பாலூ நகரின் பலாரோவா பகுதியில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கான முகாமை சுத்தப்படுத்தும் பணியில் இந்திய ராணுவ வீரர்கள்.

இந்தோனேஷியாவில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்குப் பிறகு, இன்னும் மீட்கப்படாமல் அழுகி வரும் உடல்களால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அங்கு மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.

இதுகுறித்து அந்த நாட்டுப் பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளரர் சுடோபோ பூர்வோ நுக்ரோஹோ செவ்வாய்க்கிழமை கூறியதாவது: சுலாவெசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2010-ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் ஆயிரக்கணக்கான உடல்கள் இடிபாடுகளிலும்  சுனாமியால் ஏற்பட்ட சேற்றிலும் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எனினும், நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டு 11 நாள்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் அந்த உடல்கள் மிக மோசமாகவும், அடையாளம் காண முடியாத அளவுக்கும் அழுகியிருக்கும். இதனால் அந்தப் பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடுவோருக்கு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட பாலூ நகரப் பகுதியில் மீட்புப் பணிகள் நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.

நிலநடுக்கம், சுனாமியால் ஏராளமான பொதுமக்கள் புதையுண்டு போன பெடோபோ, பலாரோவாஇ ஜோனோ ஓகே ஆகிய பகுதிகளில், மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டதைக் குறிக்கும் வகையில் அங்கு புதையுண்டவர்களுக்காக இறுதிச் சடங்கு பிரார்த்தனை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

இந்தோனேஷியாவின் தீவுகளில் ஒன்றான சுலாவெசியில் கடந்த மாதம் 28-ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டு, ரிக்டர் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சுலாவெசி மாகாணத் தலைநகரான பாலூவும்  அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் மிகக் கடுமையான பாதிக்கப்பட்டன.

இடிபாடுகளில் இன்னும் மீட்கப்படாமல் உள்ள ஏராளமான உடல்கள் அழுகி வருவதால், அந்தப் பகுதிகளில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)