அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை காலை நாடு திரும்பியுள்ளார்.

நாடு திரும்பிய அவரை அவரது ஆதரவாளர்கள் விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றிருந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இந்த விடயம் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோட்டாபய ராஜபக்ஷவை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

இலங்கை அரசியல் அமைப்பின் பிரகாரம் இரட்டை குடியுரிமைக்கொண்ட ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது. இதற்கமைய இரட்டைக்குடியுரிமையுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை காணப்பட்டது. இவ்வாறான நிலையிலேயே அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காலி மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குச் சென்ற கீதா குமாரசிங்கவின் பதவி அவரது இரட்டை குடியுரிமையைக் காரணம்காட்டி பின்னர் பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)