செப்டம்பர் மாத இறுதியில் நியூயார்க் நகரில் நடைபெற உள்ள ஐ.நா. பொதுக்கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மஹ்மூத் ஷா குரேஷி ஆகியோர் சந்தித்து பேச உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், பாகிஸ்தானின் வேண்டுகோளின்படி, இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் பாக்கிஸ்தானிய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு கூட்டம் நடைபெறும். இந்த சந்திப்பு எப்பொழுது, எந்த நேரத்தில் என்பதை இரு நாட்டின் ஐ.நா.வின் நிரந்தர பிரதிநிதிகள் முடிவு செய்வார்கள்.

இது இரு நாடுகளுக்கு இடையிலான ஒரு மட்டுமே. பேச்சுவார்த்தைகள் அல்ல எனக் கூறினார்.

வெளியுறவு செய்தி தொடர்பாளர் அறிவிப்புக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் ஐ.நா.வில் சந்தித்து பேச வேண்டும் எனக் கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். இந்த கடிதத்தை அடுத்து இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“இரு நாடுகளுக்கும் இடையில் சமாதானத்திற்கான பரஸ்பர முன்மொழியாக இந்த சந்திப்பு இருக்கலாம். விரைவில் சார்க் உச்சிமாநாடு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச்சபையில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு இருநாடுகளுக்கும் முக்கியமானதாக இருக்கலாம்.

(Visited 1 times, 1 visits today)