ரவி ரத்னவேல்

போதைப்பொருள் ஒழிப்பு என்ற விடயம் என்றுமில்லாதவாறு சமூகத்தால் ஏற்கப்பட்டிருக்கும் பின்னணியில் பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களுக்கு என்ன நடக்கின்றது என்பதே இன்று எம்மவர்களில் பலரும் எழுப்பும் கேள்வியாக இருக்கின்றது.

மாங்காய் திருடிய மாதை கூண்டில் ஏற்றி விசாரித்து குற்றவாளி என தீர்ப்பளித்து அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக செய்திகளை வெளியிடும் ஊடகங்களே கோடான கோடி ரூபாய் மக்கள் சொத்தை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு உண்மையை மறைத்தமைக்காக ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு எதிரான தீர்ப்புக்களை பற்றியும் கைதிகளை பாதுகாக்க வேண்டிய காவல் துறையினரே அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை அடித்துக் கொலை செய்ததாகவும் செய்திகளை வெளியிடுவதனாலும் சட்டத்தின் முன் நீதி நிலைநாட்டப்படும் விதம் பற்றியும் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விதம் பற்றியும் இந்த சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையின்மையே கைப்பற்றப்படும் போதைப் பொருட்களுக்கு என்ன நடக்கின்றது என்ற நியாயமான கேள்வி மக்கள் மத்தியிலிருந்து எழ காரணமாகி இருக்கின்றது.

மறுபுறத்தில் போதைப்பொருள் விற்பனையை பற்றி பொலிஸாருக்கு தகவல் கொடுத்து சொற்ப நேரத்தில் போதைப்பொருள் விற்பவனைத் தேடி பொலிஸார் போவதற்குப் பதிலாக பொலிஸுக்கு தகவல் கொடுத்தவனை தேடி போதைப்பொருள் விற்பனையாளர் குண்டர்களுடன் வந்து நிற்பதும் கைப்பற்றப்பட்ட போது இருந்த போதைப்பொருள் விசாரணை முடிவின் போது கோதுமை மாவாகவோ சீனியாகவோ மாறி வருகின்றமையும் சகஜமாக இருந்து வந்தமையும் மக்கள் மத்தியில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுக்கு என்ன நடக்கின்றது என்ற கேள்வி எழுவதற்கு காரணமாக அமைகின்றன.

இந்தப் பின்னணியிலேயே பெரும் எதிர்பார்ப்புடன் 2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக மக்கள் வாக்களித்தனர். கள்ளங் கபடமற்ற மக்கள் எதிர்பார்த்த வகையில் நீதியை நிலைநாட்டும் அதேவேளை, ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் ஒரு அரசாங்கத்தினையே மக்கள் எதிர்பார்த்தனர். ஆயினும் அந்த புதிய அரசாங்கத்திற்கு ஒரு மாதம் பூர்த்தியடைவதற்குள் பட்டப்பகல் திருட்டாக மத்திய வங்கி பிணைமுறி மோசடி எனும் திருட்டு இடம்பெற்றது.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி மூன்றாவது முறையாகவும் மிகப் பெரிய நிதி மோசடி செய்யப்பட்டது. இந்த நிதி மோசடியுடன் தொடர்புபட்ட முக்கிய சூத்திரதாரியான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இதுவரை காலமும் கைது செய்யப்படாதிருப்பதுடன் அர்ஜுனவின் நிதி மோசடி செயற்திட்டத்தை செயற்படுத்தி வந்த அர்ஜுனவின் மருமகனும் கைதான போதிலும் பிணையில் விடுதலை பெற்று சுதந்திரமாக சமூகத்தில் செயற்படுவதற்கான வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பின்னணியிலேயே இந்த நாட்டின் பொலிஸ் திணைக்களம் மீதும் பொலிஸ் மற்றும் சட்டத்தின் செயற்பாடுகள் பற்றியும் நம்மவர் மத்தியில் அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது.

இதனாலேயே கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் பின்வழியால் மீண்டும் போதைப்பொருள் வியாபாரிகளின் கைகளுக்கே செல்கின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது. உண்மையிலேயே கைப்பற்றப்படும் போதைப்பொருட்களுக்கு என்ன நடக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது. இருப்பினும் கைது செய்யப்படும் போதைப்பொருள் கடத்தற்காரர்கள் கூண்டில் அடைக்கப்படுவதை மக்களுக்கு காணக் கிடைத்தபோதிலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுக்கு என்ன நடக்கின்றது என்பதை மக்களுக்கு எளிதில் காணக் கிடைப்பதில்லை.

இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் வரலாற்றில் முதல் முறையாக 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி அதுவரை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 927 கிலோகிராம் கொக்கேயின் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் தீ வைத்து கொளுத்தி அழிக்கப்பட்டது.

அவ்வாறு அழிக்கப்பட்ட கொக்கேயினின் பெறுமதி 66 பில்லியன் ரூபா என மதிக்கப்பட்டதுடன் அதனை அழிப்பதற்கான செலவு 45 மில்லியன் ரூபாவாகும். கடதாசிகளை தீவைத்துக் கொளுத்துவது போன்றோ அல்லது ஏனைய பொருட்களை அழித்து மண்ணில் புதைப்பதைப் போன்றோ போதைப்பொருட்களை அழிக்க முடியாது.

கொக்கேயின் போன்ற போதைப்பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி அழிப்பதற்கு 5000 செல்சியஸ் உஷ்ணத்தைக் கொண்ட எரியூட்டுக் குழாய் தேவைப்படுகின்றது. இலங்கையிலேயே அவ்வாறான குழாய் புத்தளம் சீமெந்து தொழிற்சாலையிலேயே இருக்கின்றது.

அத்தோடு உள்நாட்டில் போதைப்பொருட்களை கைப்பற்றும் வேகத்தில் அவற்றை அழிப்பதென்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல. போதைப்பொருள் அழிப்பில் ஈடுபடுத்தப்படும் உத்தியோகத்தர்கள் அச்செயற்பாட்டின் போது உடல் ரீதியாக போதைப்பொருட்களின் பலத்த தாக்கத்திற்கு உள்ளாவதனால் அவர்கள் சுவாசக் கோளாறு உள்ளிட்ட உடல் மற்றும் உள ரீதியான உபாதைகளுக்கு உள்ளாகுதல், போதைப்பொருள் அழிப்புக்கு தேவையான அதிநுட்பமான தொழில்நுட்ப வசதிகளின்மை ஆகியன போதைப்பொருள் ஒழிப்பில் பெருந்தடைகளாக இருக்கின்றன.

இப்பின்னணியிலும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட செயற்திட்டப் பிரிவு வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி இவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி வரை 521 கிலோகிராம் 980 கிராம் 90 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டிருப்பதுடன், 6857 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அத்தோடு 1261 கிலோகிராம் 335 கிராம் 453 மில்லிகிராம் கஞ்சாவும் அவற்றுடன் 6833 நபர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இச் செயற்பாட்டை இன்னும் சிறந்த வகையில் முன்னெடுக்க வேண்டுமாயின் அதற்கு தேவையான சகல வசதிகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டியிருப்பதுடன், தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுத்தருவதாக ஜனாதிபதி அவர்கள் உறுதியளித்திருக்கின்றார்.

இதற்கு முந்திய காலங்களில் பொலிஸாரினால் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படும் சந்தர்ப்பங்களில் அவற்றின் எடையினை சரியாகக் கணிப்பதற்கான இலத்திரனியல் தராசுகள் இருக்காததால் அப்போதைப்பொருட்களை சரியாக எடையிட்டுக் கொள்வதற்காக அக்கம்பக்கத்தில் இருக்கும் நகைக் கடைகளை நாடிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. ஆயினும் தற்போது அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இலத்திரனியல் தராசுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கு முன்பு போதைப்பொருட்கள் ஆழ்கடலில் மூழ்கடித்தே அழிக்கப்பட்டன. ஆயினும் அதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கும் தாவரங்களுக்கும் ஏற்படும் பெரும் பாதிப்புக்கள் காரணமாக தற்போது அந்த முறை பின்பற்றப்படுவதில்லை. ஏற்கனவே மேல் மாகாண கடல் பரப்பு இலங்கை கடல் பரப்புகளில் கழிவுப்பொருட்களை பெருமளவில் கொண்டுள்ள கடற்பரப்பாக அறிய வந்திருக்கின்றது. அத்தோடு சட்ட விரோத போதைப்பொருட்களை தீயிலிட்டு அழிப்பதே உலகளாவிய ரீதியில் பின்பற்றப்பட்டு வருகின்றது.

சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட பெருமளவு யானைத் தந்தங்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 2016 ஜனவரி 16 ஆம் திகதி தீயிட்டு அழித்ததன் மூலம் அவ்வாறு செய்த தெற்காசியாவின் முதலாவது நாடு என்ற இடத்தை இலங்கையே பெற்றிருக்கின்றது. எவ்வாறாயினும் போதைப்பொருட்கள் உள்ளிட்ட சட்ட விரோத, சமூக விரோத பொருட்களை தீயிட்டு அழிப்பதன் மூலம் அப்பொருட்களை மாத்திரமன்றி அச்சமூக விரோத செயற்பாட்டினையும் இச்சமூகத்திலிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற மறைமுக செய்தியும் வெளிப்படுத்தப்படுகின்றது.

இதுவரை பொலிஸார் வசம் இருந்துவரும் சட்ட விரோத போதைப்பொருட்கள் எப்போது தீயிட்டு அழிக்கப்படும் என்பதே போதைப்பொருள் தடுப்பை வரவேற்கும் அநேகமானோரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது. இப்போது அதற்கும் விடை கிடைத்திருக்கின்றது.

இளம் சமுதாயத்தின் எதிர்காலத்தை இருட்டடிப்பு செய்கின்ற அதேநேரம், ஒட்டுமொத்த மானிட சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கின்ற போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவது எத்தனை முட்டாள்தனமான செயல் என்பதை எடுத்துரைக்கும் வகையில் உலக முட்டாள்கள் தினமாகக் கருதப்படும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியன்று அதுவரை கைப்பற்றப்பட்டிருக்கும் போதைப்பொருட்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் தீயிட்டு அழிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட இருப்பதாக போதைப்பொருள் ஒழிப்பிற்கான விசேட செயலணி தெரிவித்துள்ளது.

 

(Visited 1 times, 1 visits today)