ந.ஜெயகாந்தன்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஜனவரி 30 ஆம் திகதிக்குள் நடத்தப்படவுள்ளதாகவும் தேர்தலுக்கான தினம் தொடர்பான தீர்மானம் இந்த வாரத்திற்குள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையிலேயே தேர்தலை நடத்துவதற்கான தினம் தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

எதிர்வரும் நாட்களில் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் கூடி இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தினக்குரலுக்கு தெரிவித்தார்.

தேர்தலுக்கான தினம் தீர்மானிக்கப்பட்ட பின்னர் முதற்கட்டமாக தேர்தலுக்கான வேட்பு மனுக் கோரலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.

இதன்படி அந்த அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியிடப்படலாம் எனவும் வேட்புமனுக்கள் டிசம்பர் 11முதல் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெறலாம் எனவும்  தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் வேட்புமனு கோரப்பட்ட பின்னரே தேர்தல் நடத்தப்படவுள்ள தினம் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவுள்ளது. இதன்படி ஜனவரி 20 முதல் 30ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 27 times, 1 visits today)