சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கிளாஸிக் திரைப்படங்களை வழங்கிய இயக்குநர் மகேந்திரன் மீண்டும் அவருடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் முதல்முறையாக ரஜினிகாந்துக்கு இப்படத்தில் இசையமைக்கிறார். இதில் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர், மிகப்பெரிய மீசையுடன் தோன்றும் ரஜினியின் 2-ஆவது லுக் ஆகியவை ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுபோன்று படப்பிடிப்பு காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குநர் சசிகுமார் பேட்ட படத்தில் நடிப்பதாக சமீபத்தில் சன் பிக்சர்ஸ் அறிவித்தது.

இந்நிலையில், ரஜினிகாந்த் உடன் ஜானி, முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை உள்ளிட்ட கிளாஸிக் திரைப்படங்களை வழங்கிய இயக்குநர் மகேந்திரன், பேட்ட படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை ரஜினியை இயக்கிய மகேந்திரன் இப்படத்தில் அவருடன் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளார்.

முன்னதாக, அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற தெறி திரைப்படத்தில் இயக்குநர் மகேந்திரன் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் பேட்ட படத்தில் அவருடைய கதாப்பாத்திரம் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)