இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வியாழக்கிழமை புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் பல்வேறு சர்ச்சையான நிலை காணப்பட்டது. இந்நிலையில், நாட்டில் அரசியல் மோதல் நிறைவுக்கு வந்துள்ளதாகவும், தானே தொடர்ந்து பிரதமராக செயற்படப் போவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இளம் உறுப்பினர்களுடன் நேற்று சனிக்கிழமை காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முகம் கொடுத்துள்ள நெருக்கடிகளை புரிந்து கொண்டு செயற்படுமாறு பிரதமர் அவர்களிடம் கேட்டுள்ளார். சுசில் பிரேமஜயந்த உட்பட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் எதிர்க்கட்சிக்கு செல்வதாகவும், எதிர்வரும் வியாழக்கிழமை புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான நிலைப்பாட்டினை கொண்டிருந்த ஐ.தே.க.வின் இளம் உறுப்பினர்களை பிரதமர் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து அமைதி நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை அமைச்சரவை மாற்றத்தின் போது, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்குமாறு ஜனாதிபதியிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஒத்துழைப்பை வழங்குமாறு சில வெளிநாட்டு தூதரகங்கள் ஆலோசனை வழங்கியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(Visited 266 times, 1 visits today)