பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்து அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துஇஇங்கிலாந்தில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

பிரியங்கா பெர்னாண்டோவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், போராடும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், இலங்கையில் போர்குற்றமிழைத்த சகல போர்ற்குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அண்மையில் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கடந்த வருடம் இலங்கையின் எழுபதாவது சுதந்திர தினத்தன்று, லண்டனிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நோக்கி கழுத்தை அறுப்பேன் என்ற பொருள் பட பிரியங்கா பெர்னாண்டோ விரல் மூலம் சைகை செய்து கொலை அச்சுறுத்தல் விடுவித்தார்.

இந்த கொலை மிரட்டல் தொடர்பாக வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதி மன்றத்தில் கடந்த வருடம் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவ் வழக்கில் அவர் குற்றவாளி என இனம் காணப்பட்டு அவரை கைது செய்யக் கோரி வெஸ்மினிஸ்டர் குற்றவியல் நீதிமன்றமானது அவருக்கு பிடியாணை பிறப்பித்திருந்தது. எனினும் சில அழுத்தங்கள் காரணமாக, நீதிமன்றமானது இப் பிடியாணையை இரத்து செய்துள்ளது. இதனை எதிர்த்து ICPPG இனால் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்றுவரும் நிலையிலேயே மேற்படி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சொந்த நாட்டுக்கும் திரும்பி செல்ல முடியாமல் தங்களின் உயிர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்காகவும் விசாரணைக்கான தீர்ப்புக்காக அச்சத்துடன் காத்துக்கொண்டிருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)