தொடா் தோல்விகளின் விளைவாக கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அஞ்சலோ மத்தியூஸ் தற்போது ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

இலங்கை கிரிக்கெட் அணி சமீபகாலமாக ஒருநாள் தொடரில் மோசமான தோல்விகளை அடைந்து வருகிறது. தொடா் தோல்விகளின் விளைவால் அந்த அணி தற்போது கடும் விமா்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. தோல்விகளை தவிா்க்க அணியின் கேப்டன்கள் அவ்வபோது மாற்றப்பட்டாலும் அணியின் தோல்விகள் நிலையானதாக இருந்தன.

மேலும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியும் கலந்து கொண்டது. ஆனால் லீக் சுற்றுடன் இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியது. தோல்வியை தொடா்ந்து இலங்கை அணியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து அஞ்சலோ மத்தியூஸ் நீக்கப்பட்டாா்.

டெஸ்ட் அணியின் கேப்டன் சண்டிமால் ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டாா். இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி வீரா்களின் பெயா்கள் கிரிக்கெட் வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பரிந்துரையில் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சலோ மத்தியூஸ் பெயா்கள் இடம்பெறவில்லை. உடல் தகுதியை காரணம் காட்டி அவருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னா் நடைபெறவுள்ள பிட்னஸ் தோ்வில் வெற்றி பெற்று மீண்டும் அணியில் இடம் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)