பா.கிருபாகரன், டிட்டோகுகன்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை 74 கோடி அமெரிக்க டொலர் கடனில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆட்சியில் சில திட்டங்களுக்கு ஒதுக்கிய செலவை விட 3 மடங்கு அதிகமாக செலுத்த வேண்டி நேர்ந்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியவற்றின் நிதிக் கட்டுப்பாடு, செயலாற்றுகை என்பன தொடர்பில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டிற்கு அமைய விருது வழங்கும் வழங்கும் நிகழ்வு பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சந்தர்ப்பத்திலேயே பிரதமர் விக்கிரமசிங்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் இங்கு மேலும் பேசுகையில்;

கடந்த காலத்தில் பாராளுமன்றம் கணக்காய்வை மறந்தே செயற்பட்டது. எமது அரசாங்கம் பாராளுமன்றத்தின் நிதி அதிகாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஒன்றரை தசாப்தத்தில் பாராளுமன்றத்தின் நிதி அதிகாரம் குறைந்திருந்தது. திறைசேரியினதும் மத்திய வங்கியினதும் அதிகாரம் மேலோங்கியிருந்தது.
2013 ஆம் ஆண்டு அரச வருமானத்தை கொண்டு கடனை செலுத்த முடியாக நிலை உருவானது. 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் பாராளுமன்றத்தின் நிதி அதிகாரம் உறுதிப்படுத்தப்பட்டது. கடந்த ஆட்சியில் சில திட்டங்களுக்கு ஒதுக்கிய செலவை விட 3 மடங்கு வரை பெறுமதியான தொகை செலுத்த நேரிட்டது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக கடன் மற்றும் விமானங்கள் பெறப்பட்டாலும் கடனை செலுத்த முடியவில்லை. இது நட்டத்தில் செயற்பட்டு வருகிறது. இறுதியாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் கடன் 74 கோடி டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக 3 இலட்சம் கோடி டொலர் கடன் செலுத்த வேண்டியிருக்கும்.

2020 ஆம் ஆண்டாகும் போது கடன் சுமை குறைவடையும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த கடன் சுமையை அடுத்த தலைமுறை வரை கொண்டு செல்ல வேண்டி ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.

(Visited 22 times, 1 visits today)