பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 4ஆம் திகதி புலனாய்வுப் பிரிவினர் தகவல் வழங்கிய நிலையிலும், அந்தத் தகவலை நாட்டுத் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அறிவிக்காமல் பாரிய அழிவு ஏற்படுவதற்கு பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தெரிந்தே குற்றமிழைத்துள்ளதாக விஜயதாச ராஜபக்ஷ குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக இனங்காணப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தன்று கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் இதுவரையில் 359 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பலரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகின்றது.

(Visited 1 times, 1 visits today)