யோ. தர்மராஜ்

அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினராலும் அவர்களின் ஆதரவாளர்களாலும் கொழும்பில் இன்று புதன்கிழமை பாரிய மக்கள் போராட்டமொன்று முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில், அந்தப் போராட்டத்தின் மூலம் தமது மக்கள் பலத்தினை அரசுக்குக் காண்பிக்க எதிரணியினர் கடுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த மக்கள் போராட்டமானது, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக மிகவும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென சட்ட அமுலாக்கல் துறையினர் கடுமையான எச்சரிக்கையினையும் விடுத்துள்ளனர்.

இந்த மக்கள் போராட்டத்தில் பல இலட்சக்கணக்கான மக்கள் எதிரணியினருடன் ஒன்றிணைந்தால் அது எதிரணியினருக்குக் கிடைக்கும் பாரிய வெற்றியாக கருதப்படும் அதேவேளை, அரசாங்கத்தின் தோல்வியாகவே கருதப்படும். அதேநேரம் இந்தப் போராட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொள்ளத் தவறினால் அது அரசாங்கத்தின் பாரிய வெற்றியாக கருதப்படுவதுடன் எதிரணியினருக்கு கிடைத்த தோல்வியாகவே கருதப்படும். இந்த நிலையில், பல இலட்சம் மக்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு எதிரணியினர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் அதேவேளை, அரச தரப்பினரும் இப்போராட்டத்தினை தோற்கடிப்பதற்கான மறைமுகமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் காண்பிக்கப்படும் மக்கள் பலத்தின் மூலமே எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதனை எதிர்வுகூறக்கூடிய நிலை ஏற்படுமென்றும் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் அனைவரையும் கொழும்பில் ஒன்று திரளுமாறு எதிரணியினர் பகிரங்க அழைப்பினை விடுத்திருக்கும் நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் நாமல் ராஜபக்ஷ எம்.பி.யை தலைவராக காண்பிப்பதற்கே இந்த ஆர்ப்பாட்டங்கள், மக்கள் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஆளும் கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

ஆனால், முன்னர் கருத்துத் தெரிவித்திருந்த நாமல் ராஜபக்ஷ எம்.பி. அரசாங்கத்தின் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொண்டு இந்த மக்கள் போராட்டத்தை வெற்றிகரமாக கொண்டு நடத்துவதற்கு தாம் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இந்தப் போராட்டத்தை முன்னிட்டு கொழும்பின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஏற்கனவே அறிவித்திருந்தாலும், இன்று புதன்கிழமை போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைகள் இடம்பெறுமா? இல்லையா? இயல்பு வாழ்க்கை பாதிக்குமா என்பது தொடர்பில் தெளிவற்ற நிலைப்பாட்டில் மக்கள் காணப்படுகின்றனர்.

கொழும்பில் பெருமளவான மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொள்வதாக இருந்தால் மிகவும் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தினை வெற்றிகரமாக நடத்துவதற்கு எதிரணியினர் கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டிருக்கும் அதேவேளை, ஆளும் கட்சியினர் அதனை தோற்கடிக்கும் மறைமுக முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில், இரு கட்சியினருக்குமிடையிலான பலப்பரீட்சை இன்று கொழும்பில் அரங்கேறவுள்ளது.

(Visited 1 times, 1 visits today)