சுதன்ராஜ்

வேருக்கு விழுதாக, புலம்பெயர் தேசங்களில் பரவி வாழும் ஈழத்தமிழ் மக்கள், தாயக மக்களின் நீதிக்கான குரலைப் பிரதிபலிக்கும் வகையில்,   ஜெனீவாஐ.நா மனித உரிமைச்சபை முன்றலில் ஒன்றுகூட இருக்கின்றார்கள்.

”சிறிலங்காவுக்கு மேலதிக காலஅவகாசம் வழங்க வேண்டாம் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு சிறிலங்காவை பாரப்படுத்துங்கள்” என கிளிநொச்சியில் ஒலித்த குரல்கள், ஜெனீவா முன்றலிலும் ஒலிக்க இருக்கின்றது.

ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடர் அமர்வுகள் தொடங்கிய நாளில், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களது உறவினர்கள், கிளிநொச்சியில் மேற்கொண்டிருந்த உணர்வுபூர்வமான போராட்டமாக அமைந்திருந்தது.

இதே கிளிநொச்சியில் வைத்து நடந்தவற்றை மறப்போம் மன்னிப்போம் என திருவாய் மலர்ந்த சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அதே கிளிநொச்சியில் வைத்து, மக்கள் தமது உணர்வுபூர்வமான போராட்டத்தின் ஊடாக பதில் அளித்திருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டியுள்ளது.

ஒவ்வொரு தாய்மார்கள், பெண்கள் என பலரும் காணாமலாக்கப்பட்டவர்களது ஒளிப்படங்களுடன் கண்ணீர்மல்க இருந்த ஒளிப்படங்கள், பல இந்தியசர்வதேச ஊடகங்களில் வெளிவந்திருந்தது.

இது ஆர்ஜென்ரீனாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களை தேடும், தாய்மார்களின் நீதிக்கான போராட்டத்தை ஞாபக்கப்படுத்தும் ஒன்றாக இருந்தது.

காலநீடிப்பின் ஊடாக நீதிக்கான போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடலாம் என்பது, மட்டுமல்ல நடந்தேறிய பாரிய மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறுவதில் இருந்து தப்பிக்கும் ஏமாற்று வித்தைகளையும் சிறிலங்கா அரசு செய்கின்றது என்பதே குற்றச்சாட்டு.

ஆனால் சிறிலங்கா அரசை விடாது துரத்தும் கறுப்பாக, காணாமலாக்கப்பட்டவர்களது விவகாரம் அமைந்து வருகின்றது.

வெள்ளை வான்களிலும், காவல் அரண்களிலும், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதிலும் என பல்வேறு வகையிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உச்சமாக, போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பலர் எங்கே என்பது முக்கிய கேள்வியாக சிறிலங்கா அரசினை நோக்கியுள்ளது.

இவர்கள் காணாமல் போனவர்கள் அல்ல. இவர்கள் ‘ஆக்கப்பட்டவர்கள்’ என்ற வகையில் இதற்கான ‘பொறுப்புக்கூறலை’ ஏற்க வேண்டிய நிலையே சிறிலங்கா அரசுக்கு அச்சங்கொடுக்கின்ற ஒன்றாக மாறியுள்ளது.

இலங்கைத்தீவுக்கு பயணம் செய்கின்ற ஒவ்வொரு சர்வதேச பிரதிநிதிகளின் வாயில்களிலும் இத்தாய்மார்களின் கண்ணீர்குரல், அனைத்துலக சமூகத்தின் நீதியைக் கோரி நிற்கின்றது.

‘இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எவரும் இன்று உயிருடன் இல்லை’ என கூறியுள்ள இலங்கையின் பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க,அவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பதுபற்றி தகவல் தர மறுத்துள்ளதுடன், சிறிலங்கா படைத்தரப்பை காப்பாற்றிக் கொள்வதிலேயே கருத்தாயிருக்கின்றார் என பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். இவர் மட்டுமல்ல சிறிலங்கா அரச தரப்பினர் யாவருமே படைத்தரப்பை காப்பாற்றிக் கொள்ளவதிலேயே கண்ணும் கருத்துமாகவுள்ளனர்.

மறப்போம் மன்னிப்போம் என்ற குரல்களை எல்லாம் கடந்து நீதிக்கான குரல் ஒலித்துக் கொண்டு இருக்கின்றது.

குறிப்பாக ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 301 தீர்மானத்துக்கு அமைய காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவாகரத்தினை கையாள என சிறிலங்கா அரசு அமைத்திருந்த அலுவலகத்தை நீதிக்காக குரல் கொடுப்பவர்கள் நிராகரிக்கின்றனர்.

சிறிலங்காவின் மற்றுமொரு ஏமாற்றுவித்தை இதுவெனக் கூறுகின்றனர்.
ஐ.நா தீர்மானத்தின் பரிந்துரைகளுக்கு முரணாக, பாதிக்கப்பட்ட தரப்பின் கருத்துக்களையோ, அனைத்துலக வல்லுனர்களின் பங்களிப்பையோ ஏதுமன்றி, அனைத்துலக சமூகத்தின் நிலைப்பாட்டுக்கு மாறான, தன்னிச்சையாக ஒன்றை நிறுவி அதற்கான பிரதிநிதிகளையும் சிறிலங்கா அரசாங்கம் அமர்த்தியுள்ளது மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

சிறிலங்கா அரசின் இத்தகைய ஏமாற்றுவித்தைகள் புதிதல்ல. கடந்த காலங்களிலும் பல ஆணைக்குழுக்களை நியமித்திருந்த கதைகள் உள்ளன.

1994199820062013 ஆகிய காலகட்டங்களில் பல்வேறு பொறிமுறையில் ஆணைக்குழுக்கள் சிறிலங்காவின் ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்டிருந்தன. ஆனால் அவை யாவுமே எந்த அதிகாரமும் அற்ற விசாரித்து வாக்குமூலங்களை பெறுகின்ற ஆணைக்குழுக்களாகவே இருந்துள்ளன.

சிறிலங்கா அரச தரப்பு நியமிக்கின்ற ஆணைக்குழுக்களின் நிலைமை. சிறிலங்கா அரசின் முப்படைகளுக்கும் அதிபொறுப்பானவர் ஜனாதிபதியே என்ற நிலையில், தனது அதிகாரத்துக்கு உட்பட்ட படையினர் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்களை காப்பாற்றுகின்றவராக இருக்கிறார். என்பதுதான் நிதர்சனமாக இருக்கின்றது.

தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற மைத்திரியே போரின் இறுதி நாட்களில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர். இந்நிலையில் அக்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர் சம்பவங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவராக அவர் மட்டுமன்றி அவருக்கு கீழ் இருந்த, இருக்கின்ற படையதிகாரிகளும் உள்ளனர்.

இது வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல், குற்றவாளியே குற்றங்களை விசாரிப்பதாக உள்ளது. இது சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கே உரிய வேடிக்கையான ஏமாற்றுவித்தைகளில் ஒன்று.

அவ்வாறு தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் இம்முறையும் ஏமாற்றுவித்தைகளை காட்ட சிறிலங்கா தயாராகி வருகின்றது என்பதற்கு முன்னராக, ரணில் தலைமையிலான அரசாங்கத்தை காப்பாற்றும் தரப்பு, தனது ‘லொபியை” ஜெனீவாவில் தொடங்கிவிட்டது.

இப்பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் தருணம், சிறிலங்கா தொடர்பிலான புதிய தீர்மானத்தின் முதல் நகல், பார்வைக்கு எட்டியிருந்தது. அதில் சிறிலங்காவுக்கு மேலும் இரண்டு ஆண்டுகால அவகாசத்தினை வழங்குவதற்கு அத்தீர்மானம் முன்மொழிகின்றது.

இது இறுதித்தீர்மானம் அல்ல. இத்தீர்மானத்தின் உள்ளடக்கம் மாறக்கூடும். அந்த மாற்றங்கள் அவரவர் நலன்சார் நிலையில் இருந்து கையாளப்படுகின்ற ”லொபி”யில் இருந்து வரும்.

குறிப்பாக ரணில் தரப்பை ஆசீர்வதித்துள்ள மேற்குலக நாடுகள் பலவும், மேலதிக காலஅவகாசம் வழங்க வேண்டும் என்ற மனநிலையில் இருப்பதனை இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக உணர முடிகின்றது.

இந்த காலஅவகாச பொறிக்குள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரது ஒரு சில பெயர்கள் அடிபடுகின்றன.

இங்கே உள்ள கேள்வி, இந்தோபசுபிக் பூகோள அரசியல் சதுரங்கத்தில் இலங்கைத்தீவை மையப்படுத்திய விவகாரத்தில் மேற்குலகிற்கு இருக்கின்ற நலன் தெளிவானது. அதனைத்தான் ரணில் தரப்பு அவர்கள் வழங்க முற்படுகின்ற மேலதிக கால அவகாச பொறிமுறை வெளிக்காட்டுகின்றது.
ஆனால் அதே நிலைப்பாட்டில் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு தரப்பினர் யாருடைய நலன்களை காப்பதற்கு முற்படுகின்றனர் என்ற கேள்வி பலமாக காணப்படுகின்றது.

தமிழர்களின் இலக்கு தெளிவானது. அந்த இலக்கு நோக்கிய பயணத்தின் போது, அடிக்கின்ற எதிர்காற்றுக்கு இழுபட்டு அள்ளுப்பட்டு போவதல்ல போராட்டம். அந்த எதிர்காற்றையும் எதிர்கொண்டு, இலக்கு நோக்கி போவதுதான் விடுதலை அரசியல்.

கிளிநொச்சியிலும், ஜெனீவாவிலும் போராடுகின்ற மக்களிடத்தில் இலக்கு தெளிவாகக் காணப்படுகின்றது.

அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழர் அரசியல் தரப்புகள், அந்த இலக்கு நோக்கி பயணிக்கப் போகின்றார்களா, அல்லது எதிர்காற்றோடு இழுபட்டு போகப் போகின்றார்களா என்பதுதான் கிளிநொச்சியிலும், ஜெனீவாவிலும் தொக்கி நிற்கும் கேள்வி!

(Visited 1 times, 1 visits today)