இலங்கை இராணுவப்படையின் கஜபா ரெஜிமென்ட் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேர்ணல் ஜயந்த சுரவீர உள்ளிட்ட 8 இராணுவத்தினர் மீது வில்பத்து வனப்பகுதில் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவருக்கு வடத்திய மத்திய மாகாண நீதிமன்றம் 25 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.

சூரியகாந்தன் ஜெயச்சந்திரன் எனப்படும் உதயன் அல்லது ஐயன் மற்றும் சிவப்பிரகாசன் சிவசீலன் எனப்படும் இளையன் ஆகிய இரு முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கே கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வட மத்திய மாகாண நீதிமன்ற நீதிபதி மகேஸ் வீரமன் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதிகள் இருவருக்கும் எதிராக சட்ட மா அதிபரினால் அநுராதபுரம் உயர் நீதிமன்றத்தில் வெவ்வேறாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளில், 5 குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகள் என இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம், ஒரு குற்றத்திற்கு ஐந்து வருடங்கள் என்ற அடிப்படையில் ஐந்து குற்றச்சாட்டுகளுக்கும் 5 வருடங்களில் கழிந்து செல்லும் வகையில் 25 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இலங்கை இராணுவப்படையின் கஜபா ரெஜிமென்ட் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேர்ணல் ஜயந்த சுரவீர உள்ளிட்ட 8 இராணுவத்தினர் வில்பத்து தேசிய வனப்பகுதியில் வைத்து 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)