கருதுகின்றனர். இந்த நிலைமையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் களமிறங்கி சற்று நிலைமையைக் கட்டுப்படுத்தி, சிலரை கைது செய்கின்றனர்.இதன்மூலம், இந்த நிலைமை கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது என்று பொருள்படாது. நான் தொலைக்காட்சியில் பார்த்தேன், ஜனாதிபதி கிழக்கிற்கு சென்று உரையாற்றுகிறார், ‘அனைவரையும் பிடித்துவிட்டோம். இன்னும் இரண்டு, மூன்று பேர் மாத்திரமே பிடிக்கவேண்டியிருக்கிறது” இது எவ்வளவு கீழ் தரமான கருத்து?

கே: ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள்?

ப: இந்த விஜயத்துக்கு முதல் நாள் பாராளுமன்றத்துக்கு சென்ற பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி, 150 க்கும் குறைவான பயங்கரவாதிகள் இன்னும் மீதமாக உள்ளனர் என்றார். அவர்களில் 56 பேரை கைது செய்துள்ளதாக கூறினார். 24 மணித்தியாலங்களின் பின்னர் இரண்டு, மூன்று பேரே இருப்பதாகக் கூறினார்.

கே: பல்வேறு பகுதிகளில் வாள்களும் கத்திகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. இவை எதற்கான ஆயத்தமாக இருக்கலாம் என நீங்கள் கருதுகிறீர்கள்?

ப: தர்கா நகர் தாக்குதலை போன்று ஞான சார தேரரின் குழுவினர் செய்த அச்சுறுத்தல் மற்றும் திகனை சம்பவம் போன்றவற்றின் பின்னர் அவர்கள் பாதுகாப்புக்காக அவற்றை வைத்திருந்திருக்கலாம் என நான் கருதுகிறேன். சில வேளைகளில் எனது தொகுதியான பேலியகொடை, களனியை எடுத்துக்கொண்டால் அந்தச் சூழலுக்கேற்ப தனிப்பட்ட பாதுகாப்புக்காக சிலர் அவ்வாறான பொருட்களை வைத்திருப்பர்.

கையில் கத்தி இருந்தால் சிறு பாதுகாப்பாக இருக்கும். அவ்வாறான மனநிலையில் தான் அவற்றை வைத்திருக்க வேண்டும். எனினும், தற்போதைய நிலைமை அதனையும் விட ஆழமானது. அதனை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

கே: உங்களின் எண்ணப்படி இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்.

ப: நிச்சயமாக எமக்கு இறந்த காலம் நினைவிருக்கும். விடுதலைப் புலிகள் காலத்தில் கொழும்பின் பாதுகாப்பு இதனைவிடவும் பலமாக இருந்தது. ஆனால் தற்போது நான் வீட்டிலிருந்து இங்கு வரும்வரையும் ஒரு சோதனை செய்வதை கூட காணவில்லை. இங்கிருந்து பாராளுமன்றம் செல்லும் வரையில் கூட ஒரு சோதனை சாவடி கூட இல்லை. எனினும், சில இடங்களில் சிப்பாய்கள் இவ்விருவர் இருக்கின்றனர். அவர்களுக்கு முன்பாகவும் வாகனங்கள் செல்கின்றன, பைகளையும் சிலர் தூக்கிச் செல்கின்றனர். இவை சோதனையிடப்படுவதும் இல்லை. எனினும், விடுதலை புலிகள் காலத்தில், தாம் எடுக்க வேண்டிய நிலைமையை அனைவரும் உணர்ந்திருந்தனர். கடைநிலை சிப்பா#கள் வரை உணர்ந்திருந்தனர்.

கே: தற்போது அவ்வாறில்லை என்றா நீங்கள் கூறுகிறீர்கள்?

ப: தற்போதைய இராணுவத்தினரில் நூற்றுக்கு 50 சதவீதமானவர்கள் புதியவர்கள். யுத்தத்துக்குப் பின்னர் இணைந்துகொண்டவர்கள். பொலிஸாரும் அவ்வாறு தான். அவர்கள் முதல் தடவையாக இவ்வாறானதொரு சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர். அதனால் தற்போது நிலவும் பாதுகாப்பு நிலைமைகளில் ஓரிருவரை கைது செய்கின்றனர். அவரின் மூலமாக இன்னொருவரைப் பிடிக்கின்றனர். அதனைத் தவிர பொது வெளியில் மக்களுக்கு இடம்பெறும் குண்டுத் தாக்குதலை தடுக்கக்கூடிய வேலைத்திட்டங்களை நான் காணவில்லை.

அவ்வாறான பாதுகாப்புகள் இருக்கின்றது என்றால் மக்கள் அதனை உணரவேண்டும். அவ்வாறு உணர்ந்தால் அதற்கொரு பெறுபேறு இருக்கிறது. எனவே, தற்போதைய திட்டம் வெற்றியளிக்கக் கூடியது என்று நான் கருதவில்லை. நான் முன்னரே கூறியது போன்று, இதன் பெறுபேறுகளை அறிய இன்னும் இரண்டு வருடங்களாவது கால அவகாசம் தேவை.

கே: நீங்கள் நாட்டைப் பீதியடையச் செய்கிறீர்களா?

ப: இல்லை. அதுவே உண்மை. நாம் மீண்டும் பாரிய பாதுகாப்பு வலையமைப்பொன்றை கட்டமைக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு கூறுகின்றேன். ஜனாதிபதி கூறுவதைப்போன்று இரண்டு மூன்று பேரை கைது செய்வதன் மூலம் அவ்வாறான வலையமைப்பை உருவாக்க முடியாது. அதனை கட்டமைத்தால் மாத்திரமே மக்களால் நிம்மதியாக இருக்கமுடியும்.

இல்லை என்றால் எந்தநேரத்திலும் மீண்டுமொரு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்துவது இலகுவானதாக அமைந்துவிடும். அது மிகவும் இலகு. தற்போதும் கூட, எதிர்வரும் 13 ஆம் திகதி காலை 9 மணி முதல் 2 ஆம் திகதி வரை கொழும்பில் ஐந்து இடங்களில் குண்டுத்தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக எமது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாள் வித்தியாசப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, இவ்வாறானதொரு நிலையில் நாடு பாதுகாப்பாக உள்ளது என்று எவ்வாறு கூறமுடியும். மக்களே; இதில் பாதிக்கப்படுகின்றனர்.

பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பாக உள்ளார். குண்டுதுளைக்காத வாகனம் இருக்கிறது. பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கும் அவ்வாறுதான். எனினும், இதில் மக்களே பலியாகின்றனர். மக்கள் பீதியில் இருக்கும்போது நாம் எமது கடமையை நிறைவேற்றிவிட்டதாக திருப்தியடைய முடியாது. தற்போதுவரை அந்தக் கடமை நிறைவேற்றப்படவில்லை. நீண்டகால முயற்சியால் நூற்றுக்கு நூறு சதவீதம் விடுதலை புலிகளை ஒழித்ததைப் போன்று, சமாதானத்தை நிலைநாட்டக் கூடிய திட்டமொன்று இருப்பதாக நான் கருதவில்லை.

கே: ஜனாதிபதி மைத்திரியை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு நீங்கள் மிகவும் பாடுபட்டீர்கள். இந்த அர சா ங்கத்தில் நீங்கள் அமைச்சராகவும் இருந்தீர்கள். தற்போதும் நீங்கள் அரசாங்கத்தின் உறுப்பினர். நாட்டின் நிலைமை தொடர்பில் நீங்கள் ஏன் அரசாங்கத்தினுள் பேசவில்லை?

ப: சாதாரணமாக , தங்களது விடயப்பரப்பு தொடர்பில் மாத்திரமே அமைச்சர்கள் பேசுவர். அமைச்சரவையிலும் அவ்வாறு தான். எனக்கு வனஜீவராசிகள் அமைச்சு வழங்கப்பட்டிருந்தது. எனவே, எனது அமைச்சை பற்றி மாத்திரமே நான் பேசுவேன். ஏனைய அமைச்சர்களின் வேலைகள் பற்றி பேசவோ, அவற்றை பற்றி விமர்சிக்கவோ நாம் செல்வதில்லை.

கே: எனினும், நாட்டின் பொது பிரச்சினை பற்றி?

ப: அதற்கு வேறு நடைமுறை இருக்கிறது. அதற்கான பிரத்தியேக இயங்கு முறை இருக்கின்றது. அது உரிய முறையில் இயங்கும் என்று நான் கருதுகிறேன். தமது கடமைகளை சரியாக செய்வதாக ஏனைய அமைச்சர்களை போன்று நானும் நினைக்கிறேன். எனினும், இவ்வாறான பிரச்சினைகள் தோன்றும் போது மக்கள் பிரச்சினைகளை ஏற்படுத்த முயல்கின்றனர். இதனைத் தவிர அரசின் அமைச்சரானமைக்காக பாதுகாப்பு விடயங்களில் கவனம் செலுத்துவதில்லை . கவனம் செலுத்த வேண்டியதும் இல்லை. அதற்கு பொறுப்பா னவர்கள் இருக்கின்றனர்.

கே: இலங்கை வரலாற்றில் நீங்கள் முதலாவது பீல்ட் மார்ஷல். யுத்தக்களத்தில் செயற்பட்ட இராணுவத் தளபதி. அதனால் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தினுள் பேசுவதற்கு உங்களுக்கு விஷேட பொறுப்பு இருக்கிறது?

ப: அவ்வாறு எதுவும் இல்லை. ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாகவே நான் தற்போது இருக்கிறேன். நான் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி என ஜனாதிபதி கூறியிருக்கிறார். ஏனைய நாட்டில் இவ்வாறானவர்களுக்கு பொறுப்பு இருக்கிறது. இங்கிலாந்தின் பீல்ட் மார்ஷல்கள் அனைவரும் மகாராணியின் பாதுகாப்பு ஆலோசகர்களாக இருக்கின்றனர். இங்கு அவ்வாறில்லை. பா ஷா ங்கான அரசியல்வாதிகள் அவ்வாறான பொறுப்புகளை வழங்க விரும்புவதில்லை. ஏனென்றால், இவருக்கு இவ்வாறு பொறுப்பு வழங்கினால் அவர் தனித்து விளங்குவார் என்ற மனப்பாங்கு எமது அரசியல்வாதிகளிடையே உள்ளது.

கே: அனுபவத்திலா நீங்கள் இவ்வாறு பேசுகிறீர்கள்?
ப: நிச்சயமாக. 2015 ஜனவரி 8 ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் நான் பாராளுமன்ற உறுப்பினர் அல்ல. அதன்போது, உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என ஜனாதிபதி என்னிடம் கேட்டார். அவரே கூறினார், நீங்கள் கட்சியொன்றின் தலைவர் என்பதால் தவிசாளர் போன்ற கடமைகளை உங்களால் செய்ய முடியாது.

தூதுவராகவும் செயற்பட முடியாது என்று. நான் கூறினேன், இந்தியாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற பதவியொன்று இருக்கிறது. அதற்கு அமைச்சருக்கு சமனான அதிகாரமும் இருக்கிறது. அவ்வாறான பதவியொன்றை ஏற்படுத்தி என்னை அதற்கு நியமியுங்கள் என்றேன். அதன்பின்னர் இரண்டு தடவைகள் நினைவூட்டினேன். அவர் அதனைக் கைவிட்டார். அப்போது எனக்குப் புரிந்தது. எமது தயவில் இவர் ஜனாதிபதியானார். எனினும், எமக்கு அதிகாரம் கிடைப்பதில் அவருக்கு சிக்கல் இருக்கிறது என்று. அதன்பின்னர் நான் அது குறித்துப் பேசவில்லை.

கே: அந்த தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதா?

ப: தற்போது வரை அந்த தொடர்பு இருந்தது. எனினும், கடந்த வருடம் பெப்ரவரியில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் பதவிக்கு எனது பெயரும் அனுப்பப்பட்டது. அது கைவிடப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி தொடர்பில் என்னுள் இருந்த நம்பிக்கை இல்லாது போனது. அதன்பின்னர், நான் அவருடன் எந்த அரசியல் கொடுக்கல் வாங்கலிலும் ஈடுபடவில்லை. அவரும் இதனை விரும்புவதாக நான் கருதுகிறேன்.

கே: ஏன் அவ்வாறு?

ப: நாட்டின் விடயங்கள் தொடர்பில் அவருடன் கதைப்பதை அவர் விரும்புவதில்லை. அவ்வாறான மனநிலையே எனக்கும் தோன்றியது. அதனாலேயே நான் ஓர் ஓரமாக இருந்துகொண்டேன்.

கே: ஆறு மாதங்களில் தான் பாதுகாப்பு சபைக்கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை என பிரதமர் ரணில் தெரிவித்தார். உயிர்ந்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதற்கு முன்னர் குறைந்தது பாராளுமன்றத்திலாவது அவர் கூறியிருக்கவில்லை.
ப: ஆம். எனினும், அது தப்பித்துக் கொள்வதற்கான காரணம் இல்லை. அவர் அமைச்சரவைக்கோ, எமக்கோ, பாராளுமன்றத்துக்கோ கூறவில்லை. அதற்காக போராடவும் இல்லை. இந்த நேரத்தில் பிரதமர் இவ்வாறு செயற்பட கூடாது என நானும் கருதுகிறேன்.

மேலும், கடந்த மூன்று வருடங்களாக சட்டம், ஒழுங்கு அமைச்சு ஐக்கிய தேசியக் கட்சியின் வசமே இருந்தது. அதனால் இந்தப் பிரச்சினையிலிருந்து ஐக்கிய தேசியக்கட்சிக்கோ, அர சா ங்கத்துக்கோ விடுபடமுடியாது. எமக்கும் பொறுப்பு இருந்திருக்கிறது. எனினும், அது நிறைவேற்றப்படவில்லை. இந்த பிரச்சினை நீண்டகாலமாக இருந்திருக்கின்றது. கடந்த அர சா ங்கத்திலும் இருந்திருக்கிறது. அவர்களில் ஒருவராலும் இதிலிருந்து விடுபடமுடியாது.

எனினும், எம்மால் விடுபட முடியும். ஏனென்றால் எமக்குப் பொறுப்பிருக்கவில்லை. எம்மை யாரும் குறைகூற முடியாது. எல்லாக் கடமைகளுக்கும் பொறுப்பான நபர்கள் இருக்கின்றனர்.

கே: உங்களது கட்சியின் பொலிஸுக்குப் பொறுப்பான அமைச்சர்களுக்கு, சாதாரண பொதுமக்களை காட்டிலும் பொலிஸார் தொடர்பான புரிதல் இருக்கவில்லை என்று நீங்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தீர்கள்?

ப: ஆம். உங்களை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக நியமித்தால், அந்தக் கடமையை செய்யக்கூடிய சூழல் இருக்கிறதா என்று பார்ப்பீர்கள். அரசியல்வாதி எனும்போது அவ்வளவுதான். குறித்த விடயம் தொடர்பான முன்னறிவோ, அனுபவமோ இல்லாமல் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றால் என்ன நடக்கும்? பொலிஸாரால் நடத்தப்படும் மரியாதை அணிவகுப்புக்கு செல்வர் . எமக்கு கட்டடமொன்று தேவை என பொலிஸார் கூறினால் அதற்கு அமைச்சரவை பத்திரம் நீட்டுவர். இவற்றை மாத்திரமே அவர் செய்வார். குறைந்தது 5 வருட பொலிஸ் கான்ஸ்டபிளை போன்ற அறிவையாவது கொண்டிருக்க வேண்டும்.

இவை எதுவுமே இல்லாத ஒருவர் இந்தப் பதவிக்குச் சென்றால் எந்த வேலையையும் செய்ய முடியாது. அதுவே உண்மை. இவ்வாறானவர்களை பதவி நீக்கி தகுதியானவர்களை நியமிக்கும் போது, அவர்கள் கடமைகள் குறித்து வெளிப்படும்;.

கே: உங்களுக்கு சட்டம் ஒழுங்கு அமைச் சை வழங்குமாறு கட்சியினர் இப்போதே கூறுகின்றனர். முன்னரே கூறியிருந்தால் வழங்குவதற்கான வாய்ப்பு இருந்திருக்கும்?

ப: கடந்த வருடம் பெப்ரவரியில் முந்தைய அமைச்சர் தொடர்பில் பிரச்சினைகள் தோன்றின. அதன்போது, கட்சியினர் என்னைப் பரிந்துரைத்தனர். நீங்கள் கூறுவது போன்று ஆரம்பத்தில் என்னை எவரும் நினைக்கவில்லை. பிரதமர் கூட நினைக்கவில்லை. எனினும், அப்போதிலிருந்து இந்தக் கருத்து நிலவியது.

கே: பிரதமர் ரணில் உள்ளிட்ட குழுவொன்று கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்து, அவரிடமுள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவியைக் கோரியிருந்தனர் அல்லவா?

ப: கடந்த வாரம் செய்வ்வாய்க்கிழமை அந்த சந்திப்பு இடம்பெற்றது. முதன்முதலாக இதனை நான் ஊடகத்துக்கு தெரிவிக்கிறேன். பிரதமருடன் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, மலிக், கபீர் ஹாசிம் மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோரும் ஜனாதிபதியை சந்தித்தனர். அதன்போது, இந்தப் பதவி எமக்கு வழங்கப்படவேண்டும் என லக்ஷ்மன் கிரியெல்ல தொடர்ந்தும் வலியுறுத்தியதுடன் இதற்கு பீல்ட் மார்ஷலை நியமிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கே: இதற்கு ஜனாதிபதியின் பெறுபேறு எவ்வாறு அமைந்தது?

ப: இதற்கு ஜனாதிபதி சுருக்கமான பதிலொன்றை வழங்கி, இதனை அவருக்கு வழங்கினால், முதலில் என்னையே கைது செய்வார் என்று கூறியுள்ளார். அதாவது, தான் கைதாகக் கூடும் என்ற அச்சம் அவரிடம் இருக்கிறது. தான் குற்றமிழைக்கவில்லை என்றால் ஏன் அவர் பயப்பட வேண்டும். அத்துடன், அந்த அமைச்சு ஐக்கிய தேசியக் கட்சியின் வசமிருந்தபோது, அவர்கள் சரிவர கடமையாற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கே: இது குறித்து உங்கள் கருத்து?
ப: அவர்கள் கடமையாற்றவில்லைத் தான். தற்போதும் அவ்வாறே நடக்கிறது.

கே: எனினும், போதைப்பொருள், பாதாள குழு செயற்பாடுகள் ஒழிக்கப்படுகின்றன?

ப: மதூஷின் பின்னால் ஓடியமைக்காக அந்த அமைச்சு சரிவர கடமைகளை செய்கிறது என்று எவ்வாறு கூறுமுடியும். அது பொலிஸாரின் திறமையினாலேயே இடம்பெற்றது. மதூஷ் தவறுதலாகவே பிடிபட்டாரே தவிர, திட்டத்தினால் அல்ல. அவ்வாறானதொரு மனநிலையே அவர் இன்றும் உள்ளார்.

கே: உங்களுக்கு அமைச்சுப் பதவியொன்றை வழங்கி, பாதுகாப்பு சபைக்கு உங்களை ஆலோசகராக நியமிப்பதாக ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணிலிடம் தெரிவித்துள்ளாரே?
ப: அவ்வாறு கூறியுள்ளார். நான் வேண்டாம் என்று கூறினேன்.

கே: ஏன் அப்படி கூறினீர்கள்?
ப: இந்த அரசின் கீழ் வேறு எந்த அமைச்சையும் பொறுப்பேற்பதில்லை என்று நான் தீர்மானித்துள்ளேன். ஜனாதிபதி இன்னும் ஆறு மாதங்கள் பதவியில் இருப்பாரானால் நான் பாராளுமன்ற உறுப்பினராகவே இருந்துகொள்கிறேன். சட்டம் ஒழுங்கு அமைச்சு எனக்கு வழங்கப்படவேண்டும் என்பது மக்களின் வேண்டுகோள் என்பதால் நான் அதனை ஏற்றுக்கொள்வேன். அதனை விடுத்து ஆலோசகராக என்னை நியமித்து எனது வாயை அடைப்பதற்கு அவர் பார்க்கிறார். அவ்வாறு செய்தால் இவ்வாறு சுதந்திரமாக என்னால் செயற்பட முடியாது. எனவே, அந்த அமைச் சாய் தவிர வேறு எந்த அமைச்சு பதவிகளையும் நான் ஏற்கமாட்டேன்.

கே: கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இரகசிய தகவல் வழங்குநர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று நீங்கள் கருதவில்லையா?

ப: யுத்தத்தின் பின்னரான நிலைமை தொடர்பில் எனக்குத் தெரியாது. யுத்தகாலத்தின் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு உளவாளிகள் இருந்தனர். வடக்கு, கிழக்கில் இருந்த பெரும்பாலானோர் தமிழ், முஸ்லிம் இனத்தவர்கள். அவர்களுக்கு எமது புலனா ய்வுக் கணக்கிலிருந்து பணம் வழங்குவோம்.

இவை இராணுவத் தளபதியால் கையொப்பமிடப்பட்டு பாதுகாப்புச் செயலாளரால் அங்கீகரிக்கப்பட வேண்டும். சரியாயின் ஜனாதிபதியும் அங்கீகரிக்க வேண்டும். யுத்த காலத்தில் முஸ்லிம் இளைஞர்களுக்கு பணம் வழங்கப்பட்டிருந்தால், அவற்றுக்கு நானும் கையொப்ப மிட்டிருப்பேன். இவற்றை அண்மைய சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி சே றுபூசும் அரசியல் செயற்பாட்டை நான் விரும்புவதில்லை. யுத்தத்தின் பின்னரான கொடுப்பனவு குறித்து எனக்குத் தெரியாது.

நன்றி: லங்காதீப
தமிழில்:ரெ.கிறிஷ்ணகாந்

 

 

(Visited 1 times, 1 visits today)