பா.கிருபாகரன், டிட்டோகுகன்

புதிய அரசியலமைப்பொன்றை இயற்றுவதற்கான மக்கள் ஆணை ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கோ 2015 ஆம் ஆண்டு தேர்தல்களுக்கு அமைய கிடைத்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ எம்.பி., அரசியலமைப்புக்கு முரணானது என்ற வகையில் அரசியலமைப்பு (நிர்ணய) சபையை இல்லாதொழித்து, அதன் வழிப்
படுத்தும் குழுவையும் அதன் அறிக்கைகளையும் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் செல்லுபடியற்றவை என்றும் அறிவிக்குமாறும் சபாநாயகரை வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், 20 மில்லியன் பிரஜைகள் வாழும் நாடொன்றில்  ஜனாதிபதிக்கு ஆணை வழங்கிய 6.2 மில்லியன் மக்களின் அபிலாடியை பூர்த்தி செய்வதற்கு புதிய அரசியலமைப்பொன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்று விவாதிப்பது அபத்தமானது என்று சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கையளித்துள்ள கடிதமொன்றில் முன்னாள் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் ஆட்புல எல்லைக்குள் தனி நாடொன்றை உருவாக்குவதற்கான எந்தவொரு நகர்வும் அரசியலமைப்பில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், வழிப்படுத்தும் குழுவினது அறிக்கையின் சில முன்மொழிவுகளானது இலங்கையை பிளவுபடுத்த வழிவகுப்பதில் மறைமுகமாகவும் அதேபோல், நேரடியாகவும் கருவியாக இருக்கக்கூடிய வகையில் அமைந்திருப்பதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பு சபையை செல்லுபடியற்றதொன்றாக அறிவிக்குமாறு வலியுறுத்தி நேற்று திங்கட்கிழமை சபாநாயகர் கருஜயசூரியவுக்கு கையளித்துள்ள கடிதமொன்றிலேயே விஜேதாச ராஜபக்ஷ எம்.பி. இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஆளுந்தரப்பு பிரதம கொறடா கயந்த கருணாதிலக, எதிர்க்கட்சி பிரதம கொறடா தினேஷ் குணவர்தன, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் தினேஷ் குணவர்தன மற்றும் அனைத்து கட்சித் தலைவர்கள், மதத் தலைவர்கள் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

முன்னாள் நீதி அமைச்சராகவும் அதேபோல் வழிப்படுத்தும் குழுவின் உறுப்பினராகவும் இருந்த விஜேதாச ராஜபக்ஷ, தமது கடிதத்தில் மேலும் தெரிவித்திருப்பதானது ;

‘2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெரிவுசெய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன அவரது அதிகாரத்தை பயன்படுத்தி அப்போது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்த அரசாங்கத்தை கலைத்து அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்திருந்தார். அப்போதைய நிலையில் பிரதான எதிர்க்கட்சி 41 உறுப்பினர்களை மட்டுமே கொண்டதாக இருந்தது.

அந்த வகையில், புதிதாக உருவாக்கப்பட்ட அரசாங்கமானது மொத்தமாக 47 உறுப்பினர்களையே கொண்டிருந்தது. 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களை பெற்ற அதேநேரம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 ஆசனங்களை பெற்றது. இந்த ஆட்சி மாற்றத்துடன் வெவ்வேறான இரு கட்சிகளை சேர்ந்த இருவர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை வகிக்க ஆரம்பித்தனர்.

புதிய அரசாங்கம் அமைக்கப் பட்டதிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 95 எம்.பி.க்களில் 43 பேர் கொண்ட அணியொன்று தற்போதைய ஜனாதிபதியை ஆதரித்ததுடன், எஞ்சிய 53 பேர் கொண்ட அணியானது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்தது.

எந்தவொரு சூழ்நிலை அல்லது அரசியல் விதிகளின் கீழோ அது கூட்டு அரசாங்கம் என்று அங்கீகரிக்கப்பட்ட வேண்டியவொன்றே தவிர தேசிய அரசாங்கமொன்றாக கருதப்பட முடியாத நிலையிலும் புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கமானது தேசிய அரசாங்கமாக அடையாளப்படுத்தப்பட்டது.

ஐ.தே.க. இன்னுமொரு அரசியல் கட்சியினூடாக 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு மைத்திரிபால சிறிசேனவே களமிறக்கியிருந்ததுடன், பரந்தளவிலான இணக்கப்பாடுகளுடன் அரசியலமைப்புக்கு 3 பெரும் மாற்றங்களை செய்வதாக அவர் இதன்போது உறுதியளித்திருந்தார்.

ஜனாதிபதி பதவிக்கு அளிக்கப்பட்டுள்ள மிகையான நிறைவேற்று அதிகாரங்களை அகற்றி அவ்வாறான அதிகாரங்களை புதிதாக அமைக்கப்படும் அரசியலமைப்பு பேரவை, சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் அமைச்சரவைக்கு வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சி கொள்கைகளின் அடிப்படையில் பகிர்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார். எனினும், சர்வஜன வாக்கெடுப்பொன்று தேவைப்படாத திருத்தங்களுக்கு மட்டுமே அவ்வாறான திருத்தங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

அரசியலமைப்பு பேரவையொன்றும் புதிய சுயாதீன ஆணைக்குழுக்களும் அமைக்கப்படும் என்றும் நடப்பிலிருந்த ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மையை வலுப்படுத்துவதாக அது அமைந்திருக்கும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

பரந்தளவிலான மோசடிகளுக்கு வாய்ப்பாக அமைந்திருந்த விகிதாசார தேர்தல் முறைமைக்கு பதிலாக தொகுதிவாரி தேர்தல் முறைமை கொண்டு வரப்படும் என்றும் அதன்மூலம் மக்கள் தங்களது தேர்தல் தொகுதிக்கு பொறுப்பான உறுப்பினர்களை தெரிவுசெய்து கொள்ள முடியும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருந்தது.

எனினும், சிறுபான்மையினருக்கு நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதற்காக விகிதாசார முறைமைக்கான வரையறுக்கப்பட்ட ஒதுக்கீடொன்று இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேற்படி முதலாவது இரு மாற்றங்களையும் பூர்த்திசெய்வதில் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களதும் ஆதரவுடன் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

உலகம் முழுவதிலும் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் சாசனங்களை கருத்திற் கொள்ளும் போது, 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குறித்த எந்தவொரு அரசியல் கட்சியும் அதனது தேர்தல் விஞ்ஞாபனங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மக்களிடமிருஷ்நது ஆணையொன்றை பெற்றிருக்கவில்லை என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். அதற்கமைவாக, ஐ.தே.க.வோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோ அவர்களது கொள்கை அடிப்படையிலான விஞ்ஞாபனங்களுக்கு மக்கள் ஆணையொன்றை பெற்றிருக்கவில்லை.

இதேநேரம், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி 6.2 மில்லியன் மக்களால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட ஆணைக்கு மதிப்பளித்து புதிய அரசியலமைப்பொன்றை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்ற விவாதமொன்று தற்போது இடம்பெற்று வருகிறது.

எனினும், கீழ்வரும் காரணங்களுக்காக சாதாரண புத்தியுள்ள எந்தவொரு நபராலும் கூட புரிந்துகொள்ள முடியும் என்பதற்கமைய அதற்கு எந்த சட்ட அடிப்படையோ அல்லது அர்த்தப்படுத்தலோ கிடையாது.

1. ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தின் தலைமையாக இருக்கின்ற போதிலும், அவர் சட்டவாக்கத்தின் தலைமை கிடையாது.

2. பாராளுமன்றத்தின் தலைமையாக பிரதமர் இருக்கின்ற போதிலும், பாராளுமன்ற அலுவல்களின் செயற்பாடுகள் மற்றும் நடத்துதலுக்கான அதிகாரங்கள் சபாநாயகருக்கே அளிக்கப்பட்டுள்ளன.

3. பாராளுமன்றத்தில் அமர்வதற்கும் அவரது விருப்பத்தின் பேரில் பங்குகொள்வதற்கும் தகுதியுடையவராக இருக்கின்ற போதிலும் கூட அவர் பாராளுமன்ற உறுப்பினர் கிடையாது. அதேபோல், அவருக்கு வாக்களிக்கும் உரிமையும் கிடையாது.

4. மிக முக்கியமாக, தற்போதைய ஜனாதிபதி எந்தவொரு அரசியல் கட்சியினதும் தலைவராக களமிறங்கியிருக்கவில்லை. அவர் அரசியல் கட்சியொன்றின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளராகியிருந்த சாதாரண நபரொருவராகவே இருந்ததுடன், அந்த வகையில், அரசியலமைப்பு மாற்றங்களுக்கோ அல்லது சட்ட திருத்தங்களுக்கோ ஆணை கோருவதற்கான உரிமை அவருக்கு கிடையாது. அவரது உரிமையானது நிறைவேற்று அதிகாரங்களை செயற்படுத்துவதற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

5. 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலின் பின்னர் சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் அவர் தலைவராகவிருந்த போதிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டணியின் சார்பில் தெரிவான 95 உறுப்பினர்களில் 43 பேர் கொண்ட அணியொன்று மாத்திரமே அவருக்கு ஆதரவளித்திருந்தது.

6. 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது ஐ.தே.க. மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்ட இரு விஞ்ஞாபனங்களும் திட்டவட்டமான உண்மையொன்றை எடுத்துரைக்கின்றன.

அதாவது, இரு கட்சிகளினதும் கொள்கைகளானது ஒன்றுகொன்று முரணாக காணப்படுவதுடன், அவை இரண்டிற்கும் இடையிலான எந்தவொரு நல்லிணக்கத்தையும் முற்றாக நிராகரிப்பதாகவும் அமைந்துள்ளன.
மேற்கண்ட சூழ்நிலைகளின் பிரகாரம் பார்க்கையில், 6.2 மில்லியன் மக்களின் ஆணையொன்று அரசாங்கத்துக்கு இருப்பதான விவாதமானது வெறும் அனுமானமொன்று மட்டுமே என்பது மாத்திரமின்றி சிறுபிள்ளைத் தனமானதும் கூட. 20 மில்லியன் பிரஜைகள் வாழும் நாடொன்றில் ஜனாதிபதிக்கு ஆணை வழங்கிய 6.2 மில்லியன் மக்களின் அபிலாடியை பூர்த்திசெய்வதற்கு புதிய அரசியலமைப்பொன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்று விவாதிப்பது அபத்தமானது. அரசியலமைப்பு என்பது நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் பொருத்தமான உயரிய விதிகள் தொகுப்பொன்றாகும். இது அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டுமானதல்ல.

அத்துடன், கீழ்வரும் ஏனைய அடிப்படைகளின் பிரகாரம், ஏற்கனவே அமைக்கப்பட்ட அரசியலமைப்பு சபையானது அரசியலமைப்புக்கு முரணானது, சட்டவிரோதமானது மட்டுமல்லாது ஆரம்பத்தில் இருந்தே செல்லுபடியற்றதுமாகும்.

1. நடப்பிலுள்ள அரசியலமைப்பை ரத்துசெய்வதற்கும் புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றுவதற்குமான நடைமுறையொன்றை 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் இரண்டாவது அத்தியாயத்தின் 82 ஆவது உறுப்புரையானது குறிப்பாக வழங்குகிறது. அவ்வாறான அரசியலமைப்பு சட்டமூலமொன்றானது பாராளுமன்றத்தில் சபைக்கு சமுகமளிக்காத உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களது ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன், அரசியலமைப்பின் 85 ஆவது உறுப்புரைக்கமைய சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலமும் அங்கீகரிக்கப்படவும் வேண்டும்.

2. பாராளுமன்றத்தின் சட்டவாக்க நடைமுறையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தலையீடு செய்யக்கூடிய அல்லது செல்வாக்கு செலுத்தக்கூடிய எந்தவொரு நிறுவனம் அல்லது அதிகாரசபையின் உருவாக்கமொன்றை அரசியலமைப்பின் 76 ஆவது உறுப்புரை திட்டவட்டமாக தடுக்கிறது.

3. அரசியலமைப்பின் ஏதேனுமொரு ஏற்பாட்டை யாதேனுமொரு பாராளுமன்ற உறுப்பினர் மீறும் பட்சத்தில் அது பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் போது அளிக்கும் உறுதிமொழி மீதான மீறலாகவே கருதப்படும்.

4. சட்டங்களை இயற்றுவதற்கான பிரத்தியேக அதிகாரங்கள் பாராளுமன்றத்துக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருப்பதுடன், அது நீக்கப்படவோ அல்லது அந்நியப்படுத்தப்படவோ முடியாது. பாராளுமன்றத்துக்கு நிபுணர்களிடமிருந்து உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அதற்கான ஏற்பாடுகள் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட நிலையியற் கட்டளைகளில் வழங்கப்பட்டுள்ளன. 94 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம், பாராளுமன்ற உறுப்பினர்களின் மத்தியில் இருந்து சம்பந்தபட்ட விடயத்தில் திறமைகள் மற்றும் நிபுணத்துவத்தை கொண்ட விடேச தெரிவுக்குழுவொன்றை பொருத்தமான பரிந்துரைகளை முன்வைக்கும் நிமித்தம் நியமிப்பதற்கு சபாநாயகருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

5. புதிய அரசியலமைப்பொன்றை இயற்றுவதற்கு போதுமான ஏற்பாடுகளும் நடைமுறைகளும் அரசியலமைப்பில் வழங்கப்படடுள்ள போதிலும், திட்டமிட்ட வகையில் அரசியலமைப்புக்கு முரணான வகையில் அரசியலமைப்பு சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளமையானது நாட்டில் குழப்பமானதும் அராஜகமானதுமான நிலைமையொன்றை ஏற்படுத்தியுள்ளது. இது தற்போதைய ஜனநாயகம் தொடர்பிலான மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது.

இதேநேரம், இலங்கையின் ஆட்புல எல்லைக்குள் தனி நாடொன்றை உருவாக்குவதற்கு இலங்கைக்கு உள்ளோ அல்லது வெளியிலோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு நபரும் ஆதரவளிக்கவோ, ஊக்குவிக்கவோ, நிதியளிக்கவோ அல்லது பரிந்து பேசவோ கூடாது என்று அரசியலமைப்பின் 157அ(1) உறுப்பரையில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.

எனினும், 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட வழிப்படுத்தும் குழுவின் அறிக்கையின் சில முன்மொழிவுகளானது இந்த நாட்டை பிளவுபடுத்த வழிவகுப்பதில் மறைமுகமாகவும் அதேபோல், நேரடியாகவும் கருவியாக அமையக்கூடும் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நான் கருதுகிறேன்.

மேற்படி சூழ்நிலைகளுக்கு அமைய, 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி நான் உள்ளிட்ட எம்.பி.க்களினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் அமைக்கப்பட்ட இந்த அரசியலமைப்பு சபையை பாராளுமன்றத்தினால் இழைக்கப்பட்ட நல்லெண்ண தவறொன்றென செல்லுபடியற்றதாக்குமாறோ அல்லது அறிவிக்குமாறோ வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இதற்கமைய, வழிபடுத்தும் குழுவையும் அதன் அறிக்கைகளையும் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் செல்லுபடியற்றதென்றும் அறிவிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

vijeyadasa_rajapaksha_thinakkural_14-11-2017
(Visited 21 times, 1 visits today)