மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நடத்தப்படவிருக்கின்ற கவன யீர்ப்பு போராட்டத்துக்கு அனைத்து தரப்புகளும் ஆதரவு வழங்க வேண்டும் என ஜெனிவாவில் இருந்து வடக்கு- கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் திருமதி ஆனந்த நடராஜா லீலாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் 19ம் திகதி கதவடைப்பு மற்றும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணிக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது.

மட்டக்களப்பில் கல்லடிப்பாலத்தில் இருந்து காந்திபூங்காவரை இந்த கவனயீர்ப்பு பேரணி காலை 10மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவிருப்பதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் தெரிவித்திருப்பதுடன் அன்றைய தினம் மட்டக்களப்பில் கடையடைப்புக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த பத்துவருடங்களாக தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டும் தரும்படி கோரி வடக்கு கிழக்கு உறவுகள் போராடியபோதும் நீதி கிடைக்காத நிலையில் ஐநாவை நோக்கி கோரிக்கைகளோடு அண்மைய நாட்களாக போராட்டங்கள் தீவிரம் பெற்றுவருகின்றன.

இந்த நிலையில் மார்ச் 19ல் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தற்பொழுது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொள்ளச்சென்றுள்ள வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் திருமதி ஆனந்தநடராஜா லீலாதேவி அங்கிருந்து அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

அதில் காணாமல் ஆக்கபட்டோர் உறவுகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து நீதி தரும்படி தாம் தொடர்ந்து போராடி வருகின்றோம்.எமது போராட்டத்திற்கான நீதியை தீர்வை சர்வதேசமே தரவேண்டுமென கேட்டு நிற்கின்றோம்.

எனவே சர்வதேசம் சிறீலங்கா அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது எனவும் சிறீலங்கா அரசாங்கம் தமிழினத்திற்கு இழைத்த மனித உரிமை மீறல் இனப்படுகொலை என்பவற்றுக்காக சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் பாரப்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்த கடந்த 25ம் திகதி வடக்கு கிழக்கின் சகல தரப்பின் ஒத்துழைப்புடன் கிளிநொச்சியில் ஒரு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு மகஜரை வழங்கியிருந்தோம்.

தற்பொழுது எதிர்வரும் 19ம்திகதி மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளால் ஒரு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடாகி இருப்பதால் இதற்கு சகல தரப்பினரும் மனிதாபிமான அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்கி நீதிக்காக போராடும் எங்களுக்கு வலுச்சேர்க்கவேண்டுமென என கேட்டுக்கொண்டுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)