தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வடசென்னை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் வடசென்னை. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். மேலும் படத்தில் டேனியல் பாலாஜி, இயக்குநர் அமீர், சமுத்திக்கனி, கருணாஸ் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (மார்ச் 8ம் தேதி) வெளியாகியுள்ளது.

தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வடசென்னை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அடங்கிய புகைப்படத்தை வெளியிட்டு, தான் நடிக்கும் அன்பு என்ற கதாபாத்திரத்தின் பெயரையும் அறிவித்துள்ளார். ஒரு போஸ்டரில் தனுஷ் போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்குவது போன்றும், மற்றொரு போஸ்டரில், கயிற்றை இழுப்பது போன்றும், வாயில் கத்தியை வைத்தபடியும் இருக்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் போஸ்டர் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கடந்தாண்டு வெளியான விஐபி 2 படமே தனுஷ் நடிப்பில் வந்த கடைசி படமாக இருந்தது. வடசென்னை படத்தைத் தொடர்ந்து தற்போது, ஹாலிவுட் படத்திலும், மாரி 2 படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 43 times, 1 visits today)