தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், வெலிக்கடைச் சிறைச்சாலைக்கும் பரவியுள்ளதாக சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் மோசமான நிலையில் இருப்பதாகவும், இவர்களின் விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும்  இந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.

சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவரான சட்டவாளர் சேனக பெரேரா இதுதொடர்பாக  கருத்து வெளியிடுகையில்,

“அனுராதபுர சிறைச்சாலையில் 8 கைதிகள் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தின் நிலைமை இப்போது புதிய திருப்பத்தை அடைந்துள்ளது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைக்கலாம் என்று கருதி, சிறை அதிகாரிகள், உண்ணாவிரதத்தை முன்னின்று நடத்துபவர்களில் ஒருவரான தில்லைராஜ் என்ற கைதியை, வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றினர்.

ஆனால் தில்லை ராஜ் வெலிக்கடைச் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

அவரைப் போன்று 30 வரையான கைதிகள் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் கூட உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்து கொள்வார்கள்.

அரசாங்கம் இப்போது அனுராதபுர, வெலிக்கடை என்று இரண்டு உண்ணாவிரதப் போராட்டங்களை உருவாக்கியுள்ளது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எட்டு கைதிகளும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஒவ்வொருவரும், வழக்கு விசாரணையின்றி ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளுக்குள் இருக்கிறார்கள்.

தமக்கு துரிதமான புனர்வாழ்வு அளித்து விடுவிக்க வேண்டும் என்று அரசியல் கைதிகள் கோருகின்றனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)