சவூதி மன்னர் சல்மான் பின் அப்துலஸீஸ், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்.

சவூதி அரசையும், அரச குடும்பத்தினரையும் விமர்சித்து வந்த செய்தியாளர் ஜமால் கஷோகியை கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் காணவில்லை.

துருக்கியிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்குச் சென்ற அவரை அதற்குப் பிறகு யாருமே பார்க்கவில்லை.

இந்த விவகாரத்தால், ஏற்கெனவே துருக்கி – சவூதி அரேபியா இடயே நீறுபூத்த நெருப்பு போல் இருந்து வந்த விரிசல், மேலும் தீவிரமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

காணாமல் போன செய்தியாளரை சவூதி அரேபியா தனது தூதரகத்தில் வைத்து கொன்று விட்டதாக துருக்கி அதிகாரிகள் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டை வீசுகின்றனர்.

ஆனால், அவர் தூதரகத்திலிருந்து வெளியேறிவிட்டதாகவும், அவர் எங்கிருக்கிறார் என்பதை துருக்கிதான் கண்டுபிடித்துத் தர வேண்டும் சவூதி அரேபியா கூறுகிறது. மேலும், துருக்கி அதிகாரிகள் தங்களது தூதரகத்துக்குள் நுழைந்து தாரளாமாக சோதனையிடலாம் என்றும் அந்த நாடு பச்சைக் கொடி காட்டுகிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சவூதி தூதகரத்துக்குள் வைத்து ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் துருக்கி அதிகாரிகள் வெளியிடவில்லை.

சவூதி அரேபியாவும்  தனது தூதரக்கு வந்த பிறகு கஷோகி ஏன் மாயமானார் என்பது குறித்து போதிய விளக்கம் அளிக்கவில்லை.

இதனால் இந்த விவகாரத்தைச் சுற்றியுள்ள மர்மம் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.
சவூதி அரேபிய நாட்டு செய்தியாளரான ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து வெளியேறி லண்டன் சென்றார்.

தற்போது அமெரிக்காவில் வசித்து வந்த அவர்இ அங்கு வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்தார்.

சவூதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும்  அரச குடும்பத்துக்கு எதிராகவும் அவர் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.

இந்தச் சூழலில், துருக்கி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய அவருக்கு, அந்த நாட்டுச் சட்டப்படி சில ஆவணங்கள் தேவைப்பட்டன. அதனைப் பெறுவதற்காகத்தான் அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு இந்த மாதம் 2-ஆம் தேதி சென்றார்.

ஆனால், அதற்குப் பிறகு அவரைக் காணவில்லை.

தூதரகத்துக்குள் அவரை சவூதி அனுப்பிய ஆட்கள் கொன்று விட்டதாகவும்  கருப்பு நிற காரில் அவரது உடலை வெளியே கொண்டு சென்றதாகவும் துருக்கி கூறி வருகிறது.

ஆனால்  சவூதி அரேபியாவோ அந்தக் குற்றச்சாட்டை மிகக் கடுமையாக மறுத்து வருகிறது.
இதனால்  இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது.

இதனால், ஏற்கெனவே சவூதியின் எதிரியான ஈரானுடன் துருக்கி நெருக்கமாகி வருவது போன்ற காரணங்களால் ஏற்பட்ட விரிசல், இந்த விவகாரத்தால் பெரிய அளவில் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், சவூதி அரேபியா மீது துருக்கி சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டின் தன்மை அவ்வளவு மோசமானது.

எனினும், கஷோகியின் கதி என்னவாயிற்று என்ற உண்மை ஆதாரத்துடன் தெரிய வரும்வரை பொறுமையாக இருக்க இரு நாடுகளுமே முடிவு செய்துள்ளதுதான் ஓர் ஆறுதலான விஷயம்.

இந்த இக்கட்டான சூழலில், துருக்கியும், சவூதி அரேபியாவும் திரை மறைவில் நடத்தும் பேச்சுவார்த்தைகளும், விசாரணைக்குப் பிறகு உலகின் பார்வையில் எந்தெந்த உண்மைகளைக் கொண்டு வரலாம் என்று எடுக்கப்படும் முடிவுகளையும் பொருத்தே இந்த விவகாரத்தின் போக்கு இருக்கும்.

அதுவரை, ஜமால் கஷோகி மாயமான விவகாரத்தில் மர்மம் நீடித்துக் கொண்டுதான் இருக்கும்.

இஸ்தான்புலில் உள்ள சவூதி துணைத் தூதரகத்தின் முன்பு குழுமிய செய்தியாளர்கள்.

(Visited 1 times, 1 visits today)