கம்பஹா மாவட்டம் வத்தளையில் தமிழ் பாடசாலை என்ற நீண்ட கால இழுபறிக்கு ஒரு தீர்வாக, வத்தளையில் அருண் மாணிக்கவாசகம் இந்து வித்தியாலயம் என்ற பெயரில், தேசிய தமிழ் பாடசாலை உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ கணேசன் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்தை, அமைச்சரவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரச கரும மொழிகள் அமைச்சின் சார்பாக மனோ கணேசன் முன்வைத்த இந்த அமைச்சரவை பத்திரத்துக்கு ஜானதிபதி மைத்திரபால சிறிசேன, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், நிதி அமைச்சர் மங்கள சமரவீர, சுற்றுலா அமைச்சர் ஜோன் அமரதுங்க, மலையக புதிய கிராமங்கள் அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோர் தமது ஆதரவுகளை அமைச்சரவையில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தாவது, தமிழ் சமூக முன்னோடி கொடைவள்ளல் மாணிக்கவாசகம் தனது மைந்தன் அருண் பிரசாந்த் பெயரில், கல்வி அமைச்சுக்கு நன்கொடையாக வழங்கியுள்ள காணியிலும் கட்டிடத்திலும் கல்வி அமைச்சு எனது அமைச்சரவை பத்திரத்தின்படி இந்த பாடசாலையை ஜனவரி 2019 முதல் கொண்டு நடத்தும்.

நீண்டகால பிரச்சினையான வத்தளை பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் பிள்ளைகளுக்கான பாடசாலை பிரச்சினையில் ஒளியமுல்லை என்ற இடத்தில் அரசாங்கம் ஒதுக்கியிருந்த காணி தொடர்ந்து இழுபறி பட்டு வந்த நிலையில் கொடை வள்ளல் மாணிக்கவாசகம் சுயமாக முன்வைத்து காணியையும் கட்டிடத்தையும் பாமர பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக கொடையாக வழங்கி ஒட்டுமொத்த சமூகத்துக்கும் முன்மாதிரியாக வழி காட்டியுள்ளார் என நினைக்கிறேன்.

இந்த பாடசாலை ஒரு தேசிய பாடசாலை ஆகும். ஏற்கனவே வத்தளை ஒளியமுல்லை என்ற இடத்தில் ஒதுக்கப்பட்ட காணியில் அமைய இருப்பது மாகாணசபை பாடசாலை ஆகும். எனவே இந்த பாடசாலை தேசிய கல்வி அமைச்சினால் நடத்தப்படும் அதேவேளைஇ ஒதுக்கப்பட்ட ஒளியமுல்லை காணியில் மாகாணசபை தமிழ் பாடசாலை அமைய வேண்டும் என நான் விரும்புகிறேன். இதை தவிர தற்போது நடக்கும் ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம் என்ற கனிஷ்ட பாடசாலையும் வத்தளையில் உள்ளது.

அதிகரித்து வரும் வத்தளை தமிழ் ஜனத்தொகைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் பாடசாலைகள் அவசியம் என நான் எண்ணுகிறேன். இந்த அமைச்சரவை பத்திரத்தை கொண்டு வருவதில் நான் சந்தித்த சவால்களை பற்றி நான் எதிர்காலத்தில் எடுத்து கூறுவேன். இந்நிலையில் இந்த முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கோருகிறேன் என அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)