நஜீப் பின் கபூர்

பேராயர் விடுக்கும் எச்சரிக்கையும் முஸ்லிம்கள் மீதான நேசமும்
முன்னய அரசே தற்கொலைதாரிகளுக்கு சம்பளம் கொடுத்தது!
சர்வதேச பயங்கரவாதிகளிடத்தில் ஜனாதிபதி வேண்டுகோள் !
தாக்குதல் காரணமாக தேர்தலைத் தள்ளிப் போட வேண்டாம்!

ஸ்டர் தாக்குதல்கள் பற்றி செய்திகளில் இருந்து விடுபட்டு புதிய செய்திகளை வாசகர்களுக்குச் சொல்ல நாம் விரும்பினாலும் முற்றும் முழுதாக நாமும் உலகும் இந்த செய்தியிலிருந்து வெளியே வர முடியாதவர்களாக தவிக்கின்றோம். தாக்குதல் பற்றிய புதுப் புதுத் தகவல்கள் தினமும் வந்து கொண்டே இருக்கின்றன.

இந்தக் கொலையாளிகளுடன் யார் யாரெல்லம் உறவுகள் வைத்திருந்தார்கள் என்ற விடயத்தில் அதிர்ச்சியான தகவல்கள் சில தற்போது வெளியாகி இருக்கின்றன. இது பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

பக்தாதி உயிருடன் இருக்கின்றான் என்ற செய்தியும் இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதல் இந்த உலகில் எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று உலகநாடுகள் அனைத்தும் அதிர்ந்து போய் நிற்க்கின்றது.

ஐந்து வருடங்கள் தலைமறைவாகி இருந்த ஐஎஸ்ஐஎஸ் தலைவன் ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து வெளியே வந்திருப்பது இந்தத் தாக்குதலின் அவர்களின் வெற்றியைக் கோடிட்டுக் காட்டுகின்றது என்று எடுத்துக் கொள்ள முடியும். அத்துடன் இலங்கைபோன்ற அமைதிச் சூழ்நிலை நிலவுகின்ற எந்த நாட்டில் வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை.

இந்தத் துயரத்தில் இருந்து மீள்வது எப்படி என்று இலங்கை அரசு திண்டாடுகின்றது. இந்த நாட்டிலுள்ள ஒட்டுமொத முஸ்லிம்களும் அடுத்து என்னதான் நடக்கப்போகின்றது என்ற அச்சத்தில் உறைந்து போய் இருக்கின்றார்கள்.

நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களும் வெளியில் நடமாடுவதற்கே இன்று அச்சப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். விழாக்கள் சமய நிகழ்வுகள் கூட்டங்கள் என்ற அனைத்தையும் அவர்கள் தற்போது கைவிட்டிருக்கின்றார்கள்.

இதற்கிடையில் வாகனங்கள் இரண்டைப் பிரதமர் ரணில் கார்தினல் அவர்கள் பாவனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றார். இந்த வாகனங்கள் குண்டு துழைக்காதவை என்று தெரிந்ததும் நான் சாதாரண குடி மக்களில் ஒருவனாக வாழ்ந்து விட்டு சாக விரும்புகின்றேன். மக்கள் பாதுகாப்பின்றி நிர்க்கதியாக நிற்க்கின்ற இந்த நேரத்தில் நான் இந்த குண்டு துழைக்காத வண்டியில் சொகுசுப் பயணம் போகத் தயார் இல்லை என்று சொல்லி அந்த வாகனத்தைத் திருப்பி அனுப்பி இருக்கின்றார் பேராயர் மெல்கேலம் ரஞ்ஜித்.

அத்துடன் இந்தத் தாக்குதல் தொடர்பான குற்றவாளிகளை இனம் காண்கின்ற விடயத்தில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால்தான் மக்களுடன் வீதியில் இறங்கப்போகின்றேன் என்றும் அவர் எச்சரிக்கை செய்திருக்கின்றார்.

அரசு தனக்குத் தேவையானவர்களை பாதுகாத்துக் கொள்ள முனையும் என்ற அச்சம் அவரிடத்தில் இருக்கின்றது என்பதே இதிலிருந்து எமக்குப் புரிந்து கொள்ள முடிகின்றது. அத்துடன் குற்றத்தில் சம்பந்தமில்லாத சாதாரண முஸ்லிம் குடி மக்களை நாம் பாதுகாப்போம் என்று பேராயர் கூறி வருகின்றார். எனவே பயங்கரவாதிகள் யார் சாதாரண முஸ்லிம்கள் யார் என்பது பேராயருக்கு நன்கு புரிகின்றது.

கோதா குடியுரிமையை அமெரிக்கா இரத்துச் செய்து அதனை இலங்கையிலுள்ள தனது தூதரகத்தின் வாயிலாக அவருக்கு அறிவிப்புச் செய்திருக்கின்றது என்று கோதா ஊடகங்களுக்குச் சொல்லி இருப்பதுடன் இதன் பின்னர் நான் இந்த நாட்டுப் பிரசை மட்டுமே என்று அறிவித்திருக்கின்றார்.

நாம் ஏற்கெனவே சொன்னது போல் கோதாதான் மஹிந்த தரப்பு ஜனாதிபதி வேட்பாளர் என்பது உறுதியாகி வருகின்றது. அத்துடன் தான் பதவியேற்றால் இந்தப் பயங்கரவாதத்தை எப்படி அழிப்பது என்றும் தனக்குத் தெரியும் என்றும் சில தினங்களுக்கு முன்பே சொல்லி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் ஈஸ்டர் நிகழ்வுக்காக தேர்தலை தள்ளிப்போட வேண்டாம் அதனை உரிய நேரத்துக்கு நடாத்தி முடியுங்கள் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகின்றார்.

கோதா குண்டுதாரிகளுக்கு மாதச் சம்பளம் வழங்கினார் என்ற ஒரு பாராதூரமான குற்றச்சாட்டை முன் வைக்கின்றார் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் ராஜித சேனரத்ன. அத்துடன் ஒரு இராணு அதிகாரியின் கீழ் இவர்கள் வழிநடாத்தப்பட்டிருக்கின்றார்கள் என்றும் அவர் ஊடகங்களுக்குச் சொல்லி இருக்கின்றார்.

இருபதிற்கும் மேற்பட்டவர்களுக்கு இப்படி மாதாந்தச் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்று ராஜித குற்றச்சாட்டு நீண்டு செல்கின்றது. எமக்குத் தெரிந்த வகையில் காசுக்காக ஊழியம் பார்க்கின்ற இந்த ஆட்கள் இந்த நாட்டில் புலிகளை ஒடுக்குவதற்காக பணத்துக்காக வேலை பார்த்தவர்களைத்தான் அமைச்சர் ராஜித அரசியல் காரணங்களுக்காக கோதாவை சிக்க வைப்பதற்காக இப்படிப் பேசுகின்றார் என்று தோன்றுகின்றது. அதே போன்றுதான் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கும் இவர்களது தொடர்புகள் பற்றிய கதைகள் இருந்து வருகின்றது என்பது எமது கணிப்பு.

தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளுக்கு இந்த கொலைகாரர்கள் பணத்தை வழங்கி அதனுடாக பல காரியங்களையும் ஊடுருவல்களையும் பல்வேறு மட்டங்கள் செய்திருக்க முடியும்.

ஈஸ்டர் கொலையாளிகளை உலகளாவிய ரீதியில் போசிப்பதும் வளர்ப்பதும் அமெரிக்காதான் என்று இந்த நாட்டிலுள்ள இடதுசாரிகள் கருதுகின்றார்கள். ஜேவிபிவிமல் வீரவன்ச கூட இதுவிடயத்தில் அமெரிக்காவுக்குக் கை நீட்டுகின்றார்கள். அவர்களை விசாரணை என்ற பேரில் உள்நுழைய அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர்கள் அரசை எச்சரிக்கின்றார்கள். எனவே தான் ஐ.நா.வை இதுவிடயத்தில் இப்போது அரசு நாடி வருகின்றது என்று கருத முடியும்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் ஈஸ்டர் தாக்குதலால் கடும் சீற்றத்தில்; இருக்கின்றார் முஸ்லிம் பாடசாலைகள், அரபு மாதரசாக்கள் விடயத்தில் அவருக்குக் கடும் கோபம் ஏற்பட்டிருக்கின்றது. சமயத்தின் பேரால் பாடசாலைகள் இயங்கத் தேவையில்லை என்பது அவரது வாதம். ஜனாதிபதி மைத்திரியும் மதத்தின் பேரால் பாடசாலைகள் உருவாவதை எதிர்த்தே வருகின்றார்.

இந்த வன்முறையைத் தொடர்ந்து அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் சாடிக் கொள்வதைப் பார்க்க முடிகின்றது இதனை யார் தலையில் கட்டிவிடலாம் என்று சிலர் பார்க்கின்றார்கள். இன்னும் சிலர் இராஜதந்திரமாக காய் நகர்த்துகின்றார்கள். இது விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ முன்னணியில் இருந்து வருகின்றார் என்பதனை அவதானிக்க முடிகின்றது. முஸ்லிம்கள் விடயத்தில் இப்போது அவரிடத்தில் சற்று மென்போக்கு ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

சில அரசியல்வாதிகள் அடக்கி வாசிக்கின்றார்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள் குற்றச்சாட்டுக்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வது தொடர்பாக மட்டுமே தற்போது சிந்திக்கின்றார்கள்.

50 விகாரைகளில் தாக்குதல் நடத்தப்பட இருந்தது இது பற்றிய தகவல்களைச் சொல்கின்றேன் சிறைக்கு வாருங்கள் என்று ஊடகங்கள் வாயிலாக ஞானசாரர் பேசி இருக்கின்றார்.

பீல்ட மார்ஷல் பொன்சேக்கா பயங்கரவாதிகள் தற்கொலைதாரிகள் தொடர்பில் சில தகவல்களை புள்ளி விபரங்களைச் சொல்லி இருக்கின்றார். அதன் உண்மைத் தன்மையை உறுதி கூற முடியாது . அத்துடன் அவரை பாதுகாப்புத் தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் வழங்குங்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடத்தில் கேட்டிருக்கின்றார்கள்.

அதற்கு ஜனாதிபதி வனவிலங்கு அமைச்சையே செய்யத் தெரியாதவர் எப்படி இந்தப் பொறுப்பான பதவியைச் செய்ய முடியும்? இப்படி ஒரு கோரிக்கையை முன்வைக்க உங்களுக்கு வெட்கம் இல்லையா என்று ஜனாதிபதி மைத்திரி அவர்களிடத்தில் திருப்பிக் கேட்டிருக்கின்றார்.

பென்சேக்காவுக்கு ஒரு அதிகாரரீதியிலான பதவியைக் கொடுப்பதில்லை என்ற விடயத்தில் ஜனாதிபதி மைத்திரி மிகவும் உறுதியாக இருப்பது இதன் மூலம் தெளிவாகின்றது. ராஜபக்ஸாக்களும் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த ஒரு பதவி பொன்சேக்காவுக்குப் போவதை ஒரு போதும் விரும்பமாட்டார்கள்.

இந்தத் தாக்குதலுடன் கோதாவுக்கு எந்தத் தொடர்புகளும் இருக்கும் என்று தான் ஒருபோதும் கருதவில்லை என்று பீல்ட் மார்ஷல் பென்சேக்கா கூறுகின்றார். அதே நேரம் இந்த வெடி குண்டுகளைத் தாயாரிப்பதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரே முக்கிய பங்காற்றி இருக்கின்றார் என்றும் அவர் ஒரு முஸ்லிம் என்றும் ஒரு செய்திக் குறிப்பில் பார்க்க முடிந்தது. ஆனால் இதனை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் சர்வதேச ஒத்துழைப்புடன்தான் வெடி பெருட்களைத் தயாரித்திருக்க வேண்டும். அல்லது அதற்காகன பயிற்ச்சிகளை அவர்கள் நேரடியாகவே பெற்றிருக்க வேண்டும்.

இதற்கிடையில் இந்த முறை 2019 கோசம் போடும் மே ஓசை படாமல் போய்விட்டது. இதனால் எதிர்க் கட்சிகளின் விமர்சனத்தில் இருந்து இந்த முறை ஆளும் தரப்பு சற்றுத் தப்பிக் கொண்டது என்பதனை அவதானிக்க முடிந்தது.

எப்படியோ இன்னும் சில மாதங்களுக்காவது இந்த சூழ்நிலை காரணமாக ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு தனது பயணத்தை அமைதியாகத் தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் பொருளாதரம் மிகவும் கீழ்மட்டத்திற்குப் போவதை எவராலும் தடுக்க முடியாது. அத்துடன் இனிவரும் காலங்களில் பொருளாதார நெருக்கடிகளுக்கு ஈஸ்டர் தாக்குதலைக் காரணம் சொல்லிச் சொல்லியே நமது அரசியல் தலைவர்கள் பிழைத்துக் கொள்வார்கள்.

போருக்குப் பின் நாட்டை கட்டி எழுப்புவதாகக் கோஷம் போட்டவர்களால் அதனைச் செய்ய முடியாமல் போனது. நாடு கடன் தொல்லையில் மூழ்கிப் போனது அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்கள் பணத்தை கொள்ளையடித்து விட்டு எல்லாவற்றிற்கும் இன்று நியாயம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நாட்டின் அரசியல் இதற்குப் பின்னர் ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் பின் என்ற தெளிவான மாற்றங்களுடன் பயணிக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றது. இது தொடர்பாக எதிர்வரும் நாட்களில் விவரமாகப் பேச எண்ணுகின்றோம்.

எம்மைப் போன்ற அப்பாவி நாடுகள் மீது எதற்காகத் தாக்குதல் நடாத்துகின்றீர்கள். எம்மை விட்டுவிடுங்கள் என்று கொடிய பயங்கரவாதிகளிடம் நமது ஜனாதிபதி ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்

(Visited 1 times, 1 visits today)