மு.திருநாவுக்கரசு

நடந்து முடிந்த தாக்குதல் என்று இறந்த கால அர்த்தத்தில் பார்க்காது நடக்கப் போகும் எதிர்கால அரசியலுக்கான வேட்டைத் திமிங்கிலங்களின் வாய் விரிப்பாக உயிர்த்த ஞாயிறு நாள் தாக்குதல்களைப் பார்க்க வேண்டும். சிறுபிள்ளைத்தனமாக வெறுமனே பச்சைக் கண்கொண்டு பிரச்சினையைப் பார்க்காது ஆழ்ந்த அரசியல் ஞானக் கண்கொண்டு தமிழ்த் தலைவர்களும், தமிழ் அறிஞர்களும் இப்பிரச்சினையைப் பார்க்க வேண்டும்.

அரச நிறுவன பலம், ஆய்வு நிறுவனங்கள் மற்றும் ஆய்வுக்கான ஆளணி பண பலங்கள் இல்லாத பின்னணியில் குறிப்பாக அரசியல் தலைவர்களால் அறிவுபூர்வ அரசியல் விடயங்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் அறிவியல் சமூகப் பின்னணியில் இப்பிரச்சினை பற்றி துல்லியமான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், சரியான முடிவுகளை கண்டறிவதற்குமான வாய்ப்புக்கள் அரிதானவை. ஆயினும் பண்பாட்டுப் பாரம்பரிய பலங்கொண்ட ஒரு தேசிய இனம் என்ற வகையில் அதன் கௌரவத்திற்குப் பொருத்தமாக சரியான அறிவியல் முடிவுகளை எட்ட வேண்டியது அவசியம்.

மேற்படி முழுமையான ஆய்வுகளை மேற்கொள்வதற்குப் பொருத்தமான வளங்கள் அற்ற பின்னணியில் பிரச்சினையை குறுக்கு வெட்டுப் பார்வைக்கு ஊடான வெட்டுமுக அணுகுமுறையை மேற்கொண்டு ஏறக்குறைய சரியான அறிவியல் முடிவிற்கு வரவேண்டிய காலத்தின் கட்டாயம் இன அழிப்பிற்கு உள்ளாகிவரும் தமிழ் மக்கள் பக்கம் உண்டு.

உணர்ச்சிவசப்பட்டு சோடாக் காஸ் என சீறி எழவல்ல இளைஞர்களைத் தூண்டி சர்வதேச சக்திகளும், உள்நாட்டு இனவாத அரசியல் திமிங்கிலங்களும் உயிர்த்த ஞாயிறு நாள் தாக்குதல்களைத் தத்தம் நோக்கு நிலையில் இருந்து அரங்கேற்றியுள்ளன என்பதை தாக்குதல்களின் பின் உள்நாட்டு அரங்கிலும், வெளிநாட்டு அரங்கிலும் நிரூபித்து நிற்கின்றன.

கடவுளின் பெயரால் கொழுத்த ஆடு வளர்த்து இறுதியில் மாலை மற்றும் மேளதாள மரியாதையுடன் கோவிலின் பலிபீடத்தில் பாரிய கத்திக்கு இரையாக்கிப் பலியிடுவது போல முஸ்லிம் இளைஞர்கள் மேற்படி சர்வதேச சக்திகளினாலும், உள்நாட்டு திமிங்கிலங்களாலும் களமாட வைக்கப்பட்டனர். இத்தாக்குதல்களுக்குப் பின்னால் எதிர்கால அரசியல் ஆதிக்கத்தை நோக்கமாகக் கொண்ட உள்நாட்டு அரசியல் தலைவர்கள் உள்ளனர் என்று அவர்களின் பெயர் குறித்தும் இராணுவ உயர்பீடத்தவர்களின் கரங்கள் உள்ளன என்று பெயர் குறிப்பிடாமல் ஆனால் அவர்களின் பதவிநிலையைக் குறிப்பிட்டும் சுகாதார அமைச்சர் டாக்டர் இராஜித சேனரட்ன காணொளி வாயிலாக ஊடகச் செய்தி வெளியிட்டுள்ளார்.

மேலும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறான சந்தேகங்களை பலப்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டுள்ளார். பொதுவாக இவர்களின் கரங்கள் ராஜபக்ஷ குடும்பத்தை நோக்கி ஆக்ரோஷமாக நீண்டிருப்பதைக் காணலாம். இத்தகைய பின்னணியில் ஈழத் தமிழர்களின் பிரச்சினை மிகவும் ஆழமானது. இதனால் அதிகம் காவுகொள்ள இருப்பவர்கள் ஈழத் தமிழர்கள்தான். எனவே அவர்களின் நோக்கு நிலையில் இருந்து இப்பிரச்சினையை பெரிதும் ஆராய வேண்டிய பொறுப்பு தமிழ் அறிஞர்களுக்கும், தமிழ்த் தலைவர்களுக்கும் உண்டு.
தாக்குதலை நடத்திய கருவிகளின் நிலைப்பாட்டிற்கு அப்பால் இத்தாக்குதலுக்குப் பின்னணியாக இருந்த சக்திகளின் உள்நோக்கமும், அதனால் விளையக்கூடிய எதிர்காலப் போக்கும் பற்றி தெளிவான வரைபடத்தை வரைய வேண்டியதே இப்போதைய முழுமுதல் அவசியமாகும்.

இத்தாக்குதலால் எதிர்காலத்தில் இன்னல்களுக்கு உள்ளாகப் போகும் ஈழத் தமிழரின் தலைவிதியும், அதேவேளை இத்தாக்குதலின் சுமையைச் சுமக்கும் தாக்குதல்தாரிகளின் சமூகமான முஸ்லிம் மக்களின் உடனடி இன்னல்களையும் கருத்தில் கொள்ளத் தவறக்கூடாது.

முதலாவதாக முள்ளிவாய்க்காலைத் தொடர்ந்து எரிந்த புண்ணாய்க் காணப்படும் ஈழத் தமிழர்களின் வாழ்வில் கூரிய வேல்களென இனவாத ஆட்சியாளர்களின் அரசியல் செயற்பாடுகள் அமையவுள்ளன. அரசற்ற இனமாய், தட்டிக்கேட்க ஒருநாடும் அற்ற மக்களாய்ப் படுகொலை செய்யப்பட்ட இனமாய், சொந்தத் தலைவர்களினாலேயே கைவிடப்பட்ட இனமாய், எதிரிகளின் இரும்புச் சப்பாத்துக் கால்களின் கீழ் ஒப்படைக்கப்பட்ட மக்களாய் குரலற்றுக் காணப்படும் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி இங்கு பிரதானமானது. இத்தாக்குதல்களின் விளைவுகள் ஈழத் தமிழர்களை எங்கு கொண்டுபோய் விடப் போகின்றன என்பது ஆழ்ந்த கவனத்திற்குரியது.

உலகப் புகழ்பெற்ற சிறு நாவலான ‘கிழவனும் கடலும்’ (The Old Man and the Sea ) என்ற தலைப்பில் ஏர்னஸ்ற் ஹெம்பிங்வே (Ernest Hemingway ) எழுதியதற்கு ஒப்பான நிலையில் தமிழரின் கதியுண்டு. அதாவது மூத்த கிழவனான மீனவன் பெரும்பாடுபட்டு மார்லின் என்ற இராட்ஸச மீனை பிடித்துக் கொண்டான். அதனை கரைக்குக் கொண்டுவர பெரிதும் அவர் போராடிய நிலையில் பெரும் சுறாக்கள் அந்த இராட்ஸச மீனை பிச்சுப்பிடுங்கி ஏப்பமிட்டன. இறுதியாக கரையேறும் போது 18அடி நீளமான அந்த மீனின் முதுகெலும்பும், தலையும் மட்டுமே மிஞ்சியிருந்தது. இந்த நிலையிற்தான் தமிழரின் நிலை எலும்புக்கூடாய் மிஞ்சிக்கிடக்கிறது. இதுபற்றி தமிழ்த் தலைவர்களும், அறிஞர்களும் கடந்தகால தவறுகளையும், பிழைகளையும் கருத்திற்கொண்டு பொறுப்புணர்வுடன் புதிய பார்வையைச் செலுத்த வேண்டிய காலத்தில் மேலும் தமிழருக்கு எதிரான ஒரு சதிகார உள்நோக்கத்துடன் இத்தாக்குதலுக்கு உள்நாட்டு அரசியல் சக்திகள் பின்னணியாக இருந்துள்ளன.

இப்போது நடந்து முடிந்த தாக்குதல் பற்றிய பிரேதபரிசோதனையை ஒருபுறம் தள்ளிவைத்துக் கொண்டு மறுபுறம் இத்தாக்குதல்களால் ஏற்படக்கூடிய எதிர்கால அரசியல் நிலைமைகள் என்ன என்பதை முதலில் பரிசீலிப்போம்.

தாக்குதலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிப்படையான இலக்கு தமிழ் சிங்கள கிறிஸ்தவர்கள். தாக்குதல் களம் பெரிதும் தென்னிலங்கையானாலும் தமிழ் மண்ணான கிழக்கும் அதில் ஒரு பங்கு. தென்னிலங்கைக் களத்தில் இலக்குக்குரியவர்களில் சிங்களக் கிறிஸ்தவர்களும் ஒரு பகுதியினர். சிங்கள மக்கள் தொகையில் சிங்களக் கிறிஸ்தவர்களின் தொகை 5 வீதமாகும்.

இந்த 5 வீத கிறிஸ்தவர்களின் 4.5 வீதத்தினர் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாவர். அநேக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் என்பது மீன்பிடி சமூகமான ‘கரவ’ சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். பொதுவாக சிங்கள பௌத்தவர்களின் முதல் எதிரியாக சிங்களக் கிறிஸ்தவர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள பௌத்த சிங்கள மக்கள் தொகையை கிறிஸ்தவமாக பறித்தெடுக்கும் நிலையில் உள்ளவர்கள் என்ற குற்றச்சாட்டுடன் இவர்களையே சிங்கள பௌத்தர்கள் தமது முதல் எதிரியாகக் கருதுகின்றனர்.

இந்த 5 வீத சிங்கள கிறிஸ்தவர்களில் விதிவிலக்கான ஒருசிலரைத் தவிர பெருமளவில் இந்த 5 வீதத்தினரின் வாக்குக்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே பாரம்பரியமாக அளிக்கப்படும் வாக்குக்களாகும். ஆதலால் இவர்கள் மத்தியில் ஏற்படக்கூடிய எதிர்விளைவுகள் எதுவும் சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதல்ல. இப்பின்னணியில் இவர்களினால் சுதந்திரக் கட்சிக்கு எந்த இழப்பும் இல்லை.

மேலும் பெருமளவு தமிழ்க் கிறிஸ்தவர்களே இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவர்களினது வாக்குக்களும் சுதந்திரக் கட்சிக்கு எதிரான வாக்குக்கள்.

அடுத்து வாக்கு வேட்டை அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தை எடுத்துக் கொள்வது அவசியமாகும். நடந்து முடிந்த தாக்குதல்கள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் 52 வீதத்தினர் தமிழ் மண்ணிற்கு வெளியேயான சிங்களப் பகுதிகளில் சிதறுண்டு வாழ்கின்றனர். இவர்களது வர்த்தகத்திற்கும் நாளாந்த வாழ்விற்கும் இவர்கள் சிங்களவர்களை அனுசரித்து நடக்க வேண்டும். பாரம்பரியமாக முஸ்லிம் தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களாவர்.

விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரசின் தலைமையின் கீழ் அரசியல் பலமுள்ள சக்தியாய் மாறியுள்ளனர். தேர்தலில் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி தேர்தலின் போதும், நாடாளுமன்றத் தேர்தலின் போதும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் நிர்ணயிக்கவல்லதாய் மாறியுள்ளது. இந்த மாற்றத்தின் பின்னணியிற்தான் முஸ்லிம் காங்கிரஸ் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் ராஜபக்ஷ குடும்பத்திற்கும் மற்றும் தீவிர சிங்களபௌத்த அணியினருக்கும் எதிராகச் செயற்பட்டது.

மேற்படி தாக்குதலின் பின்னணியில் இனிவரும் காலத்தில் ஓர் அணியின் பக்கம் நிற்பது முஸ்லிம்களுக்குப் பாதகமானது. சிங்கள மக்கள் மத்தியில் 50க்கு 50 வீத பலத்தைக் கொண்ட கட்சிகளாக ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் உள்ளன. இந்நிலையில் தமது தற்பாதுகாப்புக் கருதி முஸ்லிம் மக்கள் தெற்கிலாயினும் சரி, தமிழ் மண்ணிலாயினும் சரி இருகட்சிகளையும் சரிக்குச் சரி சாரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஒருவகையில் முஸ்லிம் காங்கிரசின் அரசியல் பலம் இரண்டாகப் பிளவுண்டு போவதற்கான வாய்ப்புண்டு. அதன் அர்த்தம் கட்சி இரண்டாக பிரியும் என்பதல்ல.

முஸ்லிம்களின் 100 வீத வாக்குக்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் போவதற்குப் பதிலாக இரண்டாகப் பிரிந்து ராஜபக்ஷ அணிக்கும் சாயவேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதாவது ராஜபக்ஷ அணி பதவிக்கு வந்தால் என்ன, வராதுவிட்டால் என்ன அவர்களைக் கோபப்படுத்தும் வகையில் ஏகோபித்த ஆதரவையும் ஐதேகாவிற்கு வழங்க முடியாத நிலை உருவாகிவிட்டது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 4,49,072 வாக்கு இடைவெளியில் ராஜபக்ஷ தோல்வியடைந்தார்.

முஸ்லிம் மக்களின் வாக்குக்களை இரண்டாகப் பிரித்தால் அதாவது 2,50,000 வாக்குக்கள் ராஜபக்ஷ பக்கம் மாறி அளிக்கப்பட்டால் 5 இலட்சம் வாக்குகள் என்ற இடைவெளி அதில் உருவாகும். இப்பின்னணியில் முஸ்லிம்களின் அரைவாசி வாக்குக்கள் ஐதேகவின் கூடையில் இருந்து ராஜபக்ஷவின் கூடைக்கு மாறும் போது ராஜபக்ஷ குடும்பம் வெற்றியை நெருங்குவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இப்பின்னணியில் அதிக இனவாதத்தின் பெயரால் சிங்கள மக்களின் வாக்குக்களையும் மேலும் சிறிது உயர்த்தினால் ராஜபக்ஷ குடும்பம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான நம்பிக்கையை பெரிதும் கொள்ள முடியும். இத்தகைய விளைவுகளை மேற்படி தொடர் குண்டுத் தாக்குதல்கள் பாதுகாப்பு நோக்கு நிலையில் இருந்து முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும்.

ஆதலால் இத்தாக்குதலின் விளைவான முதல் கனியை தேர்தல் அரங்கில் ராஜபக்ஷ அணி மேற்கண்டவாறு உயர்த்திக் கொள்ள வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதேவேளை முஸ்லிம் சமூகம் இராணுவப் பிடியின் பீதிக்கும், இனக்கலவர வடிவிலான பீதிக்கும் உள்ளாகி தன் அரசியல் பலத்தை உள்ளார்ந்த ரீதியில் இழந்து தற்காப்பு அரசியலில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு சிங்கள அரசியல் கட்சிகளின் தயவை பெரிதும் நாடும் நிலை உருவாகும்.

ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அரசியல் தீர்வு, புதிய அரசியல் யாப்பு என்பனவெல்லாம் இனி பொய்புளுகுக்குக்கூட பேச இடமில்லாத நிலைமை இத்தாக்குதலால் உருவாக்கப்பட்டுவிட்டது. அது முடிந்த கதை.

இதில் மேலும் ஈழத் தமிழரின் நிலை மிகவும் பரிதாபகரமானதும், ஆபத்தானதுமாகும். இப்போது இராணுவ ஆட்சி ஏற்பட்டிருக்கும் இந்த இடைக்காலத்திற்குள் மஹாவலி எல் வலய குடியேற்றத் திட்டத்தை இராணுவ ஆட்சிப் பின்னணியில் சிங்கள ஆட்சியாளர்கள் விரைவாக நடைமுறைப்படுத்தி விடுவர். சுமாராக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் போதும் முல்லைத் தீவுவரை வெலியோயா குடியேற்றத்தை விஸ்தரித்து வடக்கையும், கிழக்கையும் நிலத்தொடர்பற்ற இருபகுதிகளாக பிரித்துவிடுவதற்கு.

மாகாணசபை ஆட்சியின் மூலம் வடக்கையும், கிழக்கையும் இருகூறுகளாகப் பிரிப்பதில் சிங்களத் தலைவர்கள் வெற்றிபெற்றுவிட்டார்கள். கிழக்கில் தமிழ் மக்கள் தமது அரசியல் பலத்தை முற்றாக இழந்துள்ளார்கள். இப்போது இந்த சிங்களக் குடியேற்றத் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் வடக்கையும், கிழக்கையும் புவியியல் ரீதியாக நிலத்தொடர்பற்ற பகுதியாகப் பிரிக்கும் தமது இறுதி இலட்சியத்தில் அவர்கள் வெற்றியடைந்து விடுவார்கள். 1949ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்லோயா திட்டத்தின் இறுதி இலக்கை அடைவதற்கான ஒரு தலையாயப் புள்ளியாக மஹாவலி எல் வலய குடியேற்றத்திட்டத்தை மேற்கொள்ளும் சதியை இத்தகைய குழப்ப நிலையின் பின்னணியில் இலகுவாக நிறைவேற்றப் போகிறார்கள்.

இதற்கான மாற்றுவழிகளைத் தமிழ்த் தலைவர்கள் காணத் தவறுவார்களேயானால் தமிழ் மக்களை இறுதி அர்த்தத்தில் இன அழிப்பிற்கு உள்ளாக்க இடம்கொடுத்த பழிக்கு அனைத்துத் தமிழ்த் தலைவர்களும் உள்ளாக நேரும். இச்சிறிய கட்டுரையில் மேற்கொண்டு நிலைமைகளை விபரிக்க முடியவில்லை.

2009 முள்ளிவாய்க்காலுக்கு முன் ‘வெள்ளைப் புலிகள்’ என வர்ணிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முள்ளிவாய்க்காலின் பின் அந்த முள்ளிவாய்க்காலின் சிவப்பு இரத்தத்தைக் குடித்துக் கொழுக்கும் ‘வெள்ளைப் பூனைகளாக’ மாறிய நிலையில் மாற்று அரசியல் சக்தியைத் தோற்றுவிக்க முனைந்த மாற்று அரசியல்வாதிகளின் பணி ஒன்றுதிரண்ட வகையில் எழுந்து வெற்றிபெறத் தவறினால் இறுதியில் அவர்களும் தமிழ் மக்களின் இறுதித் தோல்வியின் பங்குதாரர்கள் என்ற பழியை வரப்போகும் சில ஆண்டுகளுள் தலையில் சுமக்க நேரும்.

(Visited 1 times, 1 visits today)