-ஏரம்பன்-

லங்கையின் அரசியல் களம் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மிகவும் சூடானதும் அதிர்ச்சியானதுமான நகர்வுகளைக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றது. இந்த அதிர்ச்சியினையும் சடுதியான மாற்றங்களையும் இலங்கையர்கள் மாத்திரமல்ல சர்வதேசம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை.

கடந்த 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியினர் கூட்டணி அரசாங்கத்துடனான பிணைப்பினை முறித்துக்கொண்ட நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா எதேச்சதிகாரமாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்திருந்தார்.

இந்த நியமனம் இலங்கை அரசியலில் புதியதொரு நகர்வாகவே அமைந்துள்ளது. முன்னைய வரலாற்றினை நோக்கும் நிலையில் இவ்வாறானதொரு சர்ச்சைக்குரிய நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில் இந்த பிளவு ஏற்படுவதற்கான பின்னணி குறித்து நோக்கினால், நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கம் முன்னெடுத்திருந்த செயற்பாடுகளையும் கடுமையாக விமர்சிக்கப்பட்டதனைக் காணமுடிந்துள்ளது.

நல்லாட்சி குறித்து பரவலாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதனை சகலரும் அறிவார்கள். இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா தலைமையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் 30/1 தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது.

முன்னதாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சர்வதேச ரீதியாக மிகவும் கடுமையான கேள்விகளை எதிர்கொண்ட நிலையில் அந்த அரசை பிணை எடுப்பதற்காக வந்தாற்போல நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியதுடன், தமது கொள்கைகளை முன்வைத்திருந்தார்கள். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைத்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் நல்லாட்சி அரசாங்கமும் தளம்பல் நிலையை எதிர்கொண்டிருந்தது.

சர்வதேசத்துக்கும் மக்களுக்கும் வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்ற நல்லாட்சி அரசாங்கம் பாரிய சவால்களை எதிர்கொண்டிருந்த அதேவேளை, அரசாங்கமும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் மாற்றுத்தரப்பினரால் முன்வைக்கப்பட்ட நிலையில் அமைச்சரவை மாற்றங்கள் எனப் பல சிக்கல்களை ஐக்கிய தேசிய கட்சி எதிர்கொண்டிருந்தது.

இருந்தபோதிலும் சர்வதேசம் அக்கறை கொண்டிருக்கும் பொறுப்புக் கூறும் செயற்பாடுகள் நிலைமாற்று நீதிப்பொறிமுறைகள் உள்ளிட்ட விடயங்களில் சில செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்ததன் விளைவாக காணாமல் போனோர் அலுவலகம் அமைத்தல், நல்லிணக்க செயற்பாடுகள் போன்ற சில முன்னெடுப்புக்கள் காணப்பட்டிருந்தன.

30 வருட காலமாக பாரிய விடுதலைப்போர் ஒன்றினை இலங்கை எதிர்கொண்டிருந்தது, அந்த நிலையில் இருந்து நாடு மாற்றமடைந்து வரும் நிலையில் பல எதிர்பார்ப்புகள் காணப்பட்டன. அரசாங்கம் தமிழ் மக்களுக்கான தீர்வினை எவ்வாறு முன்வைக்கப் போகின்றது, இனியாவது மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழக்கூடிய நிலை ஏற்படுமா? இல்லையா? என்பது தொடர்பாக சகல தரப்பினரும் மிகவும் கரிசனையுடன் எதிர் பார்த்துக்காத்திருந்த நிலையில் புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் பூர்வாங்க செயற்பாடுகள், அரசியலமைப்பு சபை உருவாக்கம், அரசியலைமைப்பு வரைபு என அந்த நடவடிக்கைகள் ஒருபுறம் சென்றுகொண்டிருந்தன.

இந்த அரசியலமைப்பு செயற்பாடுகளில் இரு தரப்பினரிடையேயும் குறிப்பாக ஐ.தே.க. மற்றும் சுதந்திரக் கூட்டமைப்பு இடையில் போதிய இணக்கப்பாடுகள் எட்டப்படாத நிலையிலும் அந்த செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணமே இருந்தன. இதனால் ஏதோ ஒரு தீர்வு முன்வைக்கப்படும் என தமிழர் தரப்பு காத்திருக்கும் நிலையும் உருவாகியிருந்தது.

இவ்வாறாக நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கமாவது முழுமையாக இல்லாது விடினும் ஓரளவுக்கேனும் சில காத்திரமான நடவடிக்கைகளை முன்வைப்பார்களென்று எதிர்பார்த்திருக்கும் நிலையில் பாரிய அதிர்ச்சியை தருவதாக இந்த புதிய ஆட்சி மாற்றம் இரவோடிரவாக அரங்கேறியது.

சுதந்திரக்கட்சியினர் கூட்டணியிலிருந்து பிரிந்து செல்வதற்கான நகர்வினை மேற்கொள்வார்களென்பதை ஜனாதிபதியினதும் ஏனைய சுதந்திரக்கட்சியினரதும் நகர்வுகளின் மூலம் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிந்திருந்தாலும் மிகவும் சர்ச்சைக்குரிய முடிவாக பிரதமர் பதவி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படும் எனச் சுற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஏனெனில், இவ்விடயம் தொடர்பாக அவராலோ அல்லது அவரது ஐக்கிய தேசியக் கட்சி முகாமினராலோ அனுமானிக்கப்பட்டிருக்குமாக இருந்தால் அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும். அத்துடன் இந்த தருணத்தில் பிரதமர் காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார் என்பதும் இந்தத் திட்டங்கள் தொடர்பாக அவர் எதனையும் அறியாதிருந்துள்ளார் என்பதனை வெளிக்காட்டுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனாவை நிறுத்துவதற்கானச் செயற்பாடுகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டதோ அதேபோல மிகவும் இரகசியமாக இந்த இராஜதந்திர நடவடிக்கைகள் காணப்பட்டிருந்தன.

அதேபோலவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனாவை ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு திடீரென அறிவித்திருந்தாரோ அதே அறிவிப்பும் அதிர்ச்சியாகவுமே இந்த நடவடிக்கையும் உள்ளது. அத்துடன் இந்தக் கருத்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினரால் பரவலாக மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறப்படும் விடயமாக உள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ” 2015 இல் ரணில் விக்கிரமசிங்க என்ன செய்தார். அவர் எவ்வாறு மைத்திரிபால சிறிசேனாவைப் பொது வேட்பாளராக நியமித்திருந்தாரோ அதே போலவே இன்றைய நியமனமும் இடம்பெற்றுள்ளது என நாமல் ராஜபக்ஷ எம்.பி. இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இந்த விடயத்தில் ஒரு விடயம் மிகவும் தெளிவானதாகக் காணப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க மைத்திரியைப் பொதுவேட்பாளராக அறிவித்திருந்தமை அரசியலமைப்புக்கு முரணான ஒரு விடயமென அந்த சந்தர்ப்பத்தில் எந்தவிதமான சர்ச்சையும் எழுந்திருக்கவில்லை. அத்துடன் அது ஏமாற்றுதல் என்ற வகைப்படுத்தலில் உள்வாங்கப்படுவதாக இருந்தால் ரணில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு செய்த ஏமாற்றாக கருத முடியாது. மைத்திரிபால சிறி சேனா மஹிந்த ராஜபக்ஷவுக்குச் செய்த ஏமாற்றாகவே அதை கருத முடியும்.

மாறாக ரணில் விக்கிரமசிங்க ஜனநாயக விரோதமாகவோ இல்லாது விடில் அரசியலமைப்புக்கு முரணாகவோ அந்த செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கவில்லை.

இன்று இலங்கையில் காணப்படும் அரசியல் குழப்ப நிலையில் அரசியல் பேதமின்றி நியாயமாக சிந்திக்கும் மக்கள் இந்த உண்மை நிலையை உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. யதார்த்தமாகக் கூறுவதாக இருந்தால் பாராளுமன்றப் பெரும்பான்மையை வைத்திருக்கும் தரப்பினை ஒதுக்கி பெரும்பான்மையற்ற உறுப்பினர்களுடன் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு கட்சிக்கு அரசமைப்பதற்கு ஜனாதிபதி மிகவும் சூட்சுமமான முறையில் தன்னிச்சையாக அந்தச் சந்தர்ப்பத்தை வழங்கியமை சகல இலங்கையர்களுக்கும் வெட்கத்தைத் தரும் ஒரு செயலாகவே அமைந்துள்ளதுடன், இது ஒரு அரசியல் நாகரிகமற்ற நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகின்றது.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியால், யார் பெரும்பான்மைப் பலத்தினை பாராளுமன்றில் நிரூபிப்பார்களெனக் கருதப்படுகிறதோ அவர்களுக்கு அரசமைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்க முடியும் என ஜனாதிபதி தரப்பு தமது நிலைப்பாட்டினை நியாயப்படுத்தும் அதேவேளை, 19 ஆவது திருத்தத்தின் பின்னர் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஒரு சில சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என பிரதமர் தரப்பு தெரிவித்துள்ளது.

அதாவது 2015 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டிருந்த அரசியல் திருத்தத்திற்கு அமைவாக பிரதமர் இறந்தாலோ, பதவி விலகினாலோ அல்லது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டாலோ மாத்திரமே ஜனாதிபதி பிரதமரை நியமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த விடயத்தை உயர் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முடியுமானாலும் இன்னமும் எந்தவொரு தரப்பினரும் வழக்குத் தாக்கல் செய்யவில்லை.

அத்துடன் பிரதமரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்வதற்கு எழுத்துமூலம் அறிவிக்க முடியும் என அரசியலமைப்பின் 47 (ஏ) தெரிவிக்கின்றது. இருந்தபோதிலும் இது 19 ஆவது திருத்தம் மூலமாக நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த சட்ட ஒழுங்குகளின் படி தற்போது நாட்டில் காணப்படும் சூழலில் அதாவது சுதந்திரக்கட்சியினர் பிரிந்து சென்றிருக்கும் நிலையில் புதிய பிரதமரை ஜனாதிபதி நியமிக்க வேண்டிய தேவை இல்லை என்றே பிரதமர் தரப்பினரதும் சட்ட வல்லுனர்களினதும் வாதமாக உள்ளது. ஆனால் இந்த சட்ட ரீதியான விளக்கம் குறித்த மயக்கங்களைத் தீர்ப்பதற்கு எவரும் நீதி மன்றங்களை அணுகியிருக்கவில்லை.

இவ்வாறு நீதிமன்றங்களை அணுகாமல் இருப்பது இரு தரப்பும் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இல்லையா? என்ற எண்ணப்பாட்டினைத் தோற்றுவிக்கின்றது.

பாராளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்கள். பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. ராஜபக்ஷ, சிறிசேனா கூட்டணிக்கு 104 உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர் (இந்த பத்தி எழுதப்படும் வரை). ரணிலின் தரப்பில் 99 பேர் உள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் முடிவு இதில் முக்கிய பங்காற்றும் என்று தோன்றுகிறது. கட்சித்தாவல் தடைச் சட்டமும் இங்கு கிடையாது என்பதால், குதிரை பேரத்தின் மூலம் ரணில் கட்சியை உடைக்கும் முயற்சியில் ராஜபக்ஷ கட்சி ஈடுபட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தற்போது அவரது அணி அதிக ஆசனங்களை பெறும் எனப் பரவலாக நம்பப்படுகிறது.

ஒரு வேளை அந்தத் தரப்பினரே ஆட்சியை அமைக்கலாம். ஆனால் மைத்திரியின் செயற்பாட்டையும் மஹிந்த இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டதையும் சர்வதேசமும் மக்களும் எவ்வாறு நோக்குகின்றனர் என்றால் ஆட்சி மாற்றம் நடந்து ஒருவாரத்துக்கும் மேலான காலம் சென்றிருக்கும் நிலையில் சீனா மற்றும் ஓமான் ஆகிய இரு நாடுகளையும் தவிர வேறெந்த நாடுகளும் இந்த அரசை அங்கீகரிக்கவில்லை என்பது வெளிப்படை உண்மையாகும். அமெரிக்கா இந்தியா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தமது வாழ்த்துக்களை இன்னமும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரிவிக்கவில்லை. மாறாக ஜனநாயக பெறுமான்னங்களுக்கும் அரசியலமைப்புக்கும் மதிப்பளிக்குமாறே தெரிவிக்கின்றனர். இது சர்வதேசம் இந்த ஆட்சி மாற்றத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை என்றே அர்த்தப்படுகிறது. இந்த ஆட்சி மாற்றத்தினை அதிகாரத்துக்கான போட்டியாக அவர்கள் நோக்கவில்லை. ஒரு சதி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் நடவடிக்கையாகவே அது கருதப்படுகிறது.

தற்போது நடைபெறும் குதிரை பேரங்கள் மூலமான கட்சித் தாவல்கள் மூலமாக மஹிந்த தரப்பினர் ஆட்சியமைக்கலாம். அதன் பின்னர் எதிரணியினர் தமது பலத்தினைக் காண்பித்து மீண்டும் ஆட்சி அமைக்கலாம். மகிந்த தரப்பு ஆட்சிக்கு வந்தால் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு அது தோற்கடிக்கப்படுவதற்கும் சாத்தியம் உள்ளது. இவ்வாறான குழப்பங்கள் தொடர்ந்தால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல்.

சுதந்திரக் கட்சி கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் பாராளுமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு ஆட்சிஅதிகாரத்தை வழங்கியிருந்தால் அது மிகவும் பொருத்தமான நடவடிக்கையாக அமைந்திருக்கும் என்பதுடன் சர்வதேச உள்ளூர் வரவேற்பையும் கொள்ளும் ஒரு செயற்பாடாக அது அமைந்திருக்கும்.

சுபீட்சமும் அமைதியும் செழுமையும் நிறைந்த இலங்கையை உருவாக்க சர்வதேசம் அழுத்தங்களையும் கட்டமைப்பு அபிவிருத்திக்கான ஆதரவினையும் வழங்கி வரும் நிலையில் அதுவே சகல இலங்கையர்களினதும் அபிலாஷையாகக் காணப்படும் சூழ்நிலையில், மைத்திரிபால சிறிசேனா, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து நடத்தியிருக்கும் முறையற்ற இந்த ஆட்சிமாற்ற அரங்கேற்றம் இலங்கையின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளுக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிட்டது.

அத்துடன் அரசியல் நெருக்கடிகளைத் தொடர்ச்சியாக எதிர்கொண்டுவரும் மாலைதீவு போன்ற பிராந்திய நாடுகளைப் போன்ற நிலை இங்கும் ஏற்படுவதற்கு சாத்தியங்கள் உள்ளது.

இந்த ஆட்சி மாற்றம் இரு விடயங்களை மாத்திரம் மிகவும் ஆணித்தரமாக வெளிப்படுத்தி நிற்கின்றது. அதாவது மைத்திரிபாலவும் மஹிந்தவும் சர்வதேச நன்மதிப்பினை மட்டுமல்லாது உள்நாட்டிலும் அதனை இழந்திருக்கின்றார்கள். அத்துடன் 2015 இல் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எவ்வாறான ஒரு ஏமாற்றத்தை மைத்திரிபால சிறிசேன கொடுத்தாரோ அதற்கான பரிகாரத்தை இதன் மூலம் நிறைவேற்றியிருக்கிறார்.

(Visited 1 times, 1 visits today)