இந்தியப் சுதந்திர போராட்டத்தின்போது கடந்த 1919-ம் ஆண்டு ஏப்ரலில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ஜாலியன்வாலா பாக்கில் பொதுமக்கள் ஒன்று கூடி அமைதியான வழியில் அறப்போராட்டம் நடத்தினர்.

அப்போதைய பிரிட்டன் ராணுவ ஜெனரல் டயர் உத்தரவின் பேரில் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி்ச்சூடு நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக இயந்திர துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்ட இந்த சம்பவம் இந்திய சுதந்திர போராட்ட வரலாறில் ஒரு துயரமான நாளாகும். இந்த சம்பவம் நடந்து இன்னும் 3 நாட்களில் 100 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது.
இந்நிலையில், பிரிட்டன் வாழ் இந்திய எம்.பி. வீரேந்திர சர்மா அந்நாட்டு பாராளுமன்ற மக்கள் சபையில் கடந்த 2017-ம் ஆண்டில் ஒரு தனிநபர் மசோதாவை கொண்டுவந்து விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

’1919-ம் ஆண்டு பஞ்சாபில் ஜாலியன்வாலா பாக்கில் நடந்த படுகொலைக்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். அமைதியுடன் ஒன்று கூடிய அப்பாவி மக்களை கொடூரமாக கொன்று குவித்ததை ஏற்க முடியாது. இதற்கு பிரிட்டன் அரசு முழு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும். அத்துயர சம்பவத்தை நினைவு தினமாக அறிவிக்க வேண்டும்’ என தனது தனிநபர் மசோதாவில் அபர் குறிப்பிட்டிருந்தார். அந்த மசோதாவிற்கு மேலும் 5 எம்.பி.இகள் ஆதரவாக கையெழுத்திட்டிருந்தனர்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் இரத்தம் தோய்ந்த எழுத்துக்களால் குறிப்பிடப்பட்ட ஒரு சம்பவம் என்றால் அது பஞ்சாப்பில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்வம்தான். ஜெனரல் டயர் என்ற ஆங்கிலேய தளபதியின் உத்தரவில் வெடித்த துப்பாக்கிகளுக்கு நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பலியாகினர்.

இந்த கோர சம்பவத்தின் 99-வது ஆண்டு நினைவு தினம் 13-4-2018 அன்று அனுசரிக்கப்பட்டபோது, பிரிட்டன் பாராளுமன்றத்தில் இந்திய வம்சாவளி எம்.பி விரேந்தர் சர்மா மீண்டும் கேள்வி எழுப்பினார். “அந்த கோர சம்பவத்தை நினைவு கூறும் கூட்டத்தில் பிரதமர் தெரேசா மே கலந்து கொள்ள வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் தெரேசா மே, “உறுப்பினர் விரேந்தர் சர்மா எழுப்பிய பிரச்சனை மிகமிக முக்கியமானது. இதனை பரிசீலிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு என்னுடைய பதிலை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்கிறேன்” என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

பிரிட்டன் நாட்டின் எதிர்க்கட்சியான தொழிலாளர் (லேபர்) கட்சி சார்பில் எம்.பி.யாக இருக்கும் விரேந்தர் சர்மா பஞ்சாபின் ஜலந்தர் பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 13-ம் தேதி இந்த கோரப்படுகொலையின் நூற்றாண்டு துக்கநாள் அனுசரிக்கப்படும் நிலையில், இதே பிரச்சனையை மையமாக வைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு இன்று பதிலளித்த பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ஜாலியன்வாலா பாக் படுகொலை இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்து வரலாறின் அவமானகரமானதொரு கரையாகும் என தெரிவித்துள்ளார்.

ஆனால், ஏற்கனவே வலியுறுத்தப்பட்டது போல் இதற்காக மன்னிப்பு ஏதும் கோராத தெரசா மே, இதுதொடர்பாக பிரிட்டன் நாட்டு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்த ‘வருத்தத்தை’ நான் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஜாலியன்வாலா பாக் சம்பவத்துக்கும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அடைந்த வேதனைக்கும் நாங்கள் வருந்துகிறோம் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)