போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார். மோடியின் திடீர் பயணத்தில் ஆச்சர்யமடைந்த ரயில் பயணிகள் அவருடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.

துவாரகாவில் நடக்கவிருக்கும் சர்வதேச மாநாட்டுக்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் எக்ஸ்போ மையம் திறப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று (செப்டம்பர். 20) துவாரகா சென்றார். அப்போது தவுலா குவான் ரயில் நிலையத்தில் இருந்து துவாரகா வரை 18 நிமிடங்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் மோடி. சாலை வழியாகச் சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதற்காக மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ரயிலில் திடீரென மோடியைக் கண்ட பயணிகள் ஆச்சர்யம் அடைந்தனர். அவர்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டே ரயிலில் பயணம் செய்தார் மோடி. மோடியுடன் பயணம் செய்தவர்கள் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். தென்கொரிய அதிபர் மூன் ஜே கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்தபோது அவருடன் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது…!

(Visited 1 times, 1 visits today)