இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லையில் நிலவும் பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வதற்காக அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து காஷ்மீருக்குள் அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்பதை இந்தியா பிரதான கோரிக்கையாக வைத்து இந்த பேச்சுவார்த்தையை நடத்தி வந்தது.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு பதன்கோட் விமான தளத்துக்குள் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தானுடன் நடத்தி வந்த அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு முழுமையாக முடங்கியது.

இந்த காலக்கட்டத்தில் தான் இந்தியா ஓசையின்றி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருக்கும் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்களை குண்டு வீசி அழித்தது. அதற்கு பழிவாங்கப் போவதாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் அடிக்கடி அச்சுறுத்தியபடி உள்ளனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் கடந்த மாதம் நடந்த தேர்தலில் பிரபல கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். அவர் இந்தியாவுடன் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதி இருந்தார். அதில் அவர், “இருநாட்டு மக்களின் நலன் கருதி அமைதி பேச்சு நடத்துவது அவசியமாகும். நியூயார்க் நகரில் ஐ.நா. சபை கூட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளை சந்தித்து பேச வைக்கலாம்” என்று கூறியிருந்தார்.

இம்ரான்கானின் கோரிக்கை குறித்து பிரதமர் மோடி நேற்று சுஷ்மா சுவராஜுடன் ஆலோசனை நடத்தினார். வெளியுறவுத் துறை அதிகாரிகளுடனும் ஆலோசித்தார்.

நீண்ட ஆலோசனைக்கு பிறகு இம்ரான்கானின் கோரிக்கையை ஏற்க பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் உறுதி செய்தார்.

ஆனால் இரு நாட்டு மந்திரிகளும் சந்தித்து பேசும் இடம், நேரம் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. ஐ.நா. சபை கூட்டம் தற்போது நியூயார்க்கில் நடந்து வருகிறது. அக்டோபர் 5-ந்தேதி வரை பல்வேறு நாடுகளின் அமைப்புகள் சார்பில் கூட்டங்கள் நடக்க உள்ளன.

அடுத்த வாரம் வியாழக்கிழமை (27-ந்தேதி) ஐ.நா. சபையில் சார்க் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதன் பிறகு அடுத்த வார இறுதியில் இரு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேசுவார்கள் என்று தெரிகிறது.

இதற்கிடையே இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று அமைதி பேச்சுவார்த்தையைத் தொடர மோடி சம்மதம் தெரிவித்து இருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி மணீஷ்திவாரி கூறியதாவது:-

பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அடிக்கடி அத்துமீறியபடி உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு கூட நமது எல்லையில் பாதுகாப்புப் படை வீரர் நரேந்தர்சிங்கைஇ பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மிக கொடூரமாக கொலை செய்துள்ளனர். நமது ராணுவ வீரரின் கழுத்து அறுக்கப்பட்டது.

எல்லையில் உருவான அந்த பரபரப்பு இன்னமும் மறையவில்லை. அதற்குள் பாகிஸ்தானுடன் சுமூக பேச்சு நடத்த பிரதமர் மோடி சம்மதித்தது ஆச்சரியம் அளிக்கிறது. இந்த வி‌ஷயத்தில் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தது யார்?

தீவிரவாதத்துக்கு உதவி செய்து கொண்டே பேச்சு நடத்தும் பாகிஸ்தானின் செயலை ஏற்க இயலாது என்றுதான் இந்தியா கொள்கை முடிவு எடுத்திருந்தது. இந்த கொள்கை முடிவை மாற்ற வேண்டிய அளவுக்கு என்ன நடந்தது?

பாகிஸ்தான் நிலையில் தெளிவு இல்லை. அப்படி இருக்கும்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கையை ஏற்க வேண்டிய அவசியம் ஏன்? இந்த விவகாரத்தில் இந்தியாவிடம் மன மாற்றம் ஏற்பட செய்த சக்தி எது என்பதை காங்கிரஸ் தெரிந்து கொள்ள விரும்புகிறது.

இவ்வாறு மணீஷ்திவாரி கூறினார்.

(Visited 1 times, 1 visits today)