பேராசிரியர் செ.யோகராசா

மலையக எழுத்தாளர் மு.சிவலிங்கம் எழுதிய ‘உயிர்’ என்ற இந்நாவல் மலையக வரலாற்றில் முக்கிய இடம்பெறக் கூடியதொன்று. அது மட்டுமன்றி ஈழத்து நாவல் வரலாற்றிலேகூட முதன்மை பெறக் கூடியதொன்றுமாகும். இவை பற்றிப் பேசுவது இவ்வேளை அவசியமானதென்று கருதுகின்றேன்.

இன்றுவரையான மலையக எழுத்தாளர்கள் அனைவரும் மலையகம் சார்ந்த பிரச்சினைகள் பற்றியே எழுதி வந்துள்ள நிலையில் மலையக எழுத்தாளரான இவரது இந்நாவல் மலையகத்திற்கு மட்டுமன்றி முதன் முதலாக இலங்கை முழுவதற்குமான பிரச்சினை பற்றி மருத்துவ உலகம் சார்ந்த பிரச்சினை பற்றி பேச முற்படுகின்றது என்பது அழுத்தியுரைக்கப்பட வேண்டியதாகிறது.

‘மருத்துவ உலகம் சார்ந்த பிரச்சினை’ என்பதனைவிட ‘மருத்துவ உலகம் சார்ந்த பிரச்சினைகள்’ என்று கூறுவதே மிகப் பொருத்தமானது. ஏனெனில் மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயங்கரமான நோய்கள், அவற்றோடு கணந்தோறும் போராடும் நோயாளிகள் அவர்கள் தங்கியிருக்கும் வைத்தியசாலைகள்; வியாபாரமே இலக்கான மருந்து விற்பனையாளர்கள், தரகர்கள், காலாவதியான மருந்துகள், கலப்படமான மருந்துகள் கொள்ளையர் உலகமான தனியார் வைத்தியசாலைகள், மனித நேயமற்ற பணியாளர்கள்; மனித நேயமுள்ள பணியாளர்கள், அவ்விதத்தில் அவர்களுக்குரிய சவால்கள் வைத்தியசாலைகளில் எப்போதாவது நிகழும் பாலியல் துஷ்பிரயோகங்கள் என்றவாறு மருத்துவ உலகப் பிரச்சினைகள் இனி இல்லையெனுமளவிற்கு எக்ஸ்றே கண் கொண்டு படம் பிடித்துள்ளது. அதுமட்டுமன்றி மேலைத்தேய நவீன வைத்திய முறைகள், பாரம்பரிய வைத்திய முறைகள் ஆகிய இரு வேறு வைத்திய முறைகளின் நிறை குறைகளை அணுகி அவை இரண்டுமே இணைந்து உருவாக வேண்டிய வைத்திய முறை பற்றியும் குறிப்பிட்டு மருத்துவ உலகினரைச் சிந்திக்கவும் இந்நாவல் தூண்டுகின்றது.

மேற்கூறியவாறெல்லாம் நோக்கும்போது இந்நாவல் சற்று ஏற்ற இறக்கங்களுடன் உலகளாவிய பிரச்சினைகள் பற்றி பேசுவதாக பரிணாமம் பெற்று உலக இலக்கியப்பரப்பினுள் கம்பீரத்துடன் சிறு காலடி பதிக்க முயன்றுள்ளது என்று கூறுவேன்..!

மேற்கூறிய விதத்தில் மருத்துவ உலகம்சார் பிரச்சினைகள் பற்றிப் பேசுகின்ற ஈழத்து நாவல்கள் சில தங்கச்சியம்மா (நந்தி 1977), கழுகுகள் (தெணியான் 1981) வைகறை (கோகிலா மகேந்திரன் 1987) தூரம் தொடுவானம் (பொன்.கணேசமூர்த்தி, 1995), நோயில் இருத்தல் (மு.பொன்னம்பலம், 1999) கர்ப்ப நிலம் (குணா கவியழகன் 2018) ஆகியன. ஏலவே வந்திருப்பதனையும் மறுப்பதற்கில்லை.
ஆயினும், இவை மருத்துவ உலகம் சார்ந்த ஏதோ ஒரு பிரச்சினையை பற்றியே பேசுகின்றன. அவ்வாறு பேசும் ஒவ்வொரு நாவலும் சமமாக வேறொரு பிரச்சினை பற்றி முக்கியப்படுத்தவும் முற்படுகின்றன அல்லது ‘பத்தோடு பதினொன்றாக’ பேசுகின்றன அல்லது பிரதேச நாவலாக உருவாகிவிடுகின்றன. இத்தகைய ஆரோக்கியமற்ற நிலையில் அத்தகைய நாவல்களின் நோக்கிலும் போக்கிலுமிருந்து இந்நாவல் விலகி, ‘மருத்துவ’ உலகினை முழுமைப்படுத்தி அவ்வுலகினை பிரபஞ்ச நிலைக்கு அகற்சிப்படுத்தியுள்ளது என்பது ஒப்புநோக்கில் நிரூபணமாகின்றது!

சுருக்கமாகக் கூறின், இந்நாவலை மேலும் விரிவாக எழுதியிருக்கலாமென்பதைத் தவிர்த்துவிட்டு நோக்கும்போது மலையக எழுத்தாளரொருவர் எழுதிய இந்நாவல் ஈழத்து நாவல் செல்நெறிக்கு புதுரத்தம் பாய்ச்சியுள்ளது என்பதில் ஐயமில்லை!

இன்னொரு விதத்திலும் இந் நாவலில் ஓர் சிறப்பைக் காண முடிகிறது. நாவலாசிரியர் ஒருவர் தனது பட்டறிவு தவிர கேள்வி ஞானத்தினூடாக சிறந்த நாவலாசியராகத் தன்னை வெளிப்படுத்துவது கடினமானதொன்று.. இதற்கு விதிவிலக்கானவர்களுள் செங்கை ஆழியான் குறிப்பிடத்தக்கவர்.

ஒரு பெண் போராளியினது முகாம் தாக்குதல் பற்றி அவர் எழுதிய ‘சாம்பவி’ நாவல் கேள்வி ஞானத்தை மட்டுமே அடியொட்டி உருவானது.

இவ்வாறு இந் நாவலும் பட்டறிவினால் மட்டுமன்றி கேள்வி ஞானத்தினூடாகவும் சிறந்ததொரு படைப்பாக உருவாகுமென்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக இந் நாவல் அமைந்துள்ளது என்ற விதத்திலும் பாராட்டப்பட வேண்டியதாகிறது..

சுருங்கக் கூறின் எனக்கும் பேராசிரியரான க.சிவத்தம்பி , தெணியானின் ‘மரக் கொக்கு’ நாவலுக்கு முன்னுரை எழுதும் போது, பின் வருமாறு குறிப்பிட்டிருந்தார். முற்போக்கு எழுத்தாளர்கள் தமது சமூகக் கட்டுப்பாட்டுக்கு இயைய, முற்றிலும் பிரதேச மண்ணிலேயே காலூன்றி நிற்கின்றனர். இந்த மண் வாசனையை சர்வதேசிய படுத்தும் விசாலமான இலக்கிய பரீட்சியத்துடன் இவ்வெழுத்தாளர்கள் தொழில் படும்போதுதான் எமது எழுத்தாளர்களின் சித்திரிப்புக்கள் பொதுப்படையான புனைக் கதை ஆய்வில் இடம்பெறும். மரக் கொக்கு அந்தச் சாத்தியப்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது..

மேற்குறிப்பிட்ட மேற்கோளை சற்று மாற்றி இந்த அணிந்துரையின் முடிவுரையாக அமைப்பது பொருத்தமென்று கருதுகிறேன்.

நமது எழுத்தாளர்கள் தமது சமூக கட்டுப்பாட்டுக்கியைய முற்றிலும் பிரதேச மண்ணிலேயே காலூன்றி நிற்கின்றனர். மு.சி. மண் வாசனை நாவலை எழுதா விட்டாலும், இந் நாவலின் உள்ளடக்கம் காரணமாக சர்வதேசிய படுத்தும் விசாலமான இலக்கிய பரீட்சியத்துடன் தொழில் பட்டிருப்பதனால் இவ்வெழுத்தாளரின் சித்திரிப்பும் பொதுப்படையான புனைக் கதை ஆய்வில் இடம் பெறக் கூடியதாகவுள்ளது..

(Visited 1 times, 1 visits today)