2015 ஜனவரியில் இந்த நாட்டு மக்கள் தெளிவான ஒரு ஆணையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கியிருக்கின்றார்கள் என்பதை அவருக்கு நேரில் சென்று நினைவுபடுத்திய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அந்த ஆணையை அவர் (ஜனாதிபதி) நிறைவேற்ற வேண்டும் எனவும், அந்த ஆணையை நிறைவேற்றக் கூடிய அரசாங்கம் ஒன்றே அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றார். மக்களுடைய இந்த ஆணைக்கு விரோதமானவர்கள் அரசாங்கத்தில் இருந்தால் அந்த ஆணையை நிறைவேற்ற முடியாது என்பதையும் சம்பந்தன் ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களின் பின்னர் ஐ.தே.க. ஸ்ரீ.ல.சு.க. கூட்டு அரசாங்கத்தில் உருவாகியிருக்கும் முரண்பாடு பாரிய அரசியல் நெருக்கடி ஒன்றை உருவாக்கியிருக்கும் பின்னணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொழும்பு 7 இல் உள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்றுமுன்தினம் இரவு சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், இந்தப் பிரச்சினை குறித்து அவருடன் விரிவான முறையில் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றார்.

நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதிலும், மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் களம் இறக்குவதிலும் முக்கிய பங்காற்றியவர் என்ற முறையில் சம்பந்தன், ஜனாதிபதியுடன் நடத்திய இந்தப் பேச்சுக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. உதவியாளர்கள் எவரும் இன்றியே இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக சம்பந்தனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்தச் சந்திப்பை உறுதிப்படுத்திய அவர் மேலும் தெரிவித்ததாவது;

“”2015 ஜனவரி 8 ஆம் திகதி இந்த நாட்டு மக்களால் அவருக்கு (ஜனாதிபதிக்கு) ஒரு ஆணை வழங்கப்பட்டது. அந்த ஆணை ஜனநாயகத்தை உறுதி செய்வது, சர்வாதிகாரப் போக்கை இல்லாதொழிப்பது, தேசியப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான நிரந்தரமான தீர்வைக் கண்டு, சமத்துவத்தை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது, மனித உரிமைகள் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவது, சட்டம் ஒழுங்கு நிறைவேற்றப்படுவது. சுதந்திரமான
நீதித்துறையை ஏற்படுத்துவது என்பவற்றை உள்ளடக்கியதாகவே இந்த மக்கள் ஆணை அமைந்திருந்தது.

அந்த ஆணையை அவர் நிறைவேற்ற வேண்டும். அந்த ஆணையை நிறைவேற்றக் கூடிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படவேண்டும். அந்த ஆணைக்குத் தடையாக இருந்தவர்கள், அல்லது அதற்கு தடையாக இருப்பவர்கள், அல்லது அதற்குத் தடை போடக்கூடியவர்கள் அரசாங்கத்தில் இருந்தால் அந்த ஆணையை நிறைவேற்ற முடியாது. அதனால், மக்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால் அந்த ஆணை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதைத்தான் என்பதை அவருக்குச் சொன்னேன்.

அத்துடன் தமிழ் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்து ஜனாதிபதித் தேர்தலின் போது பெருவாரியாக அவருக்கு வாக்களித்தார்கள். அந்த ஆணையை அவர் நிறைவேற்றுவார் எனக் கருதியே அவருக்கு தமிழ் மக்கள் அவ்வாறு பெருவாரியாக வாக்களித்தார்கள். அவர்கள் ஏமாற்றப்படக்கூடாது.

அதனால், அந்த மக்கள் ஏமாற்றப்படாமலிருக்கக் கூடிய ஒரு அரசாங்கத்தை அவர் அமைக்கவேண்டும். அதுதான் ஜனாதிபதியிடம் நான் முன்வைத்த முக்கியமான கோரிக்கையாக இருந்தது” எனவும் சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் பிரதிபலிப்பு எவ்வாறிருந்தது எனக் கேட்டபோது, “”திருப்திகரமாக இருந்தது” என மட்டும் சம்பந்தன் பதிலளித்தார்.

(Visited 77 times, 1 visits today)