தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமையை உருவாக்கும் பணியில் தமிழ் மக்கள் கவனம் செலுத்தவேண்டும். அதற்கு ஈபிஆர்எல்எப் மற்றும் புளொட் ஆகிய இரண்டு கட்சிகளையும் பேரவையிலிருந்து அகற்றவேண்டும்’ என்று வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேரவையின் வடக்கு இணைத் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளது என முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழில் அமைந்துள்ள முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்:

தமிழ் மக்கள் பேரவை தமிழர் அரசியலில் செலுத்தக் கூடிய எதிர்காலப் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு நாங்கள் பேரவையின் இணைத் தலைவர்களான விக்கினேஸ்வரன் ஐயாவுக்கும், மருத்துவ நிபுணர் லக்ஸ்மனுக்கும் மேற்படி கோரிக்கையை எழுத்துமூலம் விடுத்துள்ளோம்.

தமிழ் மக்கள் பேரவைக்குள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, புளொட் ஆகிய கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. புளொட் கட்சி தமிழ் மக்கள் பேரவை தீர்வுத் திட்டம் தயாரித்த போது உத்தியோகபூர்வமாக பேரவைக்குள் அங்கத்துவம் வகித்த போதும் தீர்வுத் திட்டம் தயாரிப்பதில் எந்தவிதத்திலும் பங்களிக்கவில்லை. எழுச்சியுடன் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரள்கின்றார்கள் என்ற வகையில் அரசியல் இலாபம் பெறுவதற்காக மேடையேறிப் பேசினார்களே தவிர, அந்தப் பேரணி ஏற்பாடுகளில் கலந்து கொள்ளவில்லை. அதுமாத்திரமன்றித் தமிழ் மக்கள் பேரவையின் எந்த வேலைத் திட்டங்களிலும் புளொட் பங்கெடுக்கவில்லை.

இலங்கை பாராளுமன்றம் ஒரு அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்ட போது புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக ஆறு உப குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த ஆறு உபகுழுக்களில் ஒரு உப குழுவின் தலைவராகவும் புளொட் அமைப்பின் தலைவர் நியமிக்கப்பட்டார்.

தமிழ் மக்கள் பேரவை ஒரு தீர்வுத் திட்டம் தயாரித்திருந்த நிலையில் புளொட் அமைப்பின் தலைவர் இலங்கை பாராளுமன்றம் ஒரு அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்ட நிலையில் உப குழுக்கள் மூலமான செயற்பாட்டின் காரணமாக ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்கான இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. ஒற்றையாட்சி அரசியலமைப்பின் யோசனைகள் தான் அந்த இடைக்கால அறிக்கையில் வெளிவந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசும் இணைந்து ஒற்றையாட்சி அரசியலமைப்பைத் தமிழ் மக்கள் மீது திணிக்க முற்பட்டார்கள். இதனை நாங்கள் மட்டும் சொல்லவில்லை முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையிலுள்ளவர்கள், பல சட்டத்தரணிகள் ஆகியோர் கூறியிருக்கின்றார்கள்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி, புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டிருந்தார்கள் . இந்த மூன்று கட்சிகளும் மிகத் தெளிவாக ஒற்றையாட்சிக்கு ஆணை கேட்டுத் தான் போட்டியிட்டார்கள். ஆகவே,புளொட் அமைப்பு தமிழ் மக்கள் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென வலியுறுத்தியிருக்கின்றோம். அதுமாத்திரமன்றி ஈ.பி. ஆர்.எல்.எவ் அமைப்பும் வெளியேற்றப்பட வேண்டுமென நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். எனத் தெரிவித்தார்.

(Visited 1 times, 1 visits today)