சு. கஜமுகன்

பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்து அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, வெஸ்ட்மினிஸ்டர் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் தமிழ் சொலிடரிட்டி அமைப்பினர் கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லண்டன் வெஸ்மினிஸ்டர் நீதிமன்றத்தில் பிரியங்க பெர்னாண்டோ தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுதே, நீதிமன்றத்திற்கு வெளியே இவ் ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றது. பிரியங்க பெர்னாண்டோவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், போராடும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், இலங்கையில் போர்க்குற்றமிழைத்த சகல போர்க்குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டமானது இடம்பெற்றது.

பிரியங்க பெர்னாண்டோ, கடந்த வருடம் இலங்கையின் எழுபதாவது சுதந்திர தினத்தன்று, லண்டனிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நோக்கி கழுத்தை அறுப்பேன் என்ற பொருள் பட விரல் மூலம் சைகை செய்து கொலை அச்சுறுத்தல் விடுவித்தார். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் உயிர் அச்சுறுத்தலுக்கும் மனவுளைச்சலுக்கும் உள்ளானார்கள். இதனால் ICPPG (International Centre for Prevention and Prosecution of genocide) ஆனது பிரியங்கவுக்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தது.

அவ் வழக்கில் அவர் குற்றவாளி என இனம் காணப்பட்டு அவரைக் கைது செய்யக் கோரி வெஸ்மினிஸ்டர் குற்றவியல் நீதிமன்றமானது அவருக்கு பிடியாணை பிறப்பித்திருந்தது. எனினும் இலங்கை அரசானது பிரித்தானியாவின் வெளிநாட்டு மற்றும் பொது விவகாரங்களுக்கான அமைச்சில் (Foreign and Common Wealth Office) பிரயோகித்த அழுத்தம் காரணமாக, நீதிமன்றமானது இப் பிடியாணையை இரத்து செய்துள்ளது. இதனை எதிர்த்து ஐஇககஎ இனால் தொடரப்பட்ட வழக்கே கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்தது.

வழக்கு விசாரணையின்போது, கழுத்தை அறுப்பேன் என சைகை செய்த பிரியங்க பெர்னாண்டோவின் செய்கையானது கடமையுடன் தொடர்புடையது அல்ல என சுட்டிக் காட்டிய நீதிபதி எம்மா ஆபத்நோட், அதனால் அவருக்கு ராஜ தந்திர தண்டனை விலக்கு அளிக்கமுடியாது எனத் தெரிவித்துள்ளார். மேலும் வியன்னா மாநாட்டு உடன்படிக்கையின் பிரகாரமும் தண்டனை விலக்கு அளிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முறையான பிடியாணை தமக்கு கிடைக்க வில்லை என பிரியங்க பெர்னாண்டோ சார்பாக வாதாடியவர்கள் தெரிவித்திருந்தனர். ஆகவே பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை பொருத்தமான முறையில் அனுப்பப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டி இருப்பதனால் இவ்வழக்கானது வரும் மார்ச் மாதம் பதினைந்தாம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இருவாரங்களின் பின்னர் வழக்கு நடைபெறும் பொழுதும் மீண்டும் தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ் சொலிடரிட்டி உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர். பிரியங்கவை கைது செய்யும் வரை தமது போராட்டங்கள் தொடரும் என அவர்கள் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும், இவ்வழக்கில் இலங்கைத் தூதரகத்தால் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், இலங்கை அரசுக்கு எதிராக இடம்பெறும் போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற செயற்பாடுகளை கண்காணித்தலும், அது தொடர்பான அறிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சு, இலங்கை புலனாய்வுப்பிரிவு போன்றவற்றுக்கு தெரியப்படுத்துதலும் பிரியங்க பெர்னாண்டோவின் பணி என தெரிவிக்கப்படுகின்றது.

அது மட்டுமல்லாமல் பிரித்தானியாவிலுள்ள உளவுத்துறை நிறுவனங்களுடன் சுமுகமான உறவைப் பேணி அதன் மூலம் இலங்கைக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளுதலும் பிரியங்கவின் கடமை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் புலம் பெயர் தேசத்தில், அதிலும் குறிப்பாக பிரித்தானியாவில் போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் மக்கள் இலங்கை அரசால் மறைமுகமாக கண்காணிக்கப்படுகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.

இலங்கை அரசின் இச் செயற்பாடானது பிரித்தானியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களை அதிர்சிக்குள்ளாக்கியதோடு மட்டுமல்லாமல் இது அவர்களை அச்சுறுத்தும் ஒரு செயற்பாடாகவே கருதப்படுகின்றது. பிரித்தானிய , இலங்கை அரசுகள் ஒன்றுக்கொன்று தமது அரசியல் பொருளாதார நலம் சார்ந்து இயங்குவதால் மக்களின் உரிமைகளைப் பற்றி அவை கருத்திற் கொள்வதில்லை. மாறாக தமது நலன்களையே முன்னிலைப்படுத்துகின்றன.

வீதியில் இறங்கிப் போராடுவது என்பது மக்களின் அடிப்படை உரிமை. ஆனால் அதற்கே பிரித்தானியாவில் அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது, இலங்கை அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது. ஆகவே தமது அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க மக்கள் ஒன்றிணைந்து போராடவேண்டும்.

(Visited 1 times, 1 visits today)