ஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் கடந்த வெள்ளிக்கிழமை 8ஆம் திகதி ஜெனிவாவில் வெளியிடப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பற்றிய அறிக்கை (A/HRC/40/23) ஸ்ரீ லங்கா அரசிற்கு பல இறுக்கமான செய்திகளுடனான பல வேண்டுகோள்களை முன் வைத்துள்ளது. இவ் அறிக்கை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பல விதங்களில் சில நம்பிக்கை ஊட்டும் செய்திகளைக் கூறுகிறது.

இந்த அறிக்கைக்கும் ஐ.நா மனித உரிமை சபையில் 40 ஆவது கூட்டத் தொடரில் கொண்டுவரவிருக்கும் தீர்மானத்திற்கும் பல தொடர்புகள் இருந்த பொழுதிலும், தீர்மானம் என்பது மனித உரிமை சபையில் நாற்பத்தி ஏழு (47) நாடுகளின் சிந்தனையில், முடிவுகளில் தங்கியுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆணையாளரின் அறிக்கை பதினைந்து பக்கங்களையும் எழுபத்தி இரண்டு பந்திகளையும் கொண்டுள்ள அதேவேளை, ஐந்து பிரிவுகளையும் கொண்டுள்ளது. இந்த ஐந்து பிரிவுகளும் முன்னுரை; ஸ்ரீலங்கா அரசுடனான சமரசம்/ தொடர்பு; பொறுப்புக்கூறல் அரசியல் தீர்வு பற்றிய முன்னேற்றம்; மற்றைய மனித உரிமை விடயங்கள்; முடிவுரையும் சிபாரிசுகளென பிரிக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையானது 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலானதுவென குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்து பந்திகளைக் கொண்டுள்ள முன்னுரையைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசுடனான தொடர்பு/ சமரசம் என்ற பிரிவு நான்கு பந்திகளைக் கொண்டுள்ளது. இப் பிரிவில் 2015 ஆம் ஆண்டு முதல் மொத்தமாக எட்டு ஐ.நா வின் விசேட பிரதிநிதிகள் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ளதாவும் இதே காலப் பகுதியில் ஐ.நா மனித உரிமை கண்காணிக்கும் ஏழுகுழுக்களும், ஐ.நா பூகோள ஆய்வும் ஸ்ரீலங்காவை பரிசீலித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ் அறிக்கையின் மூன்றாவது பிரிவான பொறுப்புக் கூறல், அரசியல் தீர்வு ஆகியவற்றின் முன்னேற்றம் என்ற பிரிவு நாற்பத்தி ஒரு பந்திகளை உள்ளடக்கியுள்ளது.

இப்பிரிவில் கடந்த ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் நடைபெற்ற சர்ச்சைகளை குறிப்பிட்டு இறுதியில் அங்கு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்து சிறிலங்காவில் நிலை மாற்று நீதி (கூகீஅNகுஐகூஐONஅஃ ஒக்குகூஐஇஉ) என்பது மிகவும் குறைந்த முன்னேற்றம் காணப்படும் காரணத்தினால் பாதிக்கப்பட்டோர் இதில் நம்பிக்கை இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு காணாமல் போனோர் பற்றிய காரியாலயம் உருவாக்கப்பட்டதை பாராட்டும் ஆணையாளர், பாதிக்கப்பட்ட பலர் இக்காரியாலயம் பற்றி முழு நம்பிக்கையும் கொள்ளவில்லையெனக் கூறுகிறார்.

பாதிக்கப்பட்டோரது குடும்பத்தினர் காணாமல் போயுள்ள தமது உடன் பிறப்புக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை அறிய ஆவலாக உள்ளார்கள் எனவும் இதனால் இக்காரியாலயம் இக்குற்றங்களை இழைத்தோரை இனம் காணவோ வழக்குத் தொடரவோ முடியாத காரியாலயமாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள், உறவினர்கள் பார்க்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இப் பிரிவில் மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட புதை குழிகள் பற்றி குறிப்பிடும் வேளை, அங்கு முன்னூறு (300) க்கு மேற்பட்ட எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொறுப்புக் கூறல் விடயத்தில் மிகவும் குறைந்த முன்னேற்றமே காணப்படுவதாகவும் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியும் பிரதமரும் அங்கு வெளிநாட்டு நீதிபதிகள், வெளிநாட்டு உதவிகள் தேவையற்றவையென கூறுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவை பொறுத்தவரையில் பொறுப்புக் கூறல் விடயத்தில் உள்நாட்டில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை என்பது இவ் அறிக்கையில் மிகவும் அழுத்தம் திருத்தமாகக் கூறப்பட்டுள்ளது. அரசியல் தீர்வு விடயத்தில் மிகக் குறுகிய சில முன்னேற்றம் காணப்படுவதாகவும் கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து யாவும் ஸ்தம்பித நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ் ஆணையாளரின் அறிக்கை பயங்கரவாதச் சட்டம் திருத்தி அமைப்பதில் உள்ள தடங்கல்கள், அத்துடன் ஸ்ரீ லங்கா மீண்டும் மரண தண்டனையை கொண்டு வருவதற்கு முயற்சிப்பதைக் கண்டித்துள்ளது.

2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி ஸ்ரீலங்காவினால் ஆணையாளருக்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவலின் பிரகாரம், பயங்கர வாதச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் ஐம்பத்தி எட்டு (58) வழக்குகள் நடைபெறுவதாகவும் இன்னும் மூவர் மீது வழக்குத் தாக்கல் செய்வதற்கு தயாராகவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்காவின் புள்ளி விபரங்களுக்கு அமைய எழுபத்தி ஐந்து (75%) வீதமான காணிகளை திரும்பக் கொடுத்துள்ள போதிலும் அங்கு சொத்துகள் சூறையாடப்பட்ட வழக்குகள் உள்ளதாகவும், குடியேற்றங்கள் தனியார் காணிகள் பறிக்கப்படுதல், இராணுவம் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபடுதல் போன்ற விடயங்கள் இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு முன்பு நடைபெற்ற பல படுகொலைகள், காணாமல் போயுள்ளவர்கள் பற்றி ஒழுங்கான விசாரணையோ நீதியோ பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என இங்கு மிகவும் அழுத்தம் திருத்தமாக பெயர், சம்பவதிகதி ஆகியவற்றுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் ஆவன 2008 க்கும் 2009ஆம் ஆண்டிற்கும் இடையில் கொழும்பில் காணாமல் போயுள்ள பதினொரு பேருடைய வழக்கு, 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட இருபத்தி ஏழு (27) பேரது சம்பவம், 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெலிவேரியவில் ஊர்வலம் செய்தவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம், 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களது சம்பவம், 2006ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. நடராஜா ரவிராஜின் சம்பவம், 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காணாமல்போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலி கொடவின் சம்பவம், 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின் சம்பவம் ஆகியவற்றுடன் 2018 ஆம் ஆண்டு மார்ச் 5ஆம், 8ஆம் திகதிகளில் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற இனக்கலவரம், 2018 ஆண்டு ஜனவரி மாதம் எவஞ்சலிக்கல் கிறிஸ்தவ தேவாலயம் தாக்கப்பட்ட எண்பத்தி ஆறு (86) சம்பவங்கள் இவ் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதேவேளை மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவின் நியமனம், இராணுவ முன்னாள் அதிகாரி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய பிறேசில் கொலம்பியாவில் சர்வதேச நீதி விசாரணைக்கு எடுக்கப்பட்ட விடயம் உட்பட பல விடயங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்அறிக்கையில் சிவில் சமூகத்தில் ஒருபகுதியினர் ஸ்ரீலங்காவை ஐ.நா பாதுகாப்புச் சபைக்கும் சர்வதேச நீதி மன்றத்திற்கும் அனுப்பிவைக்க வேண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ் ஆணையாளரின் அறிக்கை வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக ஐ.நாவின் அவதானிகள், புத்திஜீவிகள், கல்விமான்கள், அனுபவம்மிக்க மனித உரிமைச் செயற்பாட்டதளர்கள் கருதுகின்றனர்.

(Visited 1 times, 1 visits today)