முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று காலை எமிரேட்ஸ் விமானத்தில் இலங்கை வரவுள்ளார்.

டுபாய் வழியாக இன்று காலை 8.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் கோத்தாபய ராஜபக்சவுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பு அளிப்பதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

கடந்த மாதம் 26ஆம் திகதி அமெரிக்காவுக்குச் சென்றிருந்த கோத்தாபய ராஜபக்சவுக்கு, எதிராக கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் கடந்த வாரம் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பாக அவரது மகளும், சித்திரவதைக்கு உள்ளான தமிழர் ஒருவரும் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக சிவில் வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் அவர் இன்று நாடு திரும்புவாரா என்ற சந்தேகங்கள் நீடித்து வந்தன.

இந்த நிலையில் இன்று காலை கோத்தாபய ராஜபக்ச கொழும்பு திரும்புகிறார் என்றும், அவருக்கு விரிவான வரவேற்பை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், கோத்தாபய ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கோத்தாயபய ராஜபக்சவுக்கு ஆசி வழங்கும் மத நிகழ்வு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடக்கவுள்ள வரவேற்பு நிகழ்வில், கோத்தாபய ராஜபக்ச உரையாற்றவுள்ளார். இதன் போது அவர் தனது எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து ஆதரவாளர்களிடம் வெளிப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)