ந. லெப்டின்ராஜ்

உயிர்த்த ஞாயிற்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதலை பயன்படுத்தி இந்த நாட்டை முழுமையாக மீள இராணுவமயப்படுத்த இலங்கை இராணுவம் வெளிப்படையாக களமிறங்கியுள்ளது என்பது தெளிவாகின்றது என்று தெரிவித்த யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கலாநிதி குமார வடிவேல் குருபரன், ஏற்கனவே இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ள வடக்கையும் கிழக்கையும் இது இன்னும் மோசமாக பாதிக்கும் எனவும் தெரிவித்தார்.

ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

கேள்வி – உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இனப்பிரச்சினையின் போக்கை மாற்றி அமைக்குமா?

பதில்-  2009 இல் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழித்தொழித்ததன் பின்னணியில் அதன் அரசியல் வடிவத்தையும் முற்றாக மூடும் செயற்த்திட்டத்திற்கு சமாந்தரமாக சிங்கள பௌத்த அரசியல் தனது நிலவுகையை நியாயப்படுத்துவதற்காக புதிய எதிரியை தேடி வந்தது. அதில் முதன்மையானவர்கள் முஸ்லிம்கள். இரண்டாவது கிறிஸ்தவர்கள். இரண்டு சமூகங்களின் வழிபாட்டு தலங்கள் மீது ஆங்காங்கே குறிப்பிடத்தக்க வன்முறைகள் ஏவி விடப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் உதிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இது கிறிஸ்த்தவ சமூகத்தை பாதிக்கப்பட்ட சமூகம் (திடிஞிtடிட் ஞிணிட்ட்தணடிtதூ) என்றளவிலான அச்சத்துக்குள்ளும் முஸ்லீம் சமூகத்தை தாம் சமூகமாக குற்றவாளிகளாக பார்க்கப்படுவமோ என்ற அச்சத்திற்குள்ளும் தள்ளி விட்டுள்ளன. கிறிஸ்தவ சமூகத்தை சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலுக்கு நெருக்கமாகவும் முஸ்லிம்களை பொது எதிரியாக்கும் ஒரு முயற்சிக்கு இந்த சூழலை சிங்கள பௌத்த அரசியல் தலைமைகள் பயன்படுத்தலாம். முஸ்லீம் அரசியல் மற்றும் சிவில் சமூகமும் இந்த சந்தர்ப்பத்தில் தாம் ஸ்ரீலங்கா அரசின் (சிங்கள பௌத்த அரசின்) விசுவாசிகளே, அதற்கு எதிரானவர்கள் அல்ல எனக் காட்ட கடும் பிரயத்தனங்களை எடுத்து வருகின்றனர்.

‘நாமும் ஸ்ரீ லங்கன்ஸ் தான்’ என மீள மீள முஸ்லீம் செயற்பாட்டாளர்கள் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் தமிழர்களை, முஸ்லிம்கள் மீது தமிழர்களுக்கு உள்ள சந்தேகங்களைப் பாவித்து, சிங்கள பௌத்த அரசியலுக்கு நெருக்கமாக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.

உதாரணமாக பல்கலைக்கழக மாணவர் தலைவர்களை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்ய வந்த பொலீசார் ‘நாம் (சிங்களவர்களும் தமிழர்களும்) ஒன்றிணைந்து பொது எதிரியை (முஸ்லிம்களை) கையாள வேண்டிய சூழலில் எமக்குள் அடிபடக் கூடாது’ என்று சொல்லி விட்டு சென்றார். இவை யாவும் இந்த தாக்குதல்களின் பின்னணியில் இலங்கையில் இன உறவுகள், மற்றும் முரண்பாட்டின் செல்நெறியை திசை திருப்ப மடை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவோ என்ற சந்தேகத்தை உண்டு பண்ணுகின்றன.

கேள்வி -தமிழர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் முஸ்லீம் சமூகம் தொடர்பில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்?

பதில்-தமிழர்கள் இவ்விடயத்தை அறம் சார்ந்த கண்ணோட்டத்திலும் தந்திரோபாய கண்ணோட்டத்திலும் நோக்க வேண்டும். எண்ணிக்கையில் சிறுபான்மையான மற்றுமொரு இனம் நெருக்கடிக்குள்ளான காலப்பகுதியில் அவர்களுக்கு எண்ணிக்கையில் சிறுபான்மையான இன்னுமொரு சமூகம் சகோதரத்துவத்தை காட்டுவதே அறம் என்று நான் கருதுகிறேன். தமிழர்களும் அதையே செய்ய வேண்டும் என நான் கருதுகிறேன். சுயநிர்ணயத்திற்காக ஆயுதம் ஏந்திப் போராடிய இனமென்ற வகையில் நாம் அந்த விழுமியங்களை ஒழுகி நடக்க வேண்டும். சிங்கள பௌத்த அரசு தமிழர்களுக்கு எதிரான போரில் முஸ்லிம்களை தம் பக்கம் இழுத்து வைத்திருந்தது; வைத்துள்ளது. இப்போது முஸ்லிம்களுக்கெதிரான போரில் தமிழர்களை துணைக்கு அழைக்கும் போது (அது தார்மீக ரீதியாக அழைப்பாகினும்) நாம் அதே தவறை செய்யலாகாது. மௌனமும் தவறு தான். கை கட்டி அவர்கள் அடி வாங்கும் நேரமிது பார்த்துக் கொண்டு வாழாதிருப்போம் என்று கூறுவதெல்லாம் சிறுபிள்ளை மனநிலை. முஸ்லீம் அரசியல்வாதிகளால், புலனாய்வாளர்களால் எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மற்றும் கட்டவிழ்த்து விடப்படும் அநியாயங்களை முஸ்லீம் சமூகத்திற்கெதிரான முழுமையான வெறுப்புணர்வாக நாம் வளர்த்துக் கொள்ள வேண்டுமென சிங்கள பௌத்த அரசியல் விரும்புகின்றது. நாம் அதற்கு இரையாகி விடக் கூடாது. முஸ்லீம் தமிழ் இனங்களுக்கிடையிலான பகையை நாமே பேசித் தீர்க்க வேண்டும். எமது பகையை பேரினவாத அரசு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

இந்த விடயத்தில் முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு ஒன்றை சொல்ல வேண்டும்: உங்களது பதவி ஆசைகளுக்காக நீங்கள் சிங்கள பௌத்த அரசியல் பீடங்களுக்கு நெருக்கமாக இருந்து வந்துள்ளீர்கள். அதற்காக தமிழ் சமூகத்துடனான நல்லுறவையும் சீர் குலைக்க நீங்கள் தயங்கியதில்லை. இப்போதாவது திருந்திக் கொள்ளுங்கள். நாம் வாழும் வடக்கு கிழக்கு சுபிட்சமாக இருக்க நாங்கள் ஒன்று சேர வேண்டிய காலமிது என உணருங்கள்.

கேள்வி -உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முஸ்லீம் சமூகத்திற்குள் பரவி வரும் தீவிரவாத எண்ணங்கள் காரணமா?

பதில்-கடந்த பல ஆண்டுகளாகவே இத்தீவில் இஸ்லாம் அரேபியமயமாக்கம் செய்யப்பட்டு வரப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன். இஸ்லாத்திற்கு அந்தந்த பிராந்தியம், சூழமைவு சார்ந்து இருந்த பல்வகைமை ஒழிக்கப்பட்டு அரேபிய வழி இஸ்லாமே ஒரே இஸ்லாமிய மார்க்கம் என்ற நிகழ்ச்சித் திட்டம் எம் நாட்டின் முஸ்லீம் சமூகம் மத்தியில் ஆழவேரூன்றி விட்டதோ என அஞ்சுகிறேன். அதை பயங்கரவாத எண்ணம் கொண்டோர் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் எமக்கு சொல்லும் செய்தி. முஸ்லீம் சமூகம் மத்தியில் உள்ளிருந்து எழும் ஒரு உரையாடல் மூலமே இந்த தீவிரமயமாதல் கட்டுப்படுத்தப்படலாம் என நான் எண்ணுகிறேன். (சிங்கள பௌத்த) அரசு மூலமாக இஸ்லாமிய சமூகத்தின் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் இஸ்லாத்திற்கு எதிரான செயற்பாடுகளாக அந்த சமூகத்தை சேர்ந்தவர்களால் கணிக்கப்படுவதற்கு வாய்ப்புண்டு இவை கூடுதலாக எதிர்மறையான விளைவுகளையே கொண்டு வரும். அரசிடம் கலாசாரத்தை நிர்வகிக்கும் ஒழுங்குபடுத்தும் பொறுப்பை ஒரு பல்லின சமூகத்தில் கொடுக்கவே கூடாது. அப்படிச் செய்தால் அது பெரும்பான்மையின கலாசார எண்ணங்களை சிறுபான்மை சமூகங்கள் மீது திணித்து விடும். ஆகவே உண்மையான நீடித்து நிலைக்கக் கூடிய மாற்றம் வருவதாயின் முஸ்லீம் சமூகமே இந்த உரையாடலுக்கு தலைமை தாங்கி அதனுள் வளர்ந்திருக்கும் இந்த அதிதீவிரவாத கலாசார கூறுகளை நீக்க முயற்சிக்க வேண்டும்.

கேள்வி-  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் மீள் இராணுவமயமாக்கம் நடைபெறுகின்றதா ?

பதில்-இந்நாட்டின் பொலிஸ், இராணுவ புலனாய்வுத் துறை யுத்த காலத்தில் கட்டமைப்பில்லாத, விடுதலைப் புலிகளை அழிக்கும் ஒரே நோக்கம் கொண்ட ஒரு விதிகளுக்கும் உட்படாத புலனாய்வுத் துறையாக செயற்பட்டது. எந்த பேயையும் உருவாக்கவோ சேர்ந்து வேலை செய்யவோ புலனாய்வு யுத்தத்தின் போது தயங்கவில்லை. ஆவா குழுவை உருவாக்கியது கோத்தபாய தான் என்று சில வருடங்களிற்கு முன்னர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த ராஜித சேனாரத்ன இப்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்ட அமைப்பும் புலனாய்வுத்துறையின் நிதியில் ஆரம்பத்தில் இயங்கியது என்று கூறியுள்ளார். யுத்த காலத்தில் இயக்கத்தை எதிர்கொள்ள ஒரு முறைசாரா கட்டுப்பாடுகளற்ற புலனாய்வுத் துறை உருவாக்கப்பட்டது. அது தமிழ் சமூகத்தை சின்னாபின்னமாக்கியது. அது இன்னும் சீரமைக்கப்படாததன் விளைவே இந்த தாக்குதல்கள் என்று கூட கருதலாம்.

எது எப்படி இருந்தாலும் இலங்கை இராணுவம் இந்த நாட்டை முழுமையாக மீள இராணுவமயப்படுத்த இந்த தாக்குதல்களை வெளிப்படையாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர் என்பது தெளிவாகின்றது. இராணுவம் கேட்டதை எல்லாம் அவசர கால ஒழுங்கு விதிகளில் தந்துள்ளார்கள். ஏலவே மிக மோசமாக இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள வடக்கையும் கிழக்கையும் இது இன்னும் மோசமாக பாதிக்கும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த மே மாதம் 3ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) செய்யப்பட்ட தேடுதல் வேட்டையும் மாணவ தலைவர்கள் கைது செய்யப்பட்டமையும் இதை தெளிவாக எமக்கு உணர்த்தி நிற்கின்றன.

கேள்வி- உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

பதில்-உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் கோத்தபாய ராஜபக்ச சனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவானதாகவே இருந்தன. முஸ்லிம்களும், தமிழர்களும், மலையகத் தமிழர்களும் பெருவாரியாக கோத்தபாயாவிற்கு எதிராகவே வாக்களிக்கக் கூடிய சூழலில் கோத்தபாயாவால் 60 70% சிங்கள வாக்குகளை பெறுவதற்கான சாத்தியக் கூறு குறைவானதாகவே கருதப்பட்டது. கரு ஜெயசூரியவோ சஜித் பிரேமதாசாவோ எதிர்த்து போட்டியிட்டால் அவர்களால் கணிசமான சிங்கள வாக்குகளைப் பெற்று சிறுபான்மை சமூகங்களின் ஆதரவோடு ஆட்சி பீடம் ஏற முடியும் என்ற சூழலே இருந்தது. ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் இச்சூழலில் கணிசமானளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அச்சத்தில் உறைந்து போயுள்ள அனைத்து தரப்பட்ட மக்களும் கோத்தபாயவை விரும்பக் கூடிய சூழல் உருவாகி வருகிறதோ என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. முஸ்லீம் மக்களும் தம்மை கோத்தபாயாவிடமிருந்து தற்காத்துக் கொள்ள கோத்தபாயவிற்கு வாக்களிக்கக் கூடும் என்று ஒரு கணிப்பு உள்ளது. (தெற்காசிய சிறுபான்மை சமூகங்கள் பல பாதுகாப்பு அழுத்தத்திற்கு மத்தியில் இதனை ஒரு உத்தியாகவே கையாண்டு வந்துள்ளன). தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் இந்த நிலைமை மாறலாம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் வைத்துப் பார்க்கும் போது பயத்தை மூலதனமாக்கும் அரசியலே வெற்றி பெறக் கூடிய சூழல் உள்ளது.

(Visited 1 times, 1 visits today)