கல்முனை மாநகர சபையில் ஆட்சியமைக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என சுயேட்சைக் குழு அறிவித்துள்ளது.

நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முஸ்லிம் காங்கிரஸ் முன்வந்திருந்தாலும் அது குறித்து பரிசீலிக்க வேண்டிய தேவை இல்லை என சுயேட்சைக்குழுத் தலைவர் எம்.எச்.எம்.நௌஃபர் கூறியுள்ளார்.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரஃப்பின் காலத்தில் கல்முனை பிரதேச சபை நகர சபையாக மாற்றப்பட்டது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவின் பிரகாரம் 40 ஆசனங்கள் கொண்ட கல்முனை மாநகர சபைக்கு சுயேட்சைக்குழு 4 இல் போட்டியிட்ட 22.54 வீத வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 29.66 வீத வாக்குகளைப் பெற்று 12 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி 7 ஆசனங்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 5 ஆசனங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணி 3 ஆசனங்களையும் கல்முனை மாநகர சபையில் பெற்றுள்ளன.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தேசிய காங்கிரஸ், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சு​யேட்சைக்குழு 2 ஆகியன தலா ஒரு ஆசனங்களை தக்கவைத்துக் கொண்டன.

இதேவேளை 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 48.69 வீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் கடந்த 4 ஆம் திகதி சாய்ந்தமருதில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கூட்டம் இடம்பெற மக்கள் எதிர்ப்பு வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 140 times, 1 visits today)