ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் நியூ வெலிகம பகுதியில் வீதி 10 அடி ஆழத்திற்கு தாழிறங்கியுள்ளது. இதனால் இவ்வீதியின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

நோர்வூட் நியூ வெலிகம பகுதியில் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு மேல் உள்ள பகுதியே இவ்வாறு தாழிறங்கியுள்ளது. இதனால் இப்பகுதியிலுள்ள 5 வீடுகள் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்பகுதியில் மண் சரிவுஏற்பட்டது. இதனால் இங்கு வசித்து வந்த 5 குடும்பங்களை சேர்ந்த 23 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்வீதியின் போக்குவரத்து தற்போது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அமைச்சர் பளனி திகாம்பரம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நிலைமையை அவதானித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோர்வூட் பகுதியில் பொருத்தமான வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நியூ வெலிகம பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வாரத்திற்கு முன்னர் மண் சரிவு ஏற்பட்டது. தற்போது இப்பகுதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதியில் 5 வீடுகளில் வசித்து வந்த மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை மீள்குடியேற்றுவது குறித்து அவர்களுடன் கலந்துரையாடினோம். அவர்களுக்கு 2 தெரிவுகள் உள்ளன. ஒன்று அவர்கள் அரசாங்க காணி வழங்கப்பட்டு வீடமைப்பதற்காக 12 இலட்சம் ரூபா அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வழங்கப்படும், அவ்வாறு இல்லாவிட்டால், அவர்கள் காணியொன்றை கொள்வனவு செய்து வீடொன்றை அமைப்பதற்காக 16 இலட்சம் ரூபா வழங்கும் திட்டம் ஒன்றும் உள்ளது.

இவ்விரண்டு விடயங்கள் தொடர்பாக நாங்கள் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவர்கள் தமது விருப்பத்தை தெரிவித்தவுடன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மூலம் அவர்களது வீட்டு பிரச்சினைகளை நாங்கள் தீர்த்து வைப்போம். தற்போது அவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். இவ்வீதியின் நிலை சற்று பாரதூரமாகவுள்ளது. மழை நின்ற உடனேயே இப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டு வீதியை திருத்துவதுகுறித்து தீர்மானிக்கலாம் என நுவரெலிய அரசாங்க அதிபர் ரோஹன புஷ்பகுமார தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா ஹட்டான் வீதியில் நேற்று சிறிய பாதிப்புக்கள் ஏற்பட்டன. சில பகுதிகளில் வீதிகளில் தாழிறக்கம் ஏற்பட்டது. இப்பாதைக்கு பதிலாக மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தினோம். இவ்வீதி தற்போது மூடப்பட்டுள்ளது.

திருத்த பணிகள் தற்போது இடம்பெறுகின்றன. இப்பாதைக்கு பதிலாக காசல்ரீ நோட்ன் வீதி ஊடாக சென்று மவுசாகலைக்கு சென்று மாற்று பாதைகளை பயன்படுத்தலாம். ஏற்கனவே அறிவித்ததன் பிரகாரம் அபாயம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு அறிவுறுத்தல் தென்பட்டதுடன் உடனடியாக அங்கிருந்து வெளியேறுவது நல்லது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பிரதி பணிப்பாளர் புஷ்பகுமார தெரிவித்தார்.

(Visited 1 times, 1 visits today)