அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் இந்தியாவில் உள்ள டேராடூனில் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது.

நாணய சுழற்சியை வென்ற அயர்லாந்து அணி துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் சிக்கிய அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 172 ஓட்டங்களுக்குள் சுருண்டது. முர்டாக் 54 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆப்கானிஸ்தான் சார்பில் யாமின் அகமத்சாய், முகமது நபி ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ரஷித் கான் மற்றும் வக்கார் சலாம்கெய்ல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ஹஷ்மத்துல்லா ஷஹிதி 61 ஓட்டங்களிலும், அஸ்கர் ஆப்கான் 67 ஓட்டங்களிலும் வெளியேறினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரகமத் ஷா 98 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 314 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அயர்லாந்து தரப்பில் ஸ்டூவர்ட் தாம்சன் 3 விக்கெட்டும், ஆண்டி மெக்பிரின், ஜேம்ஸ் கேமரூன் டவ், ஜார்ஜ் டாக்ரெலி ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, அயர்லாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. அந்த அணியின் ஆண்ட்ரு பால்பிர்னி 82 ஓட்டங்களிலும் கெவின் ஓ பிரையன் 52 ஓட்டங்களிலும் வெளியேறினர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. பின்வரிசை துடுப்பாட்டக்காரர்கள் ஓரளவு தாக்குப் பிடிக்க அயர்லாந்து அணி 2வது இன்னிங்சில் 288 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் 5 விக்கெட்டும், யமீன் அஹமத் சாய் 3 விக்கெட்டும், வகார் சலாம்கெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 147 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து கொண்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)