30 வருட உள்நாட்டு போர் தந்த வலிகள் தேடல்கள் மனப் போராட்டங்களைச் சுமந்துகொண்டு இன்றும் குமுறிக்கொண்டிருக்கும் மாந்தர்களின் வலியையும் அவர்கள் எதிர்கொண்டுவரும் சமூக நெருக்கடியையும் சவாலையும் உலகத்துக்கு உரக்கச் சொல்ல வருகிறது “நெருங்சிமுள்’ திரைப்படம்.

197080 களில் ஈழத்து சினிமாத்துறையில் கோலோச்சவந்த டென்மார்க் சன் அவர்களின் தயாரிப்பிலும் இயக்கத்திலும் படைக்கப்பட்டிருக்கும் “நெஞ்சிமுள்’ புத்தாண்டு விருந்தாக இலங்கை ரசிகர்களுக்கு விருந்துபடைக்க தயாராகவிருகிறது.

ஈழத்து சினிமாவை சர்வதேச அரங்கில் பேச வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் கூடிய கதையம்சம், பாத்திர வார்ப்பு, ஒளி ஒலி என அனைத்திலும் தென்னிந்திய சினிமாவுக்கு எந்த வகையிலும் குறையாமல் படைக்கப்பட்டிருக்கும் மேற்படி திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான டென்மார்க் சன் அவர்களை ஞாயிறு தினக்குரல் சார்பாக சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்கள் பற்றி பிரசாரப்படுத்தப்பட்டிருக்கும் பிழையான பார்வையை சினிமா என்ற ஊடகத்தினூடாக களைய இருப்பதாகக் கூறும் சன் அவர்கள், நெருங்சிமுள் அதற்கான முதல்படி என்றும் தொடர்ந்தும் இதுபோன்ற கதைகளை திரையில் கொண்டுவந்து சிங்கள மக்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான ஒரு பாலமாக இருக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

கேள்வி:சினிமா மீதான ஆர்வம் ஏற்பட காரணம் என்ன?உங்களுடைய சினிமா பிரவேசம் பற்றி?

பதில்:சிறுவயது முதலே சினிமா இயக்குனராகவும் இசை அமைப்பாளராகவும் பிரகாசிக்க வேண்டுமென்பதே என்னுடைய இலட்சியமாக இருந்தது.

அந்த இலக்கை அடைவதற்காக 1960 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்தில் எனது படிப்பை பாதியில் கைவிட்டு அன்று கொழும்பில் இருந்த சிலோன் ஸ்ரூடியோவில் இணைந்தேன்.சினிமாவின் தொழில் நுட்பங்களை இரண்டு வருடங்கள் சுயமாக கற்று வந்தேன்.

இதன் பின்னர் இலங்கையிலுள்ள இம்பீரியல் டாக்கீஸில் சுமார் ஒரு வருட காலம் பணி புரிந்தேன். இந்த ஒரு வருட பணிக்காலத்தின்போது சிறிது பணத்தை சேமிக்க முடிந்தது. இவ்வாறு சேமித்த பணத்துடன் எனது தாயாரினதும் ஒரு நண்பரினதும் உதவியுடன் ”ஷான்ஸ் இன்டர்நஷனல்” என்ற நிறுவனத்தை 1971 ஆம் ஆண்டு ஆரம்பித்தேன்.

இந்த நிறுவனத்தின் மூலம் நான் இசையமைத்து சிங்கள மொழியில் நான்கு பாடல்கள் கொண்ட ஒரு உக இசைத்தடடை வெளியிட்டேன்.

இந்த இசைத்தட்டுக்கான ஒலிப்பதிவு முதன்முதலாக 1971 மார்ச் 30 திகதி நடைபெற்றது. அந்த வருட இறுதியில் இசைத்தட்டு வெளியிடப்பட்டது.

இதற்கான பாடல்களை காலஞ்சென்ற கருணாரத்ன அபேசேகர எழுதினார். அக்கால கட்டத்தில் தமிழகத்தில் கவிஞர் கண்ணதாசன் கவியரசராக விளங்கியது போல சிங்கள மக்கள் மத்தியில் கருணாரத்ன அபேசேகர பெரும் புகழ் பெற்று விளங்கினார்.

பாடல்களை பாடியவர் சிங்கள மொழிப் பாடகர்களில் மிகவும் புகழ் பெற்றவரான காலஞ்சென்ற ஹெச். ஆர். ஜோதிபால. இந்த ஒலிப்பதிவு வெற்றிகரமாக நிறைவடைந்ததால் எனக்குள் நம்பிக்கை மலர்ந்தது.

1971 மார்ச் 30 ஆம் திகதி இசைத்தட்டு வெளியானது. நான் நினைத்தது போலவே இந்த இசைத்தட்டு மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த இசைத்தட்டில் இடம்பெற்ற ”நீல தச புரா” என்ற பாடல் இலங்கையின் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.

சிங்கள இல்ல திருமணங்களின் போது இந்தப் பாடலை ஒலிபெருக்கியில் போடுவார்கள். அந்தளவுக்கு அந்த பாடல் புகழ் பெற்றது.

1972 ஆம் ஆண்டு இதே கூட்டணியை வைத்து ”ஒன்சிலி சிலி சில்ல மலேய” என்ற சிங்கள மொழி பாடல் இசைத்தட்டை வெளியிட்டேன்.

இந்த இசைத்தட்டிலுள்ள ஒன்சிலி சிலி சில்ல மலேய என்ற பாடல் நான் தமிழில் பாடிய ”குளிரடிக்குது கண்ணே பொன்னம்மா” என்ற பாடலாகும் .

1970 களின் பிற்பகுதியில் ”ஷிராணி”  என்ற சிங்களப் படத்தை தயாரித்து இசை அமைத்தேன் . இப்படம் 1983 க்குப் பின்னரே வெளியானது.

1983 ஆம் ஆண்டு இன கலவரம் வரையில் நான் சிங்கள தேசத்தில் முதல் தர இசைத்தட்டு தயாரிப்பாளர்களில் ஒருவனாகத் திகழ்ந்தேன்.

மேலும்,1974 ஆம் ஆண்டில் ”கலியுக காலே” எனும் சிங்களபடத்துக்கு முதன் முதலாக இசையமைத்தேன். இந்தப் படத்தை ”பாடல்களுக்காக ஓடிய படம்” என பத்திரிகைகள் பாராட்டி அன்று எழுதின.

இந்தப் படம் ”கலியுக காலம்” என்ற பெயரில் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட் டது. அதில் வந்த பாடல்க ள் அனைத்தும் இன்று வரை பிரபலமாக இருக்கின்றன.

”கலியுக காலே” சிங்கள படம் 1975 மார்ச் 7 ந் திகதி வெளியிடப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் தமிழ் ”கலியுக காலம்” படம் முன்னதாக 1974 ஏப்ரல் 14 ந் திகதியே வெளியிடப்பட்டு விட்டது.

தமிழ் படத்துக்கு இலங்கை வானொலி கலைஞர்களான ஜோக்கிம் பெர்னாண்டோ, விஜயாள் பீட்டர், எஸ். ராம்தாஸ், டி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், கே.எஸ். பாலச்சந்திரன், சுப்புலட்சுமி காசிநாதன் ஆகியோர் குரல் கொடுத்தனர். அமுதன் அண்ணாமலை பாடிய ஒரு பாடல் மிகப் பிரபலமடைந்தது.

இசை மீதிருந்த காதலினாலும், எனது தன்னம்பிக்கை, துணிவு காரணமாகவும் நான் பல்கலை கழகப் படிப்பையும் பின்னர் ஊதியத்துடனான வேலையையும் உதறித் தள்ளிவிட்டு முதல்முதலாக இசை அமைப்பாளனாக அடியெடுத்து, படிப்படியாக வளர்ந்து ஒரு இயக்குனராகவும் திரைப்பட தயாரிப்பாளராகவும் ஆனேன்.

கேள்வி:உங்களுடைய திரைப்படங்கள் பற்றி…?

பதில்:1981 ஆம் ஆண்டில் ”இளையநிலா” என்ற வண்ணப்படத்தை (உச்ண்tட்ச்ண இணிடூணிணூ) இலங்கையில் தயாரித்தேன். இந்தப் படத்தில் தியாகராஜன், தீபா, (மீண்டும் கோகிலா புகழ்) ஸ்வப்னா ஆகியோர் நடித்தனர்.

இப்படத்திற்காக எஸ்.பி. பாலசுப்ரமணியம், சைலஜா ஆகியோர் எனது இசையமைப்பில் பாடியுள்ளனர். பாடல் ஒலிப்பதிவிற்காக இவர்கள் இருவரும் கொழும்பு வந்தனர்.
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் முதல் நாளிலேயே, ஆரம்பமான சிலமணி நேரங்களிலேயே, கொழும்பில் இருந்த எனது வீடு சூறையாடப்பட்டபின் தீ வைத்து கொழுத்தி எரிக்கப்பட்டது.

அவ்வேளையில் எனக்கும் எனது குடும்பத்துக்கும் ஏற்பட இருந்த உயிர் சேதத்திலிருந்து நானும் எனது குடும்பமும் தப்பித்தோம். எனது வியாபார ஸ்தலமும் சூறையாடப்பட்டது. நான் தயாரித்த ”இளையநிலா” படத்தின் பிரதிகளையும் இழந்தேன்.

1985 ஆம் ஆண்டின் இறுதியில் ஓடியோ கசட்டுகள் வெளியிடும் நோக்கில் சென்னை வந்தேன். நண்பர் குகஆ அவர்கள் இலவசமாக எல்லா பாடல்களையும் பாடித் தந்தார். குகஆ பாடிய ”வசந்த கீதங்கள்” என்ற ஓடியோ காசட்டை ஏவிஎம் (அஙM) மூலம் வெளியிட்டேன்.

1986 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் டென்மார்க் சென்றேன். சென்ற உடனேயே அந்நாட்டு அரசு உதவியுடன் ”தொடரும் துயரங்கள்” என்ற குறும்படத்தை இசையமைத்து, இயக்கி, தயாரித்து வெளியிட்டேன்.

20 நிமிடங்கள் கொண்ட இந்தப் படத்தில் ஈழத் தமிழர்கள் ஏன் புலம் பெயர்கின்றனர் என்பதை கதையாக எடுத்தேன்.

”தொடரும் துயரங்கள்” படம் 1987 ஆம் ஆண்டு பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

ஆனால் தொடரும் துயரங்கள் திரைப்படத்தை அரசியல் காரணங்களுக்காக நான் வெளியிடவில்லை.நாங்கள் (தமிழர்கள்)ஏன் நாட்டை விட்டு புலம்பெயர்ந்தோம் என்ற காரணத்தைக் கூறும்பொழுது அரசாங்கத்தின் குறைபாடுகளையும் அங்கு சொல்லித்தான் ஆகவேண்டும்.

உண்மையை கூறும்பொழுது வலி ஏற்படுவது சாதாரணமானது தானே.

தொடர்ந்து முன்னணி பாடகர்களை வைத்து எனது இசையமைப்பில் பல ஓடியோ குறுந்தகடுகளை ஐரோப்பாவிலும் கனடாவிலும் வெளியிட்டேன்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எனக்கு 5 பாடல்களை எழுதியுள்ளார்.

டென்மார்க்கில் பல குறும்படங்களையும், இரண்டு முழுநீள படங்களாகிய ”தொண்டன்” மற்றும் ”மன்னிப்பாயா” ஆகியவற்றை இசையமைத்து, இயக்கி, தயாரித்துள்ளேன்.
சென்னையில் ”இரு கில்லாடிகள்” எனும் திரைப்படத்தை இசையமைத்து, இயக்கி, தயாரித்து வெளியிட்டேன்.

மேலும் அகத்தீ என்ற திரைப்படத்தை 2017 ஆம் ஆண்டு தயாரித்து இயக்கியிருந்தேன்.ஈழத்து கலைஞர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட திரைப்படம் அவுஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை திரையிடப்பட்டது என்றால் அது அகத்தீயையே சாரும்.அந்த பெருமை எனக்கே உண்டு.

கேள்வி:அகத்தீ திரைப்படத்தின் கதை என்ன?

பதில்:மேற்குலகத்தில் வாழும் ஒரு சில தமிழ் குடும்பங்களின் பிள்ளைகள் வயோதிப பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சென்று விடுகிறார்கள்.அதாவது வயது வந்தவுடன் அவர்களை தூக்கியெறிந்து விடுகிறார்கள்.இந்த போக்கு மேற்குலக நாடுகளின் கலாசாரமாக இருந்தாலும் தமிழர்களுடைய கலாசாரம் இதுவல்ல.பெற்றோரை இறுதிக்காலம் வரை அன்பாகவும் பாதுகாப்பாகவும் அரவணைத்து அவர்களை சந்தோசமாக வாழவைப்பதே தமிழர்களுடைய கலாசாரம்.ஆனால் மேற்குலகில் வாழ்கின்ற தமிழர்களிடமும் இன்று இந்த கலாசாரம் ஒடட ஆரம்பித்திருக்கிறது.

இந்த விடயத்தை வெளிச்சம் போட்டு காட்டும் படைப்பாகவே அகத்தீ திரைப்படத்தை எடுத்தேன்.இந்த படம் எங்களுடைய இளைய சமுதாயத்துக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் படைக்கப்பட்டது.

கேள்வி:நீங்கள் தற்போது தயாரித்து இயக்கிவரும் “நெருஞ்சி முள்’ திரைப்படம் உருவான பின்னணி பற்றி…?

பதில்:தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் சரியான முறையில் சிங்கள மக்களுக்கு கூறப்படுவதில்லை.அப்படி கூறப்பட்டாலும் அது சோடிக்கப்பட்ட கதைகளாகவே கொண்டு செல்லப்படுகின்றன.எனவே தமிழ் மக்களுடைய நியாயமான கோரிக்கைகள்,எதிர்பார்ப்புகள் அவர்கள் எதிர்கொண்ட வலிகள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் சிங்கள மக்களிடம் சரியான முறையில் கொண்டு செல்லப்பட வேண்டும்.அத்தோடு தமிழ் மக்கள் அனுபவித்த துன்பதுயரங்களும் அவர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே நெருஞ்சி முள் கதையை உருவாக்கினேன்.

எழுத்தாளர் கேசவராஜனை டென்மார்க்கில் இருந்து தொடர்புகொண்டு என்னுடைய எதிர்பார்ப்பை கூறி ஒரு கதையை தயார் செய்யுமாறு வேண்டினேன்.அவரும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அதற்க்கு தயாரானார்.

அதற்கிணங்க காணாமல் போன கணவனை தேடும் ஒரு பெண்ணின் விவகாரத்தை நெருஞ்சி முள் திரைப்படத்தினூடாக கொண்டுவர இருக்கிறேன்.

கேள்வி:சர்வதேச அளவில் பேசப்படுகின்ற ஒரு விவகாரத்தை கதைக்களமாக எடுத்திருக்கிறீர்கள்.இந்த திரைப்படத்தினூடாக நீங்கள் கூற இருக்கின்ற செய்தி என்ன?

பதில்:இலங்கையில் இருக்கின்ற தமிழ் மக்களுக்கு நான் இந்த திரைப்படத்தினூடாக எந்த செய்தியையும் கூற வரவில்லை.ஏனென்றால் அவர்கள் மிக துன்பத்துக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.பல துயரங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு நான் செய்தி கூறுவது அழகில்லை.இந்த குறிஞ்சி முள் திரைப்படத்தினூடாக புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு தான் நான் ஒரு செய்தியைக் கூற விளைந்திருக்கிறேன்.

ஈழத்தில் தமிழ் மக்கள் படும் வேதனைகள்,சோதனைகள்.துன்பங்களை புலம்பெயர்ந்த தமிழர்களிடத்தில் கொண்டு சேர்க்க இருக்கிறேன். ஐந்து வயது பிள்ளையுடன் காணாமல் போன தன்னுடைய கணவனைத் தேடி அலையும் ஒரு பெண் படும் அவலங்கள், துயரங்கள்,வேதனைகள்,சோதனைகளை இந்த திரைப்படத்தினூடாக காட்ட இருக்கிறேன்.

அதேபோல் சிங்கள மக்களையும் புலம்பெயர் மக்களையும் நான் ஒரே தராசில் வைத்து தான் பார்க்கிறேன்.சிங்கள மக்களுக்கு எங்களுடைய பிரச்சனைகள் சரியாக தெரியாது.அவர்களுக்கு எங்களுடைய மக்களுடைய பிரச்சினைகள் சரியாக தெரிந்திருந்தால் அவர்கள் எங்கள் மீது அனுதாபப்படுவார்கள்.

அரசியல் வாதிகள் தங்களுடைய இருப்புக்காகவும் தங்களுடைய தேவைகளுக்காகவும் மக்களிடம் மாற்றி மாற்றி கதைகளைக் கூறியதனால் தான் இன்னும் இந்த நாட்டில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது.

1971 ஆம் ஆண்டு முதல் என்னை சிங்கள மக்கள் நன்கறிவார்கள் என்ற அடிப்படையில் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக இருக்க நான் விரும்புகிறேன்.தமிழர்களுடைய பிரச்சினைகளை சினிமா என்ற ஊடகத்தினூடாக சிங்கள மக்களுக்கு கொண்டு சேர்க்க விரும்புகிறேன்.அதன் ஆரம்பம் தான் இந்த நெருஞ்சி முள்.

கேள்வி;நீங்கள் கூறினீர்கள் தமிழ் மக்கள் பற்றி சிங்கள மக்கள் மத்தியில் பிழையான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன என்று.உண்மையும் அதுதான்.இவ்வாறான சூழ்நிலையில் உங்களுடைய நெருஞ்சி முள் திரைப்படம் சிங்கள மக்கள் மத்தியில் போய் சேரும் என்று நம்புகிறீர்களா?

பதில்:நிச்சயமாக போய் சேரும் என்ற நம்பிக்கை என்னிடம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நம்பிக்கை வந்ததற்கு அண்மையில் நடந்த ஒரு சம்பவம் சாட்சி. “நெருஞ்சி முள்’ திரைப்படத்தை இலங்கையில் திரையிடுவதற்காக தணிக்கை சபைக்கு கொண்டு சென்ற போது எந்த ஒரு வெட்டும் இல்லாமல் திரையிடுவதற்கான அனுமதியை தணிக்கை குழு தந்திருக்கிறது.

அந்த தணிக்கை குழுவில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்கள இனத்தை சேர்ந்தவர்கள்.அவர்கள் குறிஞ்சி முள் திரைப்படத்தை நன்றாக ரசித்து பார்த்தார்கள்.அத்துடன் எந்த ஒரு இடத்திலும் காட்சிகளை வெட்டாமல் வெளியிடுவதற்கு அனுமதி தந்திருக்கிறார்கள்.இதுவே எனக்கு கிடைத்த முதல் வெற்றி.

நீங்கள் கேட்டது போல் சிங்கள மக்கள் மத்தியில் போய் சேருமா என்ற கேள்வி எழுந்திருந்தால் தணிக்கை சபையிலேயே அதற்கான தடை ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அங்கேயே ஏற்படவில்லை என்றால் நிச்சயமாக சிங்கள மக்கள் மத்தியில் இந்த திரைப்படம் பேசப்படும்.அத்துடன் ஒரு அரசியல் வாதியின் மனைவியும் இந்த திரைப்படத்தை பார்த்து பாராட்டியிருந்தார்.

சிங்கள மக்கள் மாத்திரமல்ல, தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கூட இந்த திரைப்படத்தை பார்த்து ரசிப்பார்கள்கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது.

கேள்வி:தமிழ் மக்களுடைய பிரச்சினை ஒன்றை கையிலெடுத்துள்ளீர்கள். இதனூடாக அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது நிவாரணம் வழங்க எதிர்பார்த்துள்ளீர்களா?

பதில்:வடக்கிலும் கிழக்கிலும் ஏறக்குறைய ஒரு இலட்சம் விதவைகள் இருக்கிறார்கள்.இவர்களுடைய பிள்ளைகளையும் சேர்த்தால் ஏறக்குறைய 45 இலட்சம் பேர் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தினூடாக வரும் வருமானத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கும் நான் எதிர்பார்த்திருக்கிறேன்.

அதாவது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வரும் அமைப்புகள் என்னுடன் தொடர்பு கொண்டால் நெருஞ்சி முள் திரைப்படத்தை “நிதி உதவி காட்சியாக’ ஒழுங்குபடுத்தி தருவதற்கும் அதில் கிடைக்கும் பணத்தை முழுமையாக வழங்குவதற்கும் நான் எதிர்பார்த்திருக்கிறேன்.

கேள்வி:உங்களுடைய தொடரும் துயரங்கள்” படம் 1987 ஆம் ஆண்டு பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவுக்கு அனுப்பப்பட்டது என்று கூறினீர்கள். ஏனைய படைப்புகள் எப்படி?

பதில்: நான் படைக்கின்ற திரைப்படங்கள் சர்வதேச அரங்குக்கு செல்ல வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள் அந்த அடிப்படையிலேயே என்னுடைய படைப்புகளை படைத்து வருகின்றேன்.நெருஞ்சி முள் திரைப்படமும் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு செல்லும் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது.படத்தை ரசிகர்கள் பார்க்கட்டும் .அப்பொழுது தான் அவர்களுக்கு விளங்கும் அந்த படத்தின் வீச்சு.

கேள்வி: நெருஞ்சி முள் பெரும்பாலான தமிழர்கள் எதிர்கொண்ட ஒரு பிரச்சினையை களமாக கொண்டது. அப்படியாயின் . இதில் நடித்தவர்களுடைய பாத்திர அமைப்புகள் பற்றி…?

பதில்:உயிரான பாத்திரங்களை இதில் நடிக்க வைத்திருக்கின்றேன்.இந்த திரைப்படத்தில் உண்மையாக பாதிக்கப்பட்ட கதாப்பாத்திரங்களேயே நடிக்க வைத்திருக்கிறேன்.அதேபோல் உண்மையான காட்சிகளை சம்பவ இடத்திலிருந்தவாறு படமாக்கியிருக்கின்றேன்.காணாமல் போன உறவுகள் மேற்கொண்டுவரும் போராட்டங்களை ஸ்தலத்திலிருந்து கொண்டு படமாக்கியிருக்கின்றேன்.

இந்த படம் முழுக்க முழுக்க உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டது.எந்தவொரு இடத்திலும் சோடனைகள் சோடிக்கவில்லை.நடந்தவைகளை நடந்த மாதிரியே காட்டியிருக்கிறேன்.

கோப்பாய் என்னுடைய பிறந்த மண் என்பதால் கோப்பாயை பிரதான தளமாக கொண்டு கதை நகர்கிறது.அநேகமான காட்சிகள் கோப்பாயில் படமாக்கப்பட்டன.அதேபோல் ஹட்டன்,நீர்கொழும்பு,கொழும்பு நீதிமன்றம் போன்ற இடங்களில் படக் காட்சிகளை அமைத்துள்ளேன்.

நெருஞ்சிமுள் படமும் சரி, பட காட்சிகளும் சரி நிஜமே தவிர நிழல் அல்ல.
கண்டிப்பாக இந்த படம் ஆவணப்படுத்தப்படும்.அத்துடன் சர்வதேச மெங்கும் இந்த படம் திரையிடப்படவிருப்பதால் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் பல பிரச்சினைகளில் ஒரு பிரச்சினை சர்வதேசமெங்கும் வெளிச்சம்போட்டு காட்டப்படவிருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்தை வேற்று மொழிகள் பலவற்றிலும் திரையிடுவதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்.

கேள்வி:உண்மைச் சம்பவம் ஒன்றை திரைப்படமாக்குவது இலகுவான காரியமல்ல.அதுவும் இலங்கை அரசாங்கத்துக்கு தலையிடியாக இருந்து வரும் ஒரு விவகாரத்தை கதைக்களமாக கொண்டு ”நெருஞ்சிமுள்”திரைப்படத்தை இலங்கையிலேயே எடுத்து அதை இலங்கையிலேயே திரையிடுவதற்கும் தயாராகி வருகிறீர்கள்.நிச்சயம் பல சவால்களுக்கு முகம் கொடுத்திருப்பீர்கள்.அது பற்றி?

பதில்:நான் யாருடனும் பிரச்சினைக்கு போகாமல் சாதுரியமாக நடந்ததனால் எனக்கு எந்தப் பிரச்சினையும் வரவில்லை.பணிய வேண்டிய இடத்தில் பணிந்து ஒதுங்க வேண்டிய இட த்தில் ஒதுங்கி வேலை செய்ததால் எனக்கு எந்த பிரச்சினையும் வரவில்லை.

இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தில் கதை சுருக்கத்தை பதிவு செய்து,படப்பிடிப்பு நடத்தும் இடங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் அறிவித்து அவர்களிடமிருந்து அனுமதியைப் பெற்று படப்பிடிப்புகளை நடத்தியதனால் எனக்கு எந்த தடைகளும் வரவில்லை.
நான் எப்பொழுதுமே உண்மையை பேசி வெளிப்படையாக நடந்துகொள்பவன்.என்னுடைய புத்தகம் திறந்த புத்தகம். யாரும் பார்க்கலாம்.என்னுடைய புத்தகம் மூடிய புத்தகம் அல்ல.

கேள்வி”நெருஞ்சிமுள்” எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்:நிச்சயமாக பெரிய தொரு மாற்றம் வரும் என நம்புகிறேன்.
கேள்வி”நெருஞ்சிமுள் எங்கெல்லாம் திரையிடப்படவிருக்கிறது?
ஒரே நாளில் 20 திரை அரங்குகளில் வெளிவரவிருக்கிறது ”நெருஞ்சிமுள்”.யாழ்ப்பாணத்தில் ராஜா, கார்கில்ஸ், பாலா சாவகச்சேரி, சாரு பருத்தித்துறை கொழும்பில் மெஜஸ்ரிக், சினிசிற்றி, சினிவேர்ல்ட், கெப்பிற்றல், கிங்ஸ்லி, கொன்கோர்ட், ஈரோஸ் மட்டுநகர் சாந்தி, சுகந்தி, வவனியாவசந்தி, திருமலை சரஸ்வதி, ஹற்றன் விஜிதா, நுவரெலியா றீகல், மாங்காடு கிபேஷ், செங்கலடி செல்லம், கட்டுகஸ்தோட்ட எறினா ஆகிய திரை அரங்குகளில் எதிர்வரும் புத்தாண்டு திரைவிருந்தாக திரையிடப்படவிருக்கிறது.அதனை தொடர்ந்து மிக விரைவில் உலகமெங்கும் திரையிடப்படவிருக்கிறது.

கேள்வி:ரசிகர்களுக்கு நீங்கள் கூறும் செய்தி?

பதில்:தென்னிந்தியாவிலிருந்து இலங்கை திரைகளுக்கு வரும் அனைத்து படங்களையும் இலங்கை ரசிகர்கள் பார்க்கிறார்கள்.அது நல்ல படமாக இருந்தாலும் சரி நல்ல படம் இல்லாவிட்டாலும் பார்க்கிறார்கள். படத்தை பார்த்துவிட்டு தான் அந்தப் படம் நல்ல படமா இல்லையா என்பதை கூட தீர்மானிக்கிறார்கள்.

அந்த அடிப்படையில் எம்மவர் படங்களையும் திரைகளில் பார்த்து அவர்களுக்கும் அங்கீகாரத்தையும் உற்சாகத்தையும் கொடுங்கள்.

நிச்சயமாக நான் அடித்து கூறுகிறேன் ”நெருஞ்சிமுள்”ஒரு சிறந்த படைப்பு.தென்னிந்திய சினிமாவுக்கு எந்த விதத்திலும் குறைந்து போகாத வகையில் இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறேன்.

ஒளிப்பதிவாக இருக்கட்டும் ,ஒலிப்பதிவாக இருக்கட்டும் ,காட்சி அமைப்புகளாக இருக்கட்டும் அனைத்தையும் சர்வதேச சினிமாவுக்கு ஒத்த வகையில் இந்த திரைப்படத்தை படைத்திருக்கிறேன்.நீங்கள் திரையரங்குக்கு எதிர்பார்த்து வரும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இந்த படைப்பை உருவாக்கியிருக்கிறேன் .

புது வருடத்துக்கு ரசிகர்களுக்கு சிறந்த விருந்தை தருவதற்கு நான் தயாராகிவிட்டேன்.திரையரங்குக்கு வாருங்கள்…ஈழத்தமிழனின் விருந்தை ருசித்து செல்லுங்கள்.எங்களுக்கு ஆதரவு தாருங்கள்.

(Visited 1 times, 1 visits today)