பா.கிருபாகரன், டிட்டோகுகன்

2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்புக்கு முன்னர் பியருக்கு வழங்கப்பட்டுள்ள வரி குறைப்புச் சலுகை  வாபஸ்பெறப்பட வேண்டும். பியருக்கான வரி குறைப்புக்கு அனுமதியளிக்க முடியாது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறியதாவது;

இலங்கையை நவீன நாடாக மாற்றும் வகையில் நீலப் பசுமைப் பொருளாதார பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீண்டகால நிலைபேண்தகு அபிவிருத்தியை இலக்காக கொண்டுள்ள இதில் பல முன்மொழிவுகள் இலங்கையின் எதிர்காலத்தை அடிப்படையாக கொண்டமைந்துள்ளது.

நவீன நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காக இலங்கையில் மீண்டும் மதுபாவனை அதிகரிக்க வழிசமைக்க முடியாது. சுற்றுலாத் துறையை இலக்கு வைத்து பியர் மற்றும் வைன் போன்ற மதுபானங்களுக்கு வரி குறைக்கப்படுவதால் அதிகளவான இளைஞர்கள் மதுபாவனையை நோக்கி நகர்வார்கள்.  ஒவ்வொரு வருடமும் மதுபாவனையால் 9 ஆயிரம் பேர் இறக்கின்றனர்.

இதேவேளை, மதுபாவனைகளால் ஏற்படும் நோய்களுக்காக வருடம்தோரும் 62 பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. மதுவால்வரும் வருமானத்தையும் காட்டி இது பன்மடங்கு அதிகமாகும்.

இந்த முன்மொழிவை நிதியமைச்சர் விளங்கிக்கொள்ள வேண்டும். எமது நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் சுகாதார மறுசீரமைப்புக்கான முன்னுதாரணங்கள் ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, நாட்டில் சுகாதாரத்திற்கு பாதிப்பேற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைக்கும் நான் அனுமதியளிக்க மாட்டேன் என்றார்.

(Visited 21 times, 1 visits today)